Friday, March 29, 2013

உலமாக்கள் முஸ்லிம் சமுதாயத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்! - அஸாத் ஸாலி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஹலால் சான்றிதழ் வழங்கியதன் மூலமும், ஹலாலிலிருந்து நீங்கிக் கொண்டதன் மூலமும் முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்துள்ளது என, கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸாத் ஸாலி குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் போது, தான் என்றும் உணவாகக்கொண்டவை ஹலால் உணவுகளே! இந்நாட்டு உணவு வகை பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது ஹலால் சான்றிதழ் அவசியமாகின்றது என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து குறிப்பிடும்போது,

‘நாங்கள் ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு ஏலவே முழுமையாக ஹலால் சான்றிதழ் வழங்குவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டோம். ஏன் என்றால் இந்நாட்டு முஸ்லிம்களாகிய நாங்கள் என்றும் சாப்பிட்டவை ஹலாலானவை. செய்தவையும் ஹலாலானவையே. அதனால் எங்களுக்கு இதில் எந்தப் பிச்சினையும் கிடையாது.

நான் ஒருபோதும் இந்தப் பிளவுகள் வெடித்தது பொது பல சேனா இயக்கத்தினால் எனச் சொல்ல மாட்டேன். ஆயினும், இந்நாட்டு ஆட்சி பீடத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்த நாள்தொட்டு இந்த ஹலாலை இல்லாமற் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவது, அன்றிலிருந்து இன்றுவரை அவரது பிள்ளைகள், அவரது தம்பி இதனைப் பின்பற்றுகிறார்கள். அதற்காக வேறொரு இயக்கத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தப் பிரச்சினையை அரசாங்கத்தால் தீர்க்க முடியாதாயின், இதற்காக பொதுபல சேனா இயக்கத்தைப் இதற்காகப் பயன்படுத்துவதாயின், நாங்கள் அதனைப் பூசிக்கொள்ள எந்தத் தேவையுமில்லை. ஜம்இய்யத்துல் உலமா சபை இதிலிருந்து விலகிக் கொள்வதாயின் தன்மானத்தைக் காத்துக்கொண்டதாய் எண்ணலாம். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்.

இன்று இந்த ஹலால் பிரச்சினையானது நெருப்பு மூட்டுவதற்காக ஒரு ஆயுதம் மட்டுமே. பிரச்சினை இதுவல்ல. இந்நாட்டில் பூதகரமான பிரச்சினையொன்று உள்ளது. பொதுபல சேனா என்ற பேரில் அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிராக செயற்பட்டுவருகின்றது. இதுபற்றிக் கேட்பதற்கு முஸ்லிம் அமைச்சர்களுக்கு முதுகெலும்பில்லை. காரணம், அவர்கள் செய்திருக்கின்ற திருட்டுக்கள் பற்றி அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் என்றும் புசிப்பன ஹலாலானவையே. அவற்றைப் புசிப்பதற்கு ஹலால் சான்றிதழ் முஸ்லிம்களுக்குத் தேவையில்லை. ஜம்இய்யத்துல் உலமா சபை, தாங்கள் விதவிதமான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே அவர்களுக்கு அதுபற்றித் தெளிவுறுத்தியுள்ளோம்.

இன்று உலகெங்கும் ஹலால் இருக்கின்றது. தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளிலும் ஹலால் இருக்கின்றது. இந்த ஹலாலின் மூலம் இந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் நாங்கள் பார்ப்போம். இந்நாட்டுக்கு ஒரு முஸ்லிம் உல்லாசப் பயணிகூட வருவது இல்லாமலாகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com