நுகர்வுக் கலாசார சீரழிவுகளிலேயே மாணவர்கள் மீண்டும் மீண்டும் சிக்குவதாக செய்திகள் வருகின்றன. இன்றைய சூழல் மாணவரும் இளைய சமுதாயத்தினரும் மிகவும் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டிய காலச்சூழல் என்பதை அழுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் இப்போதிருப்பது போல் நுகர்வுக் கலாசார வசதி வாய்ப்புகள் இத்தனை வளர்ந்திருக்கவில்லை.
தவிரவும், இதற்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்த இளைய பருவத்தினருக்கு அரசியலில் புதிய மாற்றங்களை முயன்று பார்க்கக்கூடிய நம்பிக்கையும் சமுதாய நெருக்கடிகளின்பால் கவனம் கொண்டு செயற்பாட்டில் இறங்கவேண்டிய இலட்சிய தூண்டல்களும் இருந்தன. பெரும்பான்மை இளைஞர்கள் இலட்சிய வேகத்தால் உந்தப்பட்டு தங்களது சமுதாயப் பொறுப்புணர்ந்தவர்களாக இயங்கும் நிலை இருந்தது.
இன்றைய இளையோர் வெளிநாட்டுப்பணமும், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஏற்பட்ட பல்வேறுவிதமான நுகர்வுப் பழக்கங்களும், அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு வாழ்க்கை முறையுமாக உள்ளனர் என்று தோன்றுகிறது. எளிதில் சீரழிவுகளின்பால் ஈர்க்கப்படுபவர்கள் அதிகமாக இருப்பதற்கு அதுவே காரணமாக வேண்டும்.
இளைஞர்களும் மாணவர்களும் சிந்திப்பதற்குச் சிலவற்றைச் சொல்லவேண்டும் என்று படுகிறது. எதற்கும் பயன் நோக்கம் ஒன்றிருக்க வேண்டும் என்பதாகவே நாம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறோம். உழைப்பது - பணத்திற்காக உதவுவது - பிறரும் நமக்கு உதவ வேண்டும் என்பதற்காக அன்பு செலுத்துவது - அன்பைப் பெறுவதற்காக என்பதாய் நாம் நினைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவையெல்லாம் நம் இயல்புகள். உழைக்காமல், அடுத்தவனை மதிக்காமல், அன்பு செய்யாமல் எல்லாம் நம்மால் இருக்க முடியாது. கொஞ்சம் முயன்று பார்த்தால் புரிந்துவிடும். அல்லது பிறந்த குழந்தைகளைப் பார்த்தால் தெரிந்துவிடும்.
நம் அடிப்படைக் குணங்கள் இவை. மனிதர்களாக இருத்தல் என்பது இதுதான். ஆனால், அவ்வாறு இயல்பாக நம்மால் செயற்பட முடியாதபடி சமூகச் சூழல் இருக்கிறது. பகையும் வெறுப்பும் வன்முறையுணர்வும் துவேசமும் நம்மில் வண்டி வண்டியாக நாளும் பொழுதும் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பேச்சாலும் எழுத்தாலும் நம்முள் துவேசம் மேலோங்கத் தூண்டப்பட்டு வருகிறது. நம்மை மனித நிலையிலிருந்து கீழிறக்கும் துவேசப் பேச்சுக்களை நாம் அவதானித்து விலக்க வேண்டும். எவர் பேச்சைக் கேட்டும் உணர்ச்சிவசப்பட்டும், மனிதர்களாகிய நமது அடிப்படைக் குணங்களை விட்டுவிடாதிருந்தாலே போதும், அனேக தகராறுகளுக்கு இடமில்லை.
இந்த உலகில் நாம் தனியாக இல்லை. சக மனிதர்களையும் அனுசரித்தே நமது வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் உணர்வில் எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டும். நான், எனது என்று நம்மைக் குறுக்கிக் கொள்வதில் மகிழ்ச்சி இல்லை. பிறரது மகிழ்ச்சி கண்டு மகிழ்ந்தும், மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சி கொண்டும், எங்கள் மனதை விரிவுபடுத்தி விகாசம் கொள்வதிலேயே மனிதவாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது.
ஒரு மனிதனின் முக்கியத்துவம், அவன் மற்றவர்களுக்காகவும் வாழ்ந்ததைக் கொண்டே நிர்ணயமாகிறது. அடிபாடுகளுக்குள் சுருண்டு அவலங்களுக்குள் தீய்ந்தோம் என்று புழுங்கிக்கொண்டிராமல், நமக்காகவும் சமூகத்திற்காகவும் எல்லோர் கனவாகவும் இருக்கும் அமைதி நிறைந்த அழகிய உலகுக்காகவும் இளையபருவத்தினர் கவனம் குவிக்க வேண்டும். நம்மிடம் இல்லாததைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது, நம்மிடம் உள்ளதை வீணடிப்பதாகும். இந்த வாழ்க்கையை வெல்லும் திறமை ஒன்று, நம்மிடமும்தான் இருக்கிறது. அதைக் கண்டுகொண்டு நம்மை மேலுயர்த்துவோம்.
No comments:
Post a Comment