ஜெனீவாவில் கூட்டமைப்பின் சதித்திட்டம் என்ன?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா போயிருக்கிறது. எதற்காக என்று யாருக்காவது தெரியுமா? இங்குள்ள தமிழ் மக்கள்தான் அவர்களைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருக் கிறார்கள். இந்த மக்களின் பிரதிநிதிகளாகத்தான் கூட்டமைப்பினர் ஜெனீவா சென்றிருக்கிறார்கள் என்றால், அங்கு போய்ச் சாதித்துவிட்டு வரப்போவது என்ன என்று, போகும் முன்னாவது வாக்குப் போட்ட மக்களுக்குச் சொல்லியிருக்க வேண்டுமல்லவா?
இங்கு அரசை எதிர்த்துச் சவால் விடுவதும் உணர்ச்சிகர வசனங்கள் பேசுவதற்கும் மேலதிகமாக கூட்டமைப்பினர் செய்யும் அரசியல், வருடா வருடம் வரும் இந்த சர்வதேச மாநாடுகளில் எதையோ வெட்டிவிழுத்தி விடுவதாக மக்களுக்குக் கொடுக்கும் நம்பிக்கைதானே? அங்கு போய்ச் செய்யப்போகும் அந்தக் காரியங்களையும் ஏன் அத்தனை இரகசியமாக வைத்திருக்கிறார்கள், யாருக்காவது தெரியுமா? அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரப் போவதாகச் சொல்கிறது, இந்தியா ஆதரிக்கப் போவதாகச் சொல்லப்படுகிறது, இங்கிலாந்து கனடா போன்றவையும் இலங்கையைக் கண்டிக்கின்றன.
அதற்கெல்லாம் அவர்களிடமுள்ள நோக்கம் என்ன, இலங்கையிடம் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதெல்லாம் எல்லோருக்கும் புரிகிறது. அவர்கள் தங்கள் தேவைகளுக்காக மனித உரிமை மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சரி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சாதிக்கப் போவது என்ன? ஜெனீவா மாநாடு முடிந்தவுடன், அங்கிருந்து தீர்வுக்கான உத்தரவாதம் எதையேனும் கொண்டுவரப் போகிறார்களா? அல்லது இவர்களது நிபந்தனைகளுக்கு இலங்கை அரசைச் சம்மதிக்க வைத்து பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான நிலைமையை உருவாக்கிக்கொண்டு வருவார்களா? என்ன தீர்வுக்கு இலங்கை அரசை சம்மதிக்க வைக்க வேண்டுமென்று சர்வதேச நாடுகளின் அழுத்தத்தைக் கோரப் போயிருக்கிறார்கள், யாராவது அறிவீர்களா?
தமிழர்களின் தாயகத்தை மீட்கவும், சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கவும், வடக்கு கிழக்கிலிருந்து படையினரை வெளியேற்றவும், நிலம் பறிபோவதற்கு ஆத்திரப்படவும், தொடர்ந்து மக்களது ஆத்திரத்தை தூண்டிக் கொண்டேயிருக்கவும் உணர்ச்சிகரமான கோஷங்களை எடுத்து வீசியபடி எப்போதும் தயாராயிருக்கிறார்கள், சரி. இதற்கெல்லாம் இங்கே செய்யப்பட வேண்டியது என்ன? அதை எங்காவது சொல்கிறார்களா? அரசாங்கம் தீர்வை வைக்காமல் ஏமாற்றியபடி மேற்குறித்த எல்லாவற்றையும் செய்து எங்களைக் கோபப்படுத்தியபடி இருக்கிறது என்பதா தமிழ்மக்களுக்காக இவர்கள் வைக்கும் அரசியல் கோரிக்கை? சண்டை முடிந்து நாலு வருசமாக இதையே சர்வதேச நாடுகளிடம் போய்ச் சொல்லிக் கொண்டிருந்தால், அவர்களும் தான் என்ன செய்வார்கள்? வாத்தியார் வாத்தியார் பிரம்பை எடுத்து இந்த அரசுக்கு நாலு அடி போடுங்கோ என்றா இப்போதும் சர்வதேசத்திடம் கோரிக்கை வைக்கப் போயிருக்கிறார்கள்?
உங்களது அரசியல் கோரிக்கை என்ன? என்ன மாதிரியான தீர்வுத் திட்டத்தைக் கேட்கிறீர்கள்? தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியலுரிமைகள் எவை என்று சர்வதேச நாடுகளுக்குச் சொல்லியிருக்கிறீர்கள்? இதையெல்லாம் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் சொல்லக் கூடாதா? அப்படியென்ன சிதம்பர ரகசிய அரசியல்? உணர்ச்சிகரமாக மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வென்று கொண்டிருப்பதற்கான கோஷங்களை மட்டுமே இவர்கள் வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்குத் தேவையானதையெல்லாம் - அது அபிவிருத்தியாக இருந்தாலும் சரி, தீர்வாக இருந்தாலும் சரி - அரசாங்கமோ சர்வதேசமோ தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இவர்கள் இங்கு செய்துகொண்டிருக்கும் அரசியல்
0 comments :
Post a Comment