மொழி...! மொழி...! மொழி...! -எஸ். ஹமீத்
மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் இரு ஊர்கள் காத்தான்குடியும் ஆரையம்பதியும். காத்தான்குடியில் ஆதம் லெப்பையும், ஆரையம்பதியில் அரியரத்தினமும் வாழ்ந்து வந்தனர். முன்னாளில் மட்டக்களப்பில் ஒரு பாடசாலையில் இருவரும் சேர்ந்து கல்வி கற்கும் காலத்தில் 'நீ இஸ்லாம் -நான் இந்து' என்று, பழுத்த சுயநல அரசியல் வேடர்கள் விரித்த கபட வலைக்குள் இருவரும் வீழ்ந்து, தத்தம் சுயத்தை இழந்து விட்டிருந்தனர்.
தமிழே பேசினாலும் தான் ஒரு முஸ்லிம் என்ற எண்ணம்தான் ஆதம் லெப்பையிடம் மேலோங்கியிருந்தது. தான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்வதை விட, தன்னை ஒரு தமிழன் என்று சொல்வதே அரியரத்தினத்திற்க்குப் பிடித்திருந்தது. ஆக, அவ்விருவரும் ஒரே மொழியைப் பேசினாலும் 'தமிழ்-முஸ்லிம்' என்று தமக்கிடையே வேலிகளைப் போட்டுக் கொண்டனர். இவ்வாறு வேலிகளைப் போட்டுக் கொள்வதற்குத் தேவையான அனைத்தையும் இரு பக்கமும் உள்ள பச்சோந்தி அரசியல்வாதிகள் வாரி வழங்கியிருந்தனர்.
பாடசாலைக் காலம் முடிந்து இருவரும் பிரிந்து விட்டனர். தம்மினப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, குழந்தை, குட்டிகளுடன் வாழத் தொடங்கி விட்டனர். இந்தக் காலத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
ஆடி மாதத்தின் ஒரு நாள்...
சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து 150 மைல் தொலைவில் உள்ள அல்ஜலா என்ற பாலைவனப் பகுதியில் ஓலம் ஒன்று எழுகிறது. ''அல்லாஹ்வே...என்னால் தாங்க முடியவில்லையே...''
வீசும் நெருப்புக் காற்றில் கலந்து வந்த அந்தத் தமிழ் ஓலம், அருகே உள்ள கோதுமை வயலில் வேலை செய்து கொண்டிருந்த சங்கரனின் காதுகளில் விழுகிறது. அவன் நிமிர்ந்து பார்த்தான்.
ஓர் அரபிக்காரனும், இன்னொரு இளைஞனும் பாலைவனத்தின் மணல் பாதையில் நின்று கொண்டிருந்தனர். அந்த இளைஞன் இலங்கையன் அல்லது இந்தியன் போலத் தெரிந்தான். காரை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் தர்க்கித்துக் கொண்டிருந்தனர்.
சங்கரன் அவர்களின் அருகில் சென்றான்.அவர்களைப் பார்த்தான்.
அந்த வாலிபன் அரபியிடம் தமிழில் பேசினான். அரபியோ அவனிடம் அரபியில் கத்தினான்.
வாலிபனின் முகம் வெளுத்திருந்தது. அவனது ஆடைகளையும் தாண்டி உடலின் வியர்வை ஒழுகிக் கொண்டிருந்ததது.
''அல்லாஹ்வே...என்னால் தாங்க முடியவில்லையே...நான் செத்து விடுவேன் போல இருக்கிறதே...'' என்று அந்த வாலிபன் துடிக்க, அரபி ''லெஷ் பீ ..?'' (என்ன..என்னாச்சு..?) என்று அவனை அதட்டிக் கொண்டிருந்தான்.
சங்கரன் அவர்களை அண்மித்தான். ''என்ன விஷயம்...?'' என்று அந்த வாலிபனிடம் தமிழில் கேட்டான்.
''ஓ..நீங்க தமிழா...? இலங்கையா..? முஸ்லிமா..?'' என்று அந்த வாலிபன் தனது முகமெல்லாம் பூரிப்புடன் கேட்டான்.
''அதெல்லாம் இருக்கட்டும்..உங்க பிரச்சினை என்ன..ஏன் இப்பிடி ஓலமிட்டு அழுறீங்க..?'' என்று சங்கரன் திரும்பக் கேட்டான்.
''ஓ...எனக்கு வயித்து வலி தாங்க முடியல...உசிரே போய்டும் போல இருக்கு...ரெண்டு மணித்தியாலத்துக்கு முன்னாடிதான் இலங்கைல இருந்து வந்தேன். ஏர்போர்ட்ல இருந்து இவன் என்னை ஏத்திக்கிட்டு வர்றான்..ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால வயித்து வலி ஆரம்பிச்சுது. இப்போ தாங்க முடியாத அளவுக்கு வலி..எனக்கு அரபி தெரியாது..தெரிஞ்ச ஆங்கிலத்தில சொல்லிப் பார்த்தேன்..அதுவும் இவனுக்கு விளங்கல...வயித்தைக் காட்டி சைகையால சொல்லிப் பார்த்தேன்..அதப் பார்த்துட்டு எனக்குப் பசின்னு நெனைச்சு இவன் வாழைப் பழத்தை எடுத்துத் தாரான்...கடைசில..நான் அழத் தொடங்க, காரை நிப்பாட்டிட்டான்..'' என்ற வாலிபன் '' ஒருக்கா toilet போயிட்டு வந்தா சரியாய்ப் போகும்'' என்றான்.
சவூதிக்கு சங்கரன் வந்து இரண்டு வருடங்கள். ஆதலால் அவனுக்கு அரபி தெரிந்திருந்தது. அவன் அரபு மொழியில் விடயத்தை அரபியிடம் விளக்கி விட்டு, கோதுமை வயலோடு ஒட்டியிருந்த தனது தங்குமிடத்திற்கு அந்த வாலிபனை அழைத்துச் சென்றான்.
அந்த வாலிபன் toilet போய் வந்தான். அவனது முகத்தில் இப்போது ஒரு நிம்மதி தெரிந்தது.
.''ப்ளைட்ல தந்த சாப்பாடு ஒத்துக்கல. அதான் இப்படி ஒரு வலி...இப்போ வலி குறைஞ்சிடுச்சு.'' என்றவன் சொன்னான்.
''எம் பேரு அமீன்..இலங்கைல காத்தான்குடி என்ர ஊரு..வாப்பா பேரு ஆதம் லெப்பை. அது சரி..நீங்க எந்த ஊரு..?''
சங்கரன் சொன்னான்.. ''என்ர பேரு சங்கரன்..உங்க ஊருக்குப் பக்கத்து ஊருதான் நானும்... என்ர அப்பா பேரு அரியரத்தினம்...''
''ரொம்ப சந்தோஷமா இருக்குங்க..இந்த அரபி ஒரு முஸ்லிம். நானும் ஒரு முஸ்லிம்..ஆனா..இப்போ, என்னோட வலியைப் போக்கினது இந்த மதமில்லீங்க... பாஷை! நீங்க மட்டும் இல்லேன்னா, நான் வயித்து வலியால செத்தே போயிருப்பேன்...'' என்ர அமீன் சங்கரனைக் கட்டித் தழுவினான்.
ஒரு வேளை, இந்த இருவருமே இன்றைய நிகழ்வைத் தமது தகப்பனார்களுக்குத் தெரிவிப்பார்கள். அப்பொழுதாவது, ஆதம் லெப்பையும் அரியரத்தினமும் பகைமைக் களம் விடுத்துப் பாசக் குளத்தில் நீந்துவார்களா...?
0 comments :
Post a Comment