Sunday, March 31, 2013

இந்தியா தோல்வி அடைந்துவிட்டது என மட்டுவில் நையாண்டி செய்த ரணில்!

இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய நிலையான சமாதானத்தையும் அதிகார பகிர்வையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்தியா தோல்வியடைந்து விட்டதாக மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இது ஒரு முக்கியமான தருணம். இன்று நாம் மேற்கொள்கின்ற காரியங்கள் எதிர்காலத்தில் ஒரு அரசியல் மாற்றத்தைத் தீர்மானிக்கும். ஏனெனில் இந்த அரசு விருப்பத்தின் பேரில் தனது அதிகாரங்களைக் கைவிடாது. அதனை நாம் ஏற்படுத்தும் சூழ்நிலையில் இருக்கின்றோம். எனவே வன்முறையற்ற ஓர் ஐக்கிய ஒற்றுமையை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் தான் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

நான் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. எல்லோரும் தவறு விட்டிருக்கின்றோம். நான் ஒன்று கூறினால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் நான் அதைக் கூறியே ஆக வேண்டும். 2005 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பொதுமக்களை விடுதலைப் புலிகளின் தலைவர் வாக்களிக்கச் செல்ல விடாதமையினால் மக்களுக்கு பாரிய ஒரு சிக்கலை உருவாக்கியிருக்கின்றார் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

பிரபாகரனின் வாரிசுகளாக இருந்தவர்கள் இன்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றனர். பிரபாகரனை ஏற்றிச்செல்ல வந்த கப்பலுக்கும் என்னவாயிற்று? எல்லாக் கதைகளும் முடிந்து விட்டன. இப்போதாவது நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாது இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. மற்றையது தற்போது இலங்கையின் பிரச்சனை அந்நிய பிரச்சினையாகிவிட்டது.

சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றைய பெரிய கட்சி ஐ.தே.கட்சி தான் இந்த பின்னனியில் கொள்கைகள் பற்றிதான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் நாம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட வண்ணமே இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  March 31, 2013 at 9:54 PM  

Why Mr.Ranil Wickramasinghe goes to New Delhi at the best of times ?.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com