நட்டத்தில் ஓடும் அரசியல் கட்சி வதந்திகளைக் கட்டவிழ்த்துவிடுகிறது - டில்வின் சில்வா
இந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அழிவின் அரைப்பகுதிக்குப் பதில் சொல்ல வேண்டியது ஐக்கிய தேசியக் கட்சியே!
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசாங்கத்திற்குமிடையே உண்மையாக நடந்தேறும் இரகசியங்களை மூடிமறைப்பதற்காக, ஒருபோதும் தோற்றம்பெறாத புதியதொரு முன்னணி பற்றிப் பொய்ப் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா வாராந்தப் பத்திரிகை ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து புதியதொரு முன்னணியை அமைக்கவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பற்றி அந்த வாராந்தரி வினாதொடுத்தபோது, டில்வின் சில்வா ‘வங்குரோத்து அரசியல் கட்சி இவ்வாறான பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அழிவின் அரைப்பகுதிக்குப் பதில் சொல்ல வேண்டியது ஐக்கிய தேசியக் கட்சியே, அந்தக் கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி ஒருபோது கைகோர்க்காது என்றும், தமது கட்சி துன்பத்தில் துவள்வோருக்காக புத்திஜீவிகளைக் கொண்டு முன்னணிக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு ஆயத்தமாகவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்றுவருவதாகவும், வதந்திகளைப் பரப்புவோர் கூடிய சீக்கிரம் உண்மை ஏதென்பதைக் கண்டுகொள்வார்கள் எனவும் பிரதம செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment