சிங்களவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள்: இலங்கை தூதரின் பிரசாரத்தால் பரபரப்பு
சிங்களவர்களின் பூர்வீகம் வட இந்தியாவே என இலங்கை தூதர் பிரசாட் காரியவாசம் ஊடகம் ஒன்றுக்கு அனுப்பி வைத்தாக கூறப்படும் மின்னஞ்சல் தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, இலங்கைத் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பதற்கு பல்வேறு ராஜதந்திர வழிமுறைகளை மேற்கொண்டிருந்தார் பிரசாட் காரியவாசம்.
அதன் அடிப்படையில் அவர் பல்வேறுபட்ட ஊடகங்களுக்கும் தமது தரப்பு நியாயங்களை தெளிவுபடுத்தி வந்தார். இந்த வரிசையில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அனுப்பி வைத்தாக கூறப்படும் இ மெயில் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் தகவல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அந்த இ-மெயிலில், „12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஓடீசா மற்றும் வட இந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைப்பட வேண்டும்' என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூதரின் இ மெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் நிறுவனத்துக்கு கடந்த 19ம் தேதி இந்த இமெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் மூலம் இந்த இமெயில் டில்லியில் உள்ள மீடியா நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் இவ்வாறானதோர் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதா அதன் உண்மைத்தன்மை என்ன என்கின்றமைக்கு தூதரக வட்டாரங்களிலிருந்து எந்த பதிலும் இதுவரை இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment