இலங்கை மனித உரிமை மீறல்களை விசாரிக்கத் தவறியது ஏன்?
யுத்தகாலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. வொஷிங்டனில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நீண்ட அறிக்கை இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினர் சார்பிலோ, அவர்களின் நலன்சார்ந்தோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இவற்றை நிராகரித்துள்ள நிலையில், அந்த அறிக்கையுடன் அமெரிக்கா இணங்கிப் போகிறதா, என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த பற்றிக் வென்ட்ரெல், இந்த நீண்ட அறிக்கையை நாம் ஆராய்ந்தோம். ஒரு நாள் அல்லது அதற்கு முன் அந்த அறிக்கை எமக்குக் கிடைத்தது. ஆனால், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக எமது பலமான கவலைகளை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.
அத்துடன், பாலியல் தாக்குதல்கள் உள்ளிட்ட, இலங்கையில் நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து, இன்று வரை இலங்கை அரசாங்கம் ஒரு முழுமையான நம்பகமான, அல்லது சுதந்திரமான விசாரணைகளை ஆரம்பிக்கவேயில்லை. இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து நாம் உண்மையிலே ஆழமான கவலை கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment