யார் அந்தக்காவிய நாயகன்!
யாழ்.திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் மாபெரும் அரங்க ஆற்றுகை நிகழ்வான காவிய நாயகன் திருப்பாடுகளின் நாடகம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற அரங்கில் நடைபெறவுள்ளது.
தினமும் மாலை 6.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள காவிய நாயகன் நாடக ஆற்றுகை வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை போலவே பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, ஒலி - ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும், அரங்கப் பின்னணியிலுமாக இரு நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் இவ்வாற்றுகையில் பங்கேற்கின்றார்கள்.
பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்ற படைப்பாக அமைகின்ற இவ்வாற்றுகைக்கான ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. திருமறைக்கலாமன்ற இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளாரின் எழுத்துருவில் உருவாகிய காவிய நாயகன் ஆற்றுகைக்கான நெறியாள்கையை திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் மேற்கொண்டுள்ளார்.
மனிதம் என்ற தேடலுக்கு பதில் தரும் வகையில் இறை மகன் இயேசுவின் வாழ்க்கை அமைந்துள்ளது. அவர் வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், கட்டத்தையும், சவாலையும் எவ்வாறு அணுகி மனிதத்தின் உச்சமாகவும், எடுத்துக்காட்டாகவும் விளங்கினார் என்பதைக் கூற முனைகின்றது. காவிய நாயகன் ஆற்றுகை.
நீ மரியசேவியர் அடிகள் தமிழ் மரபுக்குரியதான வகையில் முதன் முதலாக திருப்பாடுகளின் நாடகத்துக்குரிய எழுத்துருக்களை எழுதி 1963ஆம் ஆண்டுலிருந்து இப்படைப்புக்களை அரங்கேற்றி வருகின்றார். அவர் இப்பணியை ஆரம்பித்து இவ்வாண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment