உலக தமிழர் பேரவையின் ஏகாதிபத்திய சார்பு அரசியல். By V. Sivagnanan
உலகத் தமிழர் பேரவையின் (GTF) மூன்றாம் ஆண்டு நிறைவு நிகழ்வு பிரித்தானிய பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் பெப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது. இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைப் போல் (TGTE), 2009 இல் புலிகளின் அழிப்பிற்கு பின்னர் புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவுகளுக்குள் உருவாக்கப்பட்ட அமைப்புகளுள் ஒன்றாகும்.
இதனது தலைவர் S.J இம்மானுவேல் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால ஆதரவாளார். இதற்கும், பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம் மற்றும் ஏனைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அரசியல் பிரிவுகள் போன்றவற்றிற்கும் ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் ஒரு அரசியல் அதிகாரத்தினை வடக்கு கிழக்கில் பெற்று கொள்வது என்ற இலக்கில் வேறுபாடு கிடையாது.
ஜெனீவாவில் நடந்தது முடிந்த ஐக்கிய நாடுகள் சபை மனிதஉரிமை அமர்வில் அமெரிக்க அரசாங்கம் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பானதே இந்த நிகழ்வு. “இலங்கையின் போர்க்குற்ற விவகாரங்கள் மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தங்களை அதிகரிக்கும் வகையில் இலங்கைத் தீவின் சமகால நிலைமைகள் மீதான கவனக்குவிப்பினை ஏற்படுத்துவதே” இம்மாநாட்டின் நோக்கமென உலகத் தமிழர் பேரவை தெரிவித்தது. உண்மையில், பெப்ரவரி 27 நிகழ்ச்சிகள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு தேடும் பிரச்சாரத்தின் ஒரு பாகமாகும்.
கடந்த வருடம் ஜெனீவா சென்ற இதன் தலைவர்கள் இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்" (LLRC) அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் ஏற்றுகொண்டு வரவேற்றனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, 2009 உள்நாட்டுப் போரின் கடைசி மாதங்களில் அரச படைகள் நடத்திய அட்டூழியங்கள் பற்றிய விமர்சனங்களை திசை திருப்புவதற்காக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவால் மே 2010ல் அமைக்கப்பட்டதாகும். இதன் நோக்கம் அரச பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்களையும் மூடி மறைப்பதாகும். யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு அழைப்புவிடப்பட்டவர்களை நோக்குகையில், பேரவையின் ஏகாதிபத்திய சார்புத்தன்மை தெளிவாகின்றது. பிரித்தானிய அரசாங்க கன்சர்வேட்டிவ்-லிபரல் டெமக்ரட் கூட்டணியின் உதவி பிரதம மந்திரி நிக் கிளெக், எதிர் கட்சியான தொழிற் கட்சி தலைவர் எட் மில்லிபான்ட், நோர்வேயின் மந்திரி எரிக் சொல்ஹைம் பேச்சாளர்களுள் உள்ளடங்குகின்றனர்.
இம்மானுவேல், "பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் முன்னணியில் நின்று பிரித்தானியாவினதும், பாராளுமன்றத்தினதும் ஆதரவை வென்றெடுக்க வேண்டும்" என்று பேரவை கோரிக்கை விடுத்ததினை நினைவுபடுத்தினார். இது, பிரித்தானியாவில் உள்ள முதலாளித்துவ கட்சிகளுக்கு தொழிலாளர்களையும், இளைஞர்களையும் அடிபணிய செய்யும் கோரிக்கையாகும். அவர் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளின் தலைமையில் “இலங்கைக்கு மேல் சர்வதேச அழுத்தமும், ஆய்வுகளும் அதிகரிப்பதுடன்” ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுகின்றனர் அத்துடன் ஜனாதிபதி இராஜபக்ஷ மீது பிரதான சக்திகள் நம்பிக்கை இழந்து வருகின்றன” என்றார்.
இதேநிலைப்பாட்டையே, முதலாளித்துவ தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான M.T. சுமத்திரனும் இக்கூட்டத்தில் வலியுறுத்தினார். அவர் “UNHRC எவ்விதமான தீர்மானத்துடன் சேர்ந்தியங்குமாறும், அதன் பரிந்துரைகளையும் நிறைவேற்றுமாறும்” கொழும்பிற்கு அழைப்புவிட்டுள்ளார். இவ் அழைப்பு உலகத் தமிழர் பேரவையினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் மற்றும் இதேபோன்ற குழுக்களினதும் பிற்போக்குத்தனமான திவாலான கொள்கைகளை எடுத்துக்காட்டுகின்றன. இவர்கள் தமிழ் தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலமும் உலகச் சந்தையில் இணைத்துக் கொள்வதன் மூலமும் முதலாளித்துவ முன்னுரிமைகளை பாதுகாத்துக்கொள்ள ஏகாதிபத்தியத்திற்கு உதவ பரிதாபகரமாக முனைகின்றனர்.
பிரித்தானியாவினதும் நோர்வேயினதும் பிரதிநிதிகளின் உரைகள் மேற்கு நாடுகளின் ஏமாற்றுத்தனத்தை எடுத்துக்காட்டின. நிக் கிளெக் தனது உரையில் "பொறுப்புணர்வு, ஒருமைப்பாடு என்ற அடித்தளத்தில் மட்டுமே தீவில் நிரந்தரமான சமாதானம் கட்டி எழுப்பப்பட முடியும். அவர் “யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கழிந்த பின்னரும் நாட்டு மக்களின் விசேடமாக தமிழ் மக்களின் மனிதஉரிமைகள், கலாச்சார அரசியல் உரிமைகள் பாதுகாப்பது தொடர்பாக ஒரு வெளிப்படையான குறைபாடு இருக்கிறது” என குறைப்பட்டார்.
மில்லிபான்ட் "சர்வதேச அமைப்புக்களான ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய அமைப்பு போன்றவை ஜனநாயகத்தின் அடிப்படை முக்கியத்துவம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சியினை வலியுறுத்தும் நேரம் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ இரக்கமற்ற வகையில் போர் நடத்துகையில் மில்லிபான்ட் ஆட்சியில் இருந்தார். இந்தியா உட்பட அமெரிக்கா மற்றும் பிரதான சக்திகள் போன்று அன்றைய தொழிற் கட்சி அரசாங்கமும் கன்சவேர்ட்டிவ் கட்சியும் இந்த யுத்தத்திற்கு தமது பலமான ஆதரவை கொடுத்தவையாகும். இவை தமது நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்து இலங்கை அரசாங்கத்தை வலிமைப்படுத்தின. அவர்கள் இந்த மனித உரிமை விவகாரங்களை சீனாவிலிருந்து விலகி நிற்க கொழும்பிற்கு அழுத்தம் கொடுக்க பயன்படுத்துகின்றன. இந்து சமுத்திரத்திலும் ஏனைய நாடுகளிலும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த குறிப்பாக அமெரிக்கா முனைகின்றது.
இனவாத யுத்தத்தின் 2006-2009 காலப்பகுதியில் மட்டும் பிரித்தானியா இலங்கைக்கு 13.6 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுத தளபாடங்களை விற்பனை செய்துள்ளது. தற்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவலை தெரிவிக்கும் அதே நேரத்தில் 3 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான இராணுவ, இரட்டை பயன்பாட்டு உபகரணங்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் உரிமையினை வழங்கியுள்ளதாக Campaign Against Arms Trade என்ற வலைத் தளம் தெரிவிக்கின்றது.
ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதனூடாக முக்கிய வங்கிகளினதும் நிறுவனங்களினதும் சார்பில் பிரித்தானிய அரசாங்கம் சமூக நிலைமைகளின் மீதும் வாழ்க்கைத் தரங்களின் மீதும் தாக்குதலை நடாத்துகின்றது. உலகரீதியாக பிரித்தானியாவின் பூகோள-அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் ஆதிக்கத்தையும் காலனித்துவ கொள்கைகளையும் ஆதரிக்கின்றது.
2009 இல் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஐரோப்பிய தலைநகரங்களில் போரை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் தற்போது GTF ஆக ஒழுங்கமைக்கப்பட்ட பலர் ஒபாமா, பிரவுண், சார்க்கோசி, மேர்க்கெல் ஆகியோரது உருவப்படங்களையும், “Help Us” என்ற பதாகையையும் காவி, ஏகாதிபத்தியங்கள் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவார்கள் என்ற பிரமைகளையும் விதைத்தனர். இலங்கை இராணுவத்தை பலப்படுத்திய அதே ஏகாதிபத்திய சக்திகளையே இறுதி நிமிடம் வரையும் தமது பாதுகாப்புக்கும் நம்பியிருந்தனர். இந்த வங்குரோத்தான முன்னோக்கு பாரிய படுகொலைகளுக்கு வழிவகுத்தது.
இந்த ஏகாதிபத்திய அரசியலையே உலக தமிழர் பேரவை உட்பட்ட புலம்பெயர் நாடுகளில் அனைத்து புலிகளின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களும் செய்கின்றன. இந்த அரசியலின் தர்க்க ரீதியான முடிவு, லிபியாவின் தேசிய இடைக்கால சபை (NTC), சிரி்ய தேசிய சபை(SNC) மற்றும் சுதந்திர சிரிய இராணுவம் (FSA) ஏகாதிபத்திய நலன்களின் சார்பில் இயங்குவதில் படம் போட்டு காட்டப்படுகின்றது.
1930 களிற்கு பின்னான கூர்மையான இன்றைய பொருளாதார நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியம் முழுமையும் ஜனநாயக உரிமைகள், வாழ்க்கை தரங்கள், இளைப்பாறியோர், தொழில் வாய்ப்புக்கள், கல்வி வசதிகள் மீது பாரிய வெட்டுக்களை உருவாக்கியுள்ளது. ஜனவரி மாதத்து உத்தியோகபூர்வ தரவுகளின்படி 26,2 மில்லியன் பேர் வேலை இழந்திருக்கின்றனர். கிரீஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி போன்ற நாடுகள் அதிகூடிய வேலையற்றோர் வீதத்தினை கொண்டிருக்கின்றன.
இருந்தபோதிலும் GTF, TGTE அல்லது ஏனைய புலம்பெயர் தமிழ் குழுக்கள் சமூக, ஜனநாயக உரிமை மீதான இந்த தாக்குதல்கள் தொடர்பாக ஒரு சொல் கூட பேசுவதில்லை. அல்லது அமெரிக்காவினதும் ஏனைய நாடுகளினதும் இராணுவ கொள்கைகள் தொடர்பாக எந்தவித கண்டனமும் தெரிவிப்பதில்லை. அவர்கள் ஏகாதிபத்திய எசமானர்களுடன் கைகோர்த்து தங்களது இலக்கிற்கு ஆதரவு தேடுகின்றனர்.
இந்த அமைப்புகளின் சீரழிவு, GTF இனது முதலாவது தலைவர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் வடமாகாண ஆளுநரும் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியின் ஆலோசகராக தற்போது பதவி ஏற்றுள்ளதன் மூலம் வெளிப்படையாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பரந்து வாழும் தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் முதலாளித்துவ அரசாங்கங்களில் தங்கி இருக்கும் இந்தக் குழுக்களின் அரசியலை நிராகரித்து தங்களது வர்க்க சகோதரர்களான ஐரோப்பிய தொழிலாளர் பக்கம் திரும்ப வேண்டும். தமிழ் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தினை பொது எதிரியான முதலாளித்துவத்திற்கு எதிராக வளர்ந்து வரும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துடன் இணைத்து ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை வெற்றிகரமான சோசலிச புரட்சி மூலம் உருவாக்க வேண்டும்.
இதே வழியில் ஒரு குட்டி தனிநாட்டினை அமைக்கவோ அல்லது இராஜபக்ஷ அரசுடன் அதிகார பங்கீட்டுக்கு முனையும் இந்த குழுக்களின் அரசியலை நிராகரிக்க வேண்டும். இன வேறுபாடுகளுக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாளர்களின் சர்வதேசிய ஐக்கியத்தினை உருவாக்குவதுடன் தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா ஈழம் சோசலிச குடியரசினை உருவாக்க போராட வேண்டும். இதன் மூலமே அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் இன ஒடுக்குமுறை, இராணுவ ஆக்கிரமிப்பு முடிவிற்கு கொண்டுவர முடியும். இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுகின்றது.
பிரித்தானியாவிலும், ஜேர்மனியிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளும் மற்றய நாடுகளில் உள்ள அதன் ஆதரவு அமைப்புகளும் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடுகின்றன. தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள், மாணவர்களை சோசலிச சமத்துவ கட்சியினை பரந்த தொழிலாளர் கட்சியாக கட்டியெழுப்ப முன்வருமாறு அழைக்கின்றோம்.
0 comments :
Post a Comment