Friday, March 29, 2013

உலகில் ஏராளமானோரை பீடிக்கும் இரண்டாவது பெரும் நோய்!

ஆரோக்கியம் என்பது மனிதனின் உடல் சார்ந்த ஆரோக்கியத்தை மாத்திரம் குறித்து நிற்காது அது அவனது உளரீதியான ஆரோக்கியத்தையும் பெரிதும் வேண்டி நிற்கிறது. உலக சுகாதார நிறுவனம் ஆரோக்கியத்திற்கான வரைவிலக்கனத்தைப் பின்வருமாறு தருகிறது.உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி மனச்சோர்வு 2020ம் ஆண்டளவில் சர்வதேச மட்டத்தில் மிகப் பிரதானமான இரண்டாவது நோயாக விளங்கும் என எதிர்வு கூறியுள்ளது. இந்நோய் வாழ்நாளில் நீண்ட ஆயுட் காலத்தைக் கொண்டு சஞ்சரிக்க கூடிய உலக சனத்தொகையில் 16 வீதத்தினரை வியாபித்துள்ள தற்கொலைக்கு தள்ளிச் செல்கின்ற மிகவும் பயங்கரமும் ஆபத்தும் மிக்க ஒன்றாகும்.

வெகு வேகமாகவும், இலேசாகவும் பரவக்கூடிய இந்நோயின் நூற்று வீதம் அனர்த்தங்கள் நிகழும் பகுதிகளில் அதிகரித்துக்காணப்படும். கால் நூற்றாண்டு காலயுத்தத்தினால் நேரடியான பாதிப்புகளுக்குட்பட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ்மக்களில் பலர் மனச்சோர்வு நோய்க்கு உட்பட்டுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

மனச்சோர்வு இரண்டு வகையாக இனங்காணப்பட்டுள்ளது.

1. பாரிய மனச்சோர்வு
2. எதிர்த்தாக்க மனச்சோர்வு

பாரிய மனச்சோர்வு தற்கொலை எத்தனங்களுக்கும் கூட இட்டுச் செல்லும் எதிர்த்தாக்க மனச்சோர்வு ஒரு பாரிய இழப்பாலோ அல்லது வேறொரு குறிப்பிட்ட காரணத்தினாலோ ஏற்படக்கூடியது.
மனச்சோர்வில் இன்னொரு வகையுமுண்டு. அது உள்ளுறை மனச்சோர்வு என்ற பெயரில் அழை க்கப்படுகின்றது. இது புறக்காரணிகள் எதுவுமின்றியே ஏற்படக் கூடியது.

மனச்சோர்வுக்குட்பட்ட 79 வீதத்தினர் தனிமைப்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணம் உளமனோ நிலையில் ஏற்படும் ஒழுங்கீனமேயாகும். ஒருவரை சமூகத்திலிருந்து தனிமைப் படுத்துவதனாலும் மனச்சோர்வு ஏற்படும். அவ்வாறே மனச்சோர்வு ஏற்பட்டாலும் தனிமைப்படல் ஏற்படும். சமூகத்தில் சுதந்திரமாகவும் திறமையாகவும் செயற்பட தடங்கலாக அமைகிறது.

உளச் சோர்வு கோளாறுகள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. அவற்றுள் சில வருமாறு

1. Major depression–பிரதான உளச்சோர்வு

இந்நோயாளிகள் தூங்கவோ, படிக்கவோ, பணிவிடைகளில் ஈடுபடவோ, உண்ணவோ, மகிழ்ச்சி கரமான நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாதவாறு தடுத்து அவர்களை செயற்பட முடியாதவர்களாக ஆக்குவதும் துன்பத்துக்குரியவர்களாக மாற்றுவதும் இந்நோயின் அறிகுறி களாகும். சிலர் இந்நோயினை ஒரு தடவை அனுபவித்தாலும் மற்றும் சிலர் மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்றனர்.

2. Dysthymia/Mild chronic Depression— தீவிரமில்லாத நீடித்த மனச்சோர்வு

இவ்வகையானது கடினமானதாகவோ, இயலாமைக்கு உட்படுத்துவதாகவோ இருக்காது. ஆயினும் இந்நோய் பிரதான மனச்சோர்வுக்கு இட்டுச் செல்லக்கூடியது. இந்நோய்க்குட்பட்டோர் 2 வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு இந்நோயின் அறிகுறிகளை அனுபவிப்பர்.

3. Psychotic Depression—மனோவியல் மனச்சோர்வு

பிறமை, தவறான நம்பிக்கை மற்றும் உண்மைத் தன்மையிலிருந்து விலகல் என்பவற்றால் மனச்சோர்வு தீவிரமடையும் போது Psychotic Depression – மனோவியல் மனச்சோர்வு ஏற்படுகிறது. உதாரணமாக ஒரு பெண்ணின்ஃஆணின் மீது ஏற்பட்ட வெறுப்பு, அவநம்பிக்கை அவ்வினத்தின் மீதே அதீத வெறுப்பையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

4. Postnatal Depression —குழந்தை பிறப்புக்கு பின்னரான மனச்சோர்வு

இது குழந்தை பெற்றெடுப்புக்குப் பின்னரான ஒரு குறுகிய காலத்துக்குள் பெண்களுக்கு ஏற்படுகின்ற மனச்சோர்வாகும். 10 முதல் 15 வீதம் வரையிலான பெண்கள் குழந்தைப் பெற்றெடுப்புக்குப் பின்னர் இவ்வியாதிக்கு உட்படுகின்றனர். ஆயினும் அவர்களுள் பலர் இந்நோய் பற்றிய விளக்கமின்மையால் இதற்கான சிகிச்சையை மேற்கொள்வதில்லை.

5. Seasonal Affective Disorder — பருவகால மனச்சோர்வு

இது சூரிய வெளிச்சம் குறைந்த குளிர்காலத்தில– மாரி காலத்தில் ஏற்படுகின்ற நோயாகும். ஸ்கன்டிநேவிய நாடுகளில் பல மாதங்களுக்கு இக்கால நிலை நீடிக்கும். கோட– இலையுதிர் காலம் வந்தவுடன் இந்நோய் விலகிச் சென்றுவிடும். இதற்குப் பிரதானமாக வெளிச்ச மருத்துவம் பரிகாரமாகக் கொடுக்கப்படுகிறது.
6. Bipolar Disorder (Manic- Depressive illness ) திடீரென ஏற்படும் மனச்சோர்வு
இது பொதுவான ஒரு நோயல்ல. இது குறித்த நோயாளிகள் திடீர் திடீரென மிகத்தீவிர போக்கை அல்லது மிகக் குறைந்த மட்டத்திலான நடத்தைப் போக்கை வெளிப்படுத்துவர்.

மனச்சோர்வுக்கான காரணங்கள் இன்றும் உறுதியாக அறியப்படவில்லை. இத்துறையில் நிபுணத்துவம் பெற்றோரின் கருத்துப்படி இது பரம்பரை, உயிர் இரசாயன சூழல் தனிப்பட்ட அனுபவங்கள், உளவியல் காரணங்கள் முதலானவற்றின் கூட்டினால் ஏற்படுகின்றது. எம்ஆர்ஐ பரிசோதனையின் மூலம் மனச்சோர்வு உள்ளவர்களின் மூளை அது இல்லாதவர்களின் மூளையைப் பார்க்கிலும் வித்தியாசமாக காணப்படுவதாக தெரியவருகிறது. மூளையுடன் சம் பந்தப்பட்ட சிந்தனை, தூக்கம், மனோநிலை, பசி, நடத்தை முதலானவற்றின் தொழிற்பாடுகள் சாதாரண நிலையில் காணப்படவில்லை.

எவ்வாறாயினும் ஒரு குடும்பத்தில் மனச்சோர்வு காணப்படுமாயின் ஒருவரிடத்தில் மனச்சோர்வு இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. பல்வேறுபட்ட பரம்பரை அலகுகள் சூழலினதும் ஏனைய காரணிகளினதும் செல்வாக்குக்கு உட்படுவதனால் ஆபத்தான மனச்சோர்வு ஏற்படுவதாக பரம்பரையியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குடும்ப அங்கத்தவர் ஒருவரின் இழப்பு, மிகவிருப்பத்துக்குரிய ஒருவரின் சிநேகிதம் துண்டிக்கப்படல், உடலியல் ரீதியிலான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பயங்கரமான ஒரு அனுபவம் மனச்சோர்வுக்கு இட்டுச் செல்லும். பின்வரும் நோய்கள் மனச்சோர்வை ஏற்படுத்தக் கூடியதென கண்டறியப்பட்டுள்ளன.

ஐக்கிய இராச்சியத்தில் மனச்சோர்வு ஒரு பொதுக்கோளாறாக காணப்படுகிறது. இங்கு ஆண்களை விடவும் பெண்கள் இந்நோய்க்கு ஆட்பட்டுள்ளனர். இங்கு 10 வீதமான சிறுவர்கள் ஏதோவொரு நேரத்தில் மனோவியல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உட்படுகின்றனர். வயது முதிர்ந்தவர்களில் ஐந்து பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். இங்கு பெண்களை விடவும் ஆண்கள் மூன்று தடவையாவது தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.

மனச்சோர்வுக்கான அறிகுறிகளை உளவியல், உடலியல் மற்றும் சமூகவியல் சார்ந்த அடையாளங்களாக வகுக்கலாம்.

உளவியல் சார்ந்த அறிகுறிகள்

1. அதீத கவலையிலும், சோகத்திலும் ஆழ்ந்திருத்தல்,
2. தாழ்வு மனப்பான்மை
3. தன்மீது நன்மதிப்பற்ற எண்ணம்
4. வாழ்வில் நாட்டமில்லாமை
5. உதவுவதற்கு யாருமில்லாமல் தான் கைவிடப்பட்டதான உணர்வு
6. அழுது புலம்புவது போன்றதான உணர்வு.
7. குற்றவுணர்வு
8. எளிதில் கோபப்படல்– காரணமின்றிக் கோபப்படல்
9. சகிப்புத் தன்மையற்றுச் செயற்படல்.
10. வாழ்வில் தீவிர அவ நம்பிக்கை கொள்ளல்.
11. தற்கொலை மீதான நாட்டம்.
12. மனம் அமைதியில்லாமல் சஞ்சலப்படல்.

உடலியல் சார்ந்த அறிகுறிகள்

1. உடல் செயற்பாடுகளில் சுறுசுறுப்பில்லாமை.
2. தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் கவனியாது விடல்.
3. சிறு விடயங்களில் கூட கவனம் செலுத்துவது கடினமாக இருத்தல்.
4. பேச முடியாமல் சிரமப்படல்ஃமிகவும் ஆறுதலாக கதைத்தல்.
5. பசியின் அளவு வித்தியாசப்படல் (பசியின் அளவு மிகக் கூடுதலாகவோ, குறைவாகவோ இருத்தல்)
6. பசியின் வேறுபாட்டைப் பொறுத்து உடல் நிறையில் மாற்றம் ஏற்படல்.
7. பாலியல் நாட்டமில்லாமை.
8. முன்பு எளிதாக செய்தவைகளைக் கூட செய்ய முடியாத சத்தியற்ற நிலை.
9. உடல் களைப்படைந்து சோர்ந்து காணப்படல்.
10. பெண்களின் மாதவிடாய்ச் சக்கரத்தில் மாற்றம் ஏற்படல்.
11. அடிக்கடி தலைவலி மற்றும் உடல்வலிகள் ஏற்படல்.
12. நித்திரைக் குழப்பம் ஏற்படல்.

சமூகம் சார்ந்த அறிகுறிகள்

1. பொது விவகாரங்களில் நாட்டமின்மை.
2. பாடசாலை வேலைகளில் மகிழ்ச்சியின்றி ஈடுபடல்.
3. நண்பர்களிடமிருந்து தூர விலகி நடத்தல்.
4. பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டமின்மை
5. குடும்ப வீட்டுப் பிரச்சினைகள் ஏற்படல்.
6. அன்புக்குரியவர்கள் மீதான பற்று அற்றுப்போதல்.

மனம் சோர்ந்து போனால் என்ன செய்யலாம்?

மனச்சோர்வுக்கான அறிகுறிகளிற் சிலவோ அல்லது பலவோ காணப்படும்போது முதலில் ஒரு உள நல ஆலோசகரைச் சந்திக்க வேண்டும். சாதாரண மனச்சோர்வாயின் அவரால் அது கையாளப்படும். தீவிரமான மனச்சோர்வுக்கு உட்பட்டோர் உள மருத்துவ நிபுணர்களின் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுவர்.
கடுமையான மனச்சோர்வுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும் உயர்வான சிகிச்சை முறைகள் தற்போது காணப்படுகின்றன. அவசர சிகிச்சையின் மூலம் அடிக்கடி ஏற்படும் மனச்சோர்வை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மனச்சோர்வு நோயை பல்வேறு சிகிச்சை முறையில் குணப்படுத்த முடியுமாயினும் மிகப் பொதுவான முறையில் மருந்துகள் மற்றும் உளவியல் உரையாடல் முறையில் ((Psychotherapy ) குணப்படுத்த முடியும்.

மனச்சோர்வுக்கெதிரான மருந்துகளை வழங்குவதன் நோக்கம் மூளையில் உள்ள நரம்புக் கடத்திகளை சாதாரண நிலைக்குக் கொண்டு வருவதாகும்.

மேலும் மனச்சோர்வு நோயை குணப்படுத்த தன்னாலான பின்வரும் வழிமுறைகளையும் கையாளலாம்.

மறை எண்ணங்களுக்கு பதிலாக நேரான உறுதியான எண்ணங்களால் மனதை நிரப்பிக்கொள்ளல். நேரத்துக்கு உண்ணவும், உறங்கவும் முயற்சித்தல், மது அருந்துவதை கட்டுப்படுத்தல்.குடும்பப் பிரச்சினைகளை அமைதியான, உசிதமான முறையில் தீர்த்துக்கொள்ளல்,கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளிலிருந்து விடுபட ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாளல்.சமய கிரியைகள், வழிபாடுகள், தியானங்கள் முதலானவற்றில் ஈடுபடுவதோடு பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைக்க வல்ல இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடல்.

புத்தகம் வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தலில் நேரத்தை கழித்தல். தேகப் பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடல், நகைச்சுவை மற்றும் மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து இரசித்தல்.மனதுக்கினிய நண்பர்களிடம் மனம் விட்டுப்பேசுதல். கணினியில் நேரத்தைச் செலவிடல்.கலை இலக்கிய ஆக்கப் பணிகளில் ஈடுபடல்.காலை, மாலை நேரங்களில் மைதானம்– கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபடல்.சித்திரங்கள் வரைவதில் ஆர்வமுள்ளோர் அதில் ஈடுபாட்டைக் கூட்டுதல்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com