பிள்ளையானின் தன்னிச்சையான செயற்பாடுகள் கட்சியை அழிக்கின்றது. சகிக்க முடியாமல் ஒதுங்கினேன். பிரதிப் மாஸ்ரர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளியக்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர் பிரதீப் மாஸ்ரர் என அழைக்கப்படுகின்ற எட்வின் கிருஸ்னானந்தராஜ. இவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஊடகங்களுக்கு பிரதீப் மாஸ்ரர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் கட்சியின் தலைவர் பிள்ளையான் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் அவரின் செயற்பாடுகள் காரணமாக அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாகவும் இந்நிலைமைகளை தொடர்ந்தும் சகித்துக்கொள்ள முடியாமல் தான் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் முழுவிபரம்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினராகிய நான் கடந்த 2004ஆம்ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு இறுதி வரை ஒரு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்( ரி.எம்.வி.பி) போராளியாக, பொறுப்பாளராக, அரசியல் பிரிவாக , பின்னர் மட்டக்களப்பு மாநகர பிரதி மேயராக, மாகாண சபை உறுப்பினராக செயற்பட்டு வந்தேன்.
இதில் கடந்த நான்கு ஆண்டுகளாக கட்சித்தலைவர் என்னை படிப்படியாக ஓரங்கட்டி கட்சியினுள் எனக்கிருந்த அதிகாரங்களை குறைத்து வந்தார். இந்நிலைமையை அவதானித்த நான் பல கட்சிக் கூட்டங்களில் என்னை ஓரங்கட்டும் செயற்பாட்டைக் கைவிடுமாறு பலமுறை வினயமாக வேண்டிக்கொண்டேன். இருந்தும் கட்சித் தலைவர் என்னை ஓரங்கட்டி மக்கள் மத்தியிலிருந்து வெளியேற்றும் செயற்பாட்டை தொடர்ச்சியாக செய்து வந்தார். இதன் உச்சக் கட்டமானது கட்சியினுள் ஒரு புதிய உறுப்பனரைக்கூட இணைத்துக்கொள்ள முடியாத உளவிற்கு கட்சியினுள் எனக்கிருந்த அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது.
இதன் காரணமாக கட்சியின் செயற்பாடுகளில் பெருமளவில் பங்கு கொண்டு காலத்தைக் கடத்த நான் விரும்பவில்லை. இதனால் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மாற்றுவழி இன்றி ரி.எம்.வி.பி கட்சியுடனான எனது செயற்பாடுகளை நானாகவே இடைநிறுத்திக் கொண்டேன்.
கடந்த 2008ம் ஆண்டிற்கு பின்னர் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்வியையே சந்தித்தது. இதற்கான காரணம் தலைவரின் தன்னிச்சையான முடிவுகளேயாகும். இதற்கான முழுப் பொறுப்பையும் கட்சித் தலைவரே ஏற்க வேண்டும் என நான் பல முறை சுட்டிக்காட்டியிருந்தேன். இவ்வாறாக நான் சுட்டிக்காட்டிய விடயங்களே என்னை ஓரங்கட்டுவதற்கு காரணமாய் அமைந்துள்ளது.
நான் மாத்திரமல்ல எனது சகோதரரான ஏ.சி. கைலேஸ்வரராஜா அவர்களும் 2004ம் ஆண்டு முதல் 2012.10.20ம் திகதி வரை கட்சியின் வளர்ச்சிக்காகவும், கட்சிக்காகவும் சுளநலம் பாராமல் செயலாற்றி வந்துள்ளார். அதிலும் குறிப்பாக கட்சியின் பொதுச் செயலாளராக கட்சியின் கட்டுமான பணிகள் வீழ்ச்சியடையக் கூடாது என்ற விடயத்தில் கடுமு; கவனம் எடுத்து கட்சியை வளர்க்கும் பணியில் அவருக்கென்று வரலாற்றில் ஓர் இடமுண்டு என்பதை கட்சித் தலைமைக்கு உணர்த்த விரும்புகின்றேன். இக்கட்சியினை பதிவதற்காக அந்த இக்கட்டான வேளையில், புகையிரத வண்டியில் கொழும்பு சென்று கட்சியினைப் பதிவு செய்திருந்தார் என்பதையும் ரி.எம்.வி.பி கட்சியில் தெரியாதவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
ரி.எம்.வி.பி யில் இருந்து வெளியேற வேணடும் என நாம் தீர்மானித்த பின்னரே கட்சித் தலைமை எம்மை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தது. இதனால் கட்சியின் முடிவு எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த வில்லை என்பதை எம்மை ஏற்றுக் கொண்டவர்களுக்கும், எமது ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வமும் துணிவும் எமக்குள்ளது.
எனவே எதிர்வரும் நாட்களில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளோம். மேலும் ரி.எம்.வி.பி கட்சி சார்பான சொத்துக்களை ஒப்படைக்கும் படி எம்மிடம் கேட்கப்பட்டுள்ளது. ரி.எம்.வி.பி கட்சியே எனது சொத்து. தற்போது அதிலிருந்தும் நாம் நீக்கப்பட்டுள்ளதால் கட்சியிடம் ஒப்படைப்பதற்கு எம்மிடம் எவ்விதமான சொத்துக்களோ, ஆவணங்களோ இல்லை என்பதை கட்சியின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். அத்துடன். எனது சகோதாரர் 2012.10.20ம்திகதி செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த தருணமே கட்சியின் ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஒப்படைத்திருந்தார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
0 comments :
Post a Comment