Sunday, March 17, 2013

தமிழர்கள் நாம்.. எங்கிருந்து தொடங்குகிறது எமது அழிவு..

பாண்டவர்களின் வனவாசத்தின் போது, ஒரு குளத்தைக் காத்து நிற்கும் யட்சன், தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்படி கேட்க, தங்கள் வீரத்தை நம்பி அவனை அலட்சியப்படுத்தும் வீம, அர்ச்சுன, நகுல, சகாதேவர்களை குளத்தினுள் மூழ்கடித்து விடுகிறான். தம்பியர் யாரும் திரும்பி வராததைக் கண்ட தருமன் அக்குளத்திற்கு வருகிறான். யட்சனின் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்கிறான். அதற்காகத் தருமனை மெச்சிய யட்சன், உன் தம்பியரில் யாராவது ஒருவனின் உயிரைத் திருப்பித் தரலாம். யார் வேண்டும் கேள் என்கிறான்.

அப்படியானால் சகாதேவனைப் பிழைக்கச் செய்யுங்கள் என்கிறான் தருமன். இது என்ன ஆச்சரியம்! உன் சொந்தத் தம்பியரான வீமன், அருச்சுனனை விட்டுவிட்டு சகாதேவனைக் கேட்கிறாயே என்கிறான் யட்சன்.ஆம், எங்கள் தாயான குந்திக்குப் பிறந்தவர்களில் நான் பிழைத்திருக்கிறேன். அதுபோல் மற்ற தாயாரான மாத்ரிக்குப் பிறந்தவர்களில் யாராவது மிஞ்ச வேண்டாமா? அதனால்தான் சகாதேவனைக் கேட்டேன் என்கிறான். இதுகேட்ட யட்சன் மகிழ்ந்து எல்லோரையும் பிழைக்க வைக்கிறான்.

மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கும் இந்த அற உணர்வை நாம் தொலைத்துவிட்டிருப்பதும் நம் அவலங்களுக்குக் காரணம் என்று தோன்றுகிறது. நமது துன்பங்களைப் பற்றியேதான் நாம் யோசிக்கிறோம். அதுமட்டுமல்ல, மற்றவர்களும் நம் துன்பத்தைப் பற்றியே யோசிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். இதனால்தான் நமக்குச் சார்பாகப் பேசாதவர்கள், நம் சார்பு நிலையை எடுக்காதவர்கள் எல்லோரையும் உடனடியாகவே பகையாளிகள் லிஸ்டில் சேர்த்து விடுகிறோம். அவர்களது தேவை என்ன என்றோ அவர்களது பிரச்சினை என்ன என்றோ நாம் கவனத்தில் எடுப்பதில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவையிருக்கும் என்பதை உணர மறுக்கிறோம். அவர்களுக்குத் தேவையிருக்கும் போது அவர்கள் நமக்குச் சார்பாக இருப்பார்கள்; அந்த நிலை மாறுகையில் நம்மைக் கண்டுகொள்ளாமலுமிருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளத் தவறுகிறோம். நம்மைக் கைவிட்டு விட்டதாகக் கோபப்படுகிறோம். எதிரிகளாக்கிக் கொள்கிறோம்.


தவிரவும், குறுகிய நோக்கில் நமது அரசியல் இலாபங்கள் இருக்குமென்றால், அதற்கும் எதிரிகள் எப்போதும் தேவைப் பட்டபடியே இருக்கிறார்கள். இதற்காகவும் எதிரிகளை உருவாக்கியபடியே இருக்கிறோம். இப்போது நம் அரசியல் என்பது ஒருவர் மாற்றி ஒருவரை எதிரியாக்கிக் கொண்டிருத்தல் என்று ஆகிவிட்டது.

ஈழத்தமிழர்கள் இன்று நண்பர்களாகக் கருதிக்கொள்ள யாரிருக்கிறார்கள் என்பதை ஒருகணம் யோசித்துப் பார்ப்பது நல்லது. இந்தப் பரந்த பூவுலகில் இப்போது நம் கடைசி நண்பனாகச் சொல்ல முடிந்திருப்பது யாரை? அமெரிக்காதான் அது என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமா? எப்படி இந்த நிலைக்கு வந்து சேர்ந்தோம் என்று நாம் யோசித்துப் பார்க்க மாட்டோமா? சரி, அமெரிக்காதான் நண்பன் என்றால் அந்த நாடு சொல்கிறபடி நம்மால் நடந்து கொள்ள முடியுமா? நமக்கு யார் சொல்லும் நியாயத்தை நாம் சரி என்று எடுத்துக் கொள்வோம்? நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பிழை என்பதுதான் நம்முடைய நியாயமா?

உலகத்தை விட்டுவிடுவோம். நம்முடைய சரியை சரி என்று சொல்லக் கூடிய, இந்த நாட்டிலுள்ள ஏனைய தரப்பு மக்களுடன் நாம் பேசினோமா? நம்முடைய சரியை நிறுவுவதற்கான பயணத்தை நாம் எங்கிருந்து தொடங்குவது?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com