பொது பல சேனாவை தடை செய்யட்டாம்! கோருகின்றது பிரித்தானிய ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு
பொது பல சேனா அமைப்பினரின் மதவாத இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து பிரித்தானியாவில் வாழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், உடனடியாக பொது பல சேனா இயக்கத்தை தடை செய்து நாட்டில் சட்டத்தையும், சமூக நீதியையும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தைக் கோரியுள்ளது. அக்கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொது பல சேனாவின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பிரித்தானிய ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு கண்டனம்
இலங்கையில் சமாதானம், ஐக்கியம், ஜனநாயகம், தேசிய நல்லிணக்கம், நாட்டின் பொருளாதாரம் போன்ற நல்லாட்சியின் அடையாளச் சின்னங்களைத் தகர்த்தெறிந்து இனவாதம், மதவாதம், கலவரம், அராஜகம் போன்ற காட்டுமிராண்டித்தனம் நிறைந்த சர்வாதிகாரக் காட்டாட்சிக்கு முயற்சித்து வருகின்ற பொது பல சேனாவின் செயற்பாடுகளை பிரித்தானியாவில் வாழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவ்வியக்கத்தின் அராஜகச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், அரசாங்கமும் இன்னமும் காலந்தாழ்த்தாது உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் எமது அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
அனுராதபுரம் ஸியாரம் உடைக்கப்பட்ட மத வன்முறையுடன் இலங்கையின் வரலாற்றில் மூன்றாவது பயங்கரவாத சக்தியாக பொது பல சேனா என்ற இந்த இயக்கம் உருவாகி இறுதியாக கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பு புறநகர் பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் வியாபார நிலையமான 'பெஸன் பக்' ஸ்தாபனத்தை தாக்கியது வரை இந்த அராஜக இனவாத அமைப்பு நமது நாட்டில் வளர்ச்சியடைந்திருக்கின்றது.
நாட்டின் சட்டம், ஒழுங்கு, ஜனநாயகம் போன்றவற்றை கிஞ்சித்தும் மதிக்காது சீருடை அணியாத பொலிஸ்காரர்களாகச் செயற்பட்டு வரும் இப்பயங்கரவாத பொது பல சேனா அமைப்பின் அச்சுறுத்தல் நிறைந்த இவ்வளர்ச்சியானது, இன்று எமது இலங்கைத் தாயகத்தில் வாழுகின்ற சிறுபான்மைச் சமூகங்களான இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமூகத்தினருக்கு மாத்திரமன்றி பேரின சமூகமான சிங்கள பௌத்த மக்களுக்கு மத்தியிலுள்ள சமூக - அரசியல் - மதத் தலைவர்களையும், மக்களையும் கருத்து வேறுபாடு கொண்ட பல கூறுகளாக்கி முழு நாட்டையுமே மீண்டுமொருமுறை குழப்பமான சூழ்நிலைக்குள் தள்ளியுள்ளது.
மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளிலும் குறிப்பாக எமது நாட்டிற்கு ஆதரவாகவுள்ள முஸ்லிம் நாடுகளிலும், எதிராகவுள்ள மேற்கு நாடுகளிலும் எமது தேசத்தின் நற்பெயருக்கும், ஜனநாயக இருப்புக்கும் மீண்டுமொருமுறை களங்கத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் வகையிலும் இந்த பொது பல சேனாவின் சமகாலத் தீவிரவாதச் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இந்த மூன்றாவது பயங்கரவாத சக்தியின் அராஜக நடவடிக்கைகளை அடக்கியொடுக்குவதற்கு இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்ற வகையில் உடனடியாகவே தகுந்த நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமும் அவசரமுமாகும்.
கடந்த முப்பதாண்டு கால யுத்த அவலங்களின்போது புலம்பெயர்ந்த இலங்கையின் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பொரும்பாலானோர் எமது நாட்டிற்கும், நாட்டின் தலைவருக்கும் எதிரான செயற்பாடுகளில் தமிழ்நாடு தொடக்கம் ஐ.நா. மன்றம் வரை திட்டமிட்டு தீவிரமாக இயங்கி வருகின்ற துரதிஸ்டவசமான நிலையில், இவ்வாறு புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களான நாம் எமது நாட்டிற்கும், நாட்டின் தலைமைத்துவத்திற்கும் விசவாசமாகவும், ஆதரவாகவுமே செயற்பட்டு வந்துள்ளோம்.
இந்நிலையில், தற்போது இந்த பொது பல சேனா எனும் தீவிரவாத அமைப்பின் இனவாத – மதவாதச் செயற்பாடுகளின் விளைவாக நாமும் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து எமது தாய் நாட்டிற்கும், நாட்டின் தலைவருக்கும், அரசாங்கத்திற்கும் ஆதரவாகத் தொடர்ந்தும் செயற்பட முடியாத அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றோம்.
எனவே, இன்னமும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும், ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்கும் எதிராக இந்த பொது பல சேனா எனும் தீவிரவாதச் செயற்பாட்டாளர்கள் மேற்கொள்ளுகின்ற அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு அமைதிப் போக்கில் அங்கீகாரம் வழங்கிக் கொண்டிருக்காது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தீவிரப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஆவன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
இலங்கையில் பௌத்த மதத்தையும், அதன் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பேணிப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் புத்தசாசன அமைச்சு என்றும், கலாச்சார அமைச்சு என்றும் அமைச்சுக்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த அமைச்சுக்களின் மூலமே பௌத்த மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, பொது பல சேனா போன்ற தீவிரப்போக்குடைய கும்பல்களினால் பௌத்த மதத்தின் இருப்பையும், வளர்ச்சியையும், அதன் கலாசார விழுமியங்களையும் நாட்டில் பேணிப் பாதுகாக்க அனுசரணையாக இருப்பதென்பது அரசாங்கத்தின் பலவீனத்தை உலகளாவ அம்பலப்படுத்துவதாகவும், ஏற்றுக் கொள்வதாகவுமே கருதப்படும்.
இலங்கையின் சுதந்திரத்தையும், இறைமையையும், ஆள்புல ஒருமைப்பாட்டையும் கபளீகரப்படுத்துவதற்கு 1970களில் ஜனதா விமுக்தி பெரமுன எனும் பயங்கரவாத அமைப்பு முதல் தடவையாக சிங்களப் பேரின சமூகத்தின் மத்தியில் இருந்து ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு இந்நாட்டு மக்களை அடிமைப்படுத்த முயற்சியெடுத்திருந்தது.
அப்பயங்கரவாத எழுச்சியின்போது, பெரும்பான்மைச் சமூக மக்கள் மத்தியில் இருந்து தோன்றியுள்ள விடுதலை இயக்கம் என்பதையும் கவனத்திற்கொள்ளாது முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் அவர்கள், தனது கட்டுப்பாட்டிலிருந்த இராணுவத்தையும், பொலிசாரையும் கொண்டு அப்பயங்கரவாதிகளை முற்றாக அழித்து நாட்டின் ஐக்கியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நிலை நிறுத்தினார் என்பது எமது தேசத்தின் வீர வரலாறாகும்.
அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் இரண்டாவது பயங்கரவாத சக்தியானது தமிழ்ச் சமூகத்திலிருந்து புறப்பட்டு 1977களில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு இந்நாட்டைக் கூறு போடுவதற்காகப் போரிட்டனர்.
அவர்களது பயங்கரவாதத்தையும், நாட்டைத் துண்டாடித் தனிநாடு அமைக்கும் முயற்சியையும்; இன்றைய அரசுத் தலைவரான ஜனாதிபதி, அவர்களும் நமது நாட்டுப் பிரஜைகளே என்பதையும் கருத்திற் கொள்ளாது அவர்களின் பயங்கரவாதத்தை அழித்தொழித்தார் என்பதும் நாம் கண்டறிந்த வரலாறாகும்.
1948ல் எமது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து முதலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்த போதிலும், எமது நாட்டில் இரண்டு தடவைகள் ஏற்பட்ட எமது சுதந்திர இறைமைக்கு எதிரான பயங்கரவாதப் போராட்டங்களையும் தோற்கடித்து முடிவுக்குக் கொண்டு வந்த பெருமையானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே உள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.
அத்தகைய வரலாற்றைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அதன் தலைமைத்துவத்திற்கும், இன்றைய ஆட்சி இறைமைக்கும் மீண்டுமொரு சவாலாகவே பௌத்த மதத்தினதும், சிங்கள இனத்தினதும் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கப் போவதாகக் கூறிக் கொண்டு பொது பல சேனா எனும் இப்பயங்கரவாத அமைப்பு இன்று எமது தாய் நாட்டில் உருவாகியுள்ளது.
இதன் முறையற்ற தோற்றத்தையும், நேர்மையற்ற நோக்கத்தையும், வன்முறை நிறைந்த செயற்பாடுகளினூடாக அடைந்து வரும் வளர்ச்சியையும் அனைவருமே அவதானித்து வருகின்றனர். இந்நாட்டின் பிரஜைகளான முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மைச் சமூக மக்களை அச்சுறுத்தி, அடக்கியாண்டு, அவர்களின் அடிப்படையான மனித மற்றும் மத உரிமைகளை அடியோடு மறுத்தும், முழுதாகப் பறித்துமே இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள பௌத்த சமூகத்தின் உரிமைகளையும், மத இருப்பiயும் அவர்கள் தக்க வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், முஸ்லிம்களின் பங்களிப்பைக் கொண்டுள்ள அரசாங்கமும், சட்டம் ஒழுங்கும், படை பட்டாளங்களும் எதற்கு என்கிற கேள்வி இன்று எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது கவலைக்குரிய அடைவாகும்.
30 வருட காலமாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக்குக் கொண்டு வந்ததன் பின், நாட்டில் பயங்கரவாதத்தை முறியடித்தது நிறைவேற்றதிகாரமா? இராணுவத் தலைமைத்துவமா? என்ற போட்டியும், கேள்வியும் எழுந்ததை நாம் அறிவோம்.
இவ்வாறே இந்நாட்டில் பௌத்தத்தையும், பௌத்த கலாசாரத்தையும், பௌத்த மத உரிமைகளையும் பேணுவதாகக் கூறிக் கொண்டு, அழிச்சாட்டியமான பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவரும் பொது பல சேனாவின் இந்த மதவாத - இனவாத செயற்பாடுகளின் முடிவிலும் இந்நாட்டில் பௌத்தத்தை நிலை நிறுத்தியது யார்? என ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும், முப்படையினருக்கும், காவல்துறைக்கும் எதிராக இப்பயங்கரவாத பொது பல சோனாக்களின் விரல்களும், கேள்விகளும் நீளும் என்பதையும் நாமனைவரும் முன்னெச்செரிக்கையுடன் நோக்க வேண்டும்.
எனவேதான், பௌத்த மதத்தினதும், சிங்கள இனத்தினதும் பேரால் நமது அழகிய ஸ்ரீலங்காவில் தூண்டப்பட்டுள்ள இக்கொடிய சமூகச் சிதைப்பு முயற்சியை ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கம் உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
இந்நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான இன்றைய அரசியல் அதிகாரத்தையும், அதன் வரலாறுகளையும் 1977ல் முடித்து வைத்தது போல் மீண்டுமொருமுறை முடித்து வைப்பதற்காக நரித்தந்திரமான முறையில் எதிர்க்கட்சிகளாலும், அரசுக்கு எதிரான வெளிநாட்டுப் புலம்பெயர் சக்திகளாலும் நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த மதத்தைக் காக்கும் போர்வையிலான பொது பல சேனாவின் இன்றைய நடவடிக்கைகளையும் பயங்கரவாதச் செயற்பாடுகளாகக் கருதி அவ்வியக்கத்தைத் தடை செய்து, அவர்களின் எதிர்காலச் செயற்பாடுகளை முறியடித்து முடக்குவதற்கும், அனைத்து மக்களும் நாட்டில் அச்சம், பீதியற்ற வகையில் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் வழிகோல வேண்டும் என எமது அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
0 comments :
Post a Comment