சமூக மலர்ச்சிக்கு எந்தக்கலை முக்கியம்!
இன்று உலக நாடக தினம். இலக்கியம், கவிதை, இசை, நடனம், ஓவியம் ஆகிய பல கலைகளின் சங்கமமாக விளங்கும் இந்த நாடகக் கலையின் சிறப்புகளை வெளிப்படுத்தி பிரபலமாக அறியத்தரும் விதமாக இன்றைய தினத்தை உலகெங்கும் கொண்டாடுகிறார்கள். நாடகம் என்பது இசை மற்றும் நாட்டிய வடிவங்களின் வாயிலாகவே நீண்ட காலமாக அறியப்பட்டு வந்திருக்கிறது. இசை மற்றும் நடனப் பின்னணியில் கதை சொல்வது என்பது புலன்களை கிளர்ந்தெழச் செய்யும் ஒரு அனுபவமாகவே காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
இதனால் நன்கு பரிச்சயமான தொன்மக் கதைகளும், புராணக் கதைகளும் பலமுறை நிகழ்த்தப்பட்டாலும், அவை எப்படி நிகழ்த்தப்படுகிறது என்பதைக் கண்டு களிக்கவே மக்கள் கூடினர். விடிய விடிய காத்தான் கூத்தையும் மகாபாரத, இராமாயணக் கதைகளையும் சலிக்காமல் திரும்பத் திரும்ப பார்த்தனர். நாட்டுப்புற இசை மற்றும் நடன மரபுகளையே பெரிதும் சார்ந்திருந்த நாடகம், பின்னர் பிரித்தானியரின் வருகையால் படச்சட்ட அமைப்பு மேடை நாடக முறைக்கு வந்தது. அதன் பின்னர் பாதல் ஸர்க்காரின் வீதி நாடகங்கள். அதேபோல பெர்டோல்ட் ப்ரெக்டின் காவியபாணி அரங்கிற்குப் பின்னால் ஒகஸ்டோ போவாலின் கண்ணுக்குப் புலனாகா அரங்கு என நாடக உத்திகள் பலப்பலவாக மாறி வந்துள்ளன.
தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையிலும் கூத்துக் கலைஞர்கள் மக்களின் நாயகர்களாக, இன்றைய திரைப்பட நாயகர்களை விடவும் அதிக மதிப்புடன் வலம் வந்த காலமிருந்தது. போருக்கு முந்திய காலத்திலும், போராட்ட காலத்திலும் கூட இங்கு நாடகங்கள் வெகுவாக நிகழ்த்தப்பட்டதுடன், பெரு வரவேற்பும் பெற்றிருந்தன.
அந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று அவ்வளவாக நாடகங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விரக்தியுற்றிருக்கும் மனங்கள் கலைகளிலிருந்தும் விலகியிருக்கும் அல்லது விலகியிருக்க வேண்டும் என்று வியாக்கியானம் செய்வது மனிதத்துக்கு விரோதமான எண்ணமாகவே இருக்கும். நொந்திருக்கும் மனங்களுக்கு கலைகளின் தேவை மேலும் முக்கியப்படுகிறது என்பதே யதார்த்தம். நம்மை மேலும் மேலும் துக்கமானவர்களாகவும், இழந்தவர்களாகவும், இறுக்கமானவர்களாகவும் நீடித்துக்கொள்வது நமக்குத்தான் நல்லதல்ல. நாம் மீண்டும் வாழ்வதற்காக நம்மைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நம் சமூகம் அயலிலுள்ள சிங்கள சமூகத்தினர் போன்றோ அல்லது ஆபிரிக்க சமூகங்கள் போன்றோ கொண்டாட்டத்தை வெளிப் படுத்துவதில்லை.
இப்போது மேலும் இறுக்கி வைத்துக் கொண்டிருப்பதாகவே தோற்றம் தருகிறது. இந்த சூழலின் இறுக்கத்தை தளர்த்துவதற்கு கலைகள்தான் உதவ முடியும். குறிப்பாக நாடகங்கள் மக்களுக்கு நேரடிக் கொண்டாட்டத்தை வழங்க வல்லன. நாடகம் போடுபவர்கள், பார்வையாளர்கள் என்பதையெல்லாம் மீறி பொதுவெளியில் உரையாடல்கள் திறக்கப்படுவதான இந்நிகழ்வுகள் எங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும். எங்கள் இன்றைய இறுக்கத்தைத் தளர்த்தி வாழும் மனிதர்களாவதற்கான செயற்பாட்டு ஊக்கத்தைத் தரும்.
உலக நாடகதினத்தைச் சாட்டாக வைத்து, நம்மத்தியில் நாடகங்கள் மற்றும் வீதி நாடகங்களுக்கு புது எழுச்சி ஊட்டுவோம். அதற்கான புதிய திட்டங்களைப் புனைவோம். நாடகங்கள் மக்களை ஆறுதல்படுத்தும். சமூகத்தின் இறுக்கம் தளர்த்தி புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தும்.
0 comments :
Post a Comment