Saturday, March 30, 2013

தென்கொரியாவுடன் போர் தொடங்கிவிட்டது -அணுஆயுதப் போர்வெடிக்கும்

தென்கொரியாவுடன் போர் தொடங்கி விட்டதாக வட கொரியா பிரகடனம் செய்திருக்கிறது. இதனால் கொரிய தீபகற்ப பிரதேசத்தில் போர்ப் பதற்றம் உச்சத்தை அடைந்திருக்கிறது. வடகொரியா- தென்கொரியா இடையேயான பதற்றம் கடந்த அரை நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக நீடித்தே வருகிறது. தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து நிற்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. அதாவது பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ நிலைகளைத் தாக்கும் திறன் தங்களுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது வடகொரியா.

இதைத் தொடர்ந்து 3-வது அணுகுண்டு சோதனையையும் வடகொரியா நடத்தியது. இதனால் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தியது அமெரிக்கா.

அதே நேரத்தில் கொரிய தீபகற்பகப் பகுதியில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மிகப் பிரம்மாண்டமான போர் ஒத்திகையையும் நடத்தி வருகிறது. இப்போர் ஒத்திகையை வடகொரியா கடுமையாக எதிர்த்து வந்தது.

மேலும் நேற்று முன்தினம் அமெரிக்காவின் அதிநவீன அணுகுண்டுகளை வீசக் கூடிய 2 விமானங்கள் தென்கொரியாவின் தீவகப் பகுதி ஒன்றில் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்தது.

இதைத் தொடர்ந்து இன்று வடகொரியா, தென்கொரியாவுடன் போரைத் தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்திருக்கிறது. மேலும் வடகொரியா அரசு, கட்சிகள், அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தென்கொரியாவுடனான அனைத்து வகையிலான ஒப்பந்தங்களும் கைவிடப்படுவதாகவும் இனி போர்க் காலங்களில் என்ன மாதிரியான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதுவே அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தென்கொரியா தொடருமேயானால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை அடைந்திருக்கிறது. இப் போர்ப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று ரஷியா, சீனா ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com