ஆள் அடையாள அட்டை தமிழிலும் வேண்டும்! உயர் நீதிமன்றில் வழக்கு!
தேசிய ஆள் அடையாள அட்டையை சிங்களம் மற்றும் தமிழில் வழங்குமாறு கோரி நேற்று (25) உயர்நீதிமன்றில் ஆரம்ப உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மகரகமையைச் சேர்ந்த ஒருவரினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தனக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை சிங்களத்தில் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தான் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குச் செல்லுமிடத்து பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுப்பதாகவும் மனுதாரர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மொழியில் மாத்திரம் இவ்வாறு ஆவணங்கள் வழங்கப்படுவதனால் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்குச் செல்லும் போது பாதுகாப்பு ரீதியாக பிரச்சினை ஏற்படுகின்றது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ள மனுதாரர், நாடெங்கும் ஒருவர் பயணிப்பதற்குரிய உரிமை மீறப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனால் ஆள் அடையாள அட்டையை சிங்களம் மற்றும் தமிழில் வழங்குமாறு கட்டளையிடுமாறு கோரி மனுதாரர் நீதிமன்றில் கேட்டுள்ளார்.
ஆட்பதிவுத் திணைக்கள பதிவாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் நீதியரசர் ஆகியோர் இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டு, மகரகம கொடிகமுவ பிரசாத் தனஞ்சய இந்த மனுவை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நிமல் காமினி அமரதுங்க, சத்தியா ஹெட்டிகே ஆகிய நீதிபதிகள் குழுவினர் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் மே மாதம் இரண்டாம் திகதி விசாரிக்கப்படும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment