அரசியலாகிவிட்ட தமிழ் பத்திரிகைகள்!
தற்போது ஜெனிவா நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 22ஆவது அமர்வு – தமிழ் ஊடகங்களுக்கு செய்தி ஊற்றாகியுள்ளது. ஆனால் சிங்கள ஊடகங்கள் அதனை அவ்வளவாக பொருட்படுத்தியதாக தெரியவில்லை.சில தமிழ் பத்திரிகைகளில் இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட செய்திகளும் முழுப்பக்க கட்டுரைகள் உட்பட பல கட்டுரைகளும் பிரசுரிக்கப்படுகின்றன. குறிப்பாக சகல தமிழ் பத்திரிகைகளிலும் முன் பக்கத்தில் அநேகமாக அரைவாசி அல்லது அதற்கு மேல் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரைப் பற்றிய செய்திகளாகத் தான் காணப்படுகின்றன.
ஆனால் சிங்கள் பத்திரிகைகளில் நாளொன்றுக்கு இந்தக் கூட்டத் தொடரைப் பற்றி ஒரு செய்தி அல்லது இரண்டு தான் பிரசுரிக்கப்படுகின்றன. கட்டுரைகளைப் பொறுத்தவரை சிங்கள பத்திரிகைகளில் இந்த விடயத்தைப் பற்றி வாரத்திற்கு இரண்டு மூன்று கட்டுரைகள் மட்டுமே வெளியாகின்றன.
சிங்கள பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளும் கட்டுரைகளும் பெரும்பாலும் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அத்துமீறல்களைப் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துபவனவாகவே இருக்கின்றன. அதேவேளை அவை மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக பிரேரணையொன்றை கொண்டு வரவிருக்கும் அமெரிக்காவை சாடுகின்றன. பிரேரணையை ஆதரிப்பதாகக் கூறும் நாடுகளையும் சாடுகின்றன.
தமிழ் ஊடகங்கள் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கின்றன. அவை முழுமையாகவே அரச எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டதாகவே காணப்படுகின்றன. இலங்கையில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தின்போது அரச படைகளும் புலிகளும் பாரியளவில் மனித உரிமைகளை மீறியுள்ளதாகவே சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் கூறிவருகின்றன. ஆனால் புலிகள் – மனித உரிமைகளை மீறியதாக அந்நிறுவனங்கள் பொதுவாக கூறிய போதிலும் அவை அச்சம்பவங்களை துள்ளியமாக குறிப்பிடுவதோ அவற்றைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று கூறுவதோ இல்லை.
அரசாங்கத்திற்கு எதிராக ஒரு யுத்தத்தையே தொடர்த்துள்ள சனல் 4 தொலைக்காட்சியும் கூட புலிகளும் மனித உரிமைகளை மீறியதாக தமது ஆவணப் படங்களில் பொதுவாக கூறுகின்றது. புலிகள் – சீறுவர்களை படையில் சேர்த்ததாகவும் மேலோட்டமாக கூறுகின்றது. ஆனால் புலிகளுக்கு எதிரான எவ்வித காட்சியும் அவற்றில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இது அரசாங்கத்தின் சீற்றத்திற்கு காரணமாகியுள்ளது. அதேவேளை புலிகளைச் சார்ந்த தேசிய மற்றும் சர்வதேச அமைப்புக்கள்இ சர்வதேச நிறுவனங்களின் இந்த நிலைப்பாட்டின் காரணமாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கவில்லை. மாறாக அவ்வமைப்புக்களும் விசாரணைகளை கோருகின்றன. புலிகளின் செயற்பாடுகளும் தனித்தனியாக குறிப்பிடப்பட்டு அவற்றைப் பற்றியும் விசாரணை செய்ய வேண்டும் என்று சர்வதேச நிறுவனங்கள் கூறும் நிலை இருந்தால் அவ்வமைப்புக்களும் விசாரணை வேண்டாம் என்றே கூறும்.
0 comments :
Post a Comment