Wednesday, March 27, 2013

பி.பி.சி. வானொலி நிகழ்ச்சிகள் இனி புதிய பண்பலை வரிசையூடாக-பீட்டர் ஹோரக்ஸ்

பி.பி.சி. வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவை மூலம் ஒலிபரப்புவதென்பதை நேற்று(26.03.2013) முதல் பி.பி.சி. இடை நிறுத்திக்கொள்கிறது என பி.பி.சி. உலக சேவையின் இயக்குநர் பீட்டர் ஹோரக்ஸ் வெளியிட்டார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினால் பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சிகள் காரணமின்றி இடையில் தடுக்கப்படுவது மற்றும் வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது போன்றவை தொடர்ந்து நடந்ததை அடுத்து இந்த முடிவுக்கு பி.பி.சி. நிறுவனம் வந்துள்ளது.

இலங்கையில் எமது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்டுவரும் நேயர்களுக்கு இந்த சேவை தரப்படுவதில் ஏற்பட்டிருக்கும் இத்தடை குறித்து நாங்கள் வருந்துகிறோம், ஆனால் எங்களது நிகழ்ச்சிகளை குறிவைத்து இது போன்ற இடைஞ்சல்கள் நடப்பது, அந்த நேயர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாரிய அளவில் மீறுவதான ஒரு செயல். இதை பி.பி.சி. நிறுவனத்தினர் அனுமதிக்க முடியாது என பீட்டர் ஹோரக்ஸ் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பீட்டர் ஹோரக்ஸ் மேலும் கூறுகையில், இது போன்ற நிகழ்ச்சித் தடங்கல்கள் கடந்த வாரம் மார்ச் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடந்த போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் பேசினோம். அவர்கள் எங்களுடன் கொண்டிருக்கும் ஒலிபரப்பு ஒப்பந்தத்தை மீறும் ஒரு செயல் இது என்று அவர்களுக்கு எச்சரித்தோம் ஆனால் மார்ச் 25 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றுமொரு தடங்கல் சம்பவம் நடந்ததால், இந்தச் சேவையை உடனடியாக இடை நிறுத்துவதைத் தவிர பி.பி.சிக்கு வேறு வழிகள் இல்லாமல் செய்து விட்டது என்றார்.

பி.பி.சி.யின் நிகழ்ச்சிகள் எவை பற்றியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு குறிப்பான புகார்கள் இருந்தால், பிரச்சினைகளை எங்களிடம் நேரடியாகக் கொண்டுவரவேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். எங்களால் ஏற்கமுடியாதபடிக்கு ஒலிபரப்பில் நேரடியாக இடைஞ்சல்கள் செய்வது மற்றும் எங்களது நேயர்களை ஏமாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம் என பீட்டர் ஹோரக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது போன்ற நடவடிக்கை ஒன்றை பி.பி.சி. 2009 ஆம் ஆண்டில் அதன் சேவைகள் இடைஞ்சலுக்கு உள்ளான போதும் எடுத்திருந்தது.

இலங்கையில் உள்ள எமது நேயர்கள் இனி எமது நிகழ்ச்சிகளை, சிற்றலை வரிசைகள் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கேட்கலாம் எனக்குறிப்பிட்டார்.

பி.பி.சி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பை நேயர்கள் சிற்றலை வரிசைகள் 25 மீட்டர் பேண்டில், 11965 கிலோஹெர்ட்ஸ், 31 மீட்டர் பேண்டில் 9855 கிலோஹெர்ட்ஸ், 49 மீட்டர் பேண்டில் 6135 கிலோஹெர்ட்ஸ் மற்றும் 41 மீட்டர் பேண்டில் 7600 கிலோஹெர்ட்ஸ் ஆகியவை மூலம் வரும் மார்ச் 30 ஆம் திகதிவரை கேட்கலாம் எனக்குறிப்பிட்டார்.

மேலும் மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் புதிய அலைவரிசைகள் அமுலுக்கு வரும் அப்போது புதிய அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்படும் என தெரிவித்த பி.பி.சி. உலக சேவையின் இயக்குநர் பீட்டர் ஹோரக்ஸ் அதுவரை எமது இணையதளம் வழியாகவும் தமிழோசை நிகழ்ச்சிகளை நேயர்கள் கேட்கலாம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்!

1 comments :

Anonymous ,  March 28, 2013 at 1:11 PM  

Once it was interesting sorry and not now.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com