6.7ம் தரத்திறகு மேல் உள்ள அனைத்து மாணவருக்கும் கணினி
நாட்டின் அபிவிருத்திக்கு பங்காற்றக்கூடிய திறமையான பட்டதாரிகள் உருவாக்கப்படல் வேண்டும்.வெளிவாரிப்பட்டங்கள் திருப்திப்படும் வகையில் இல்லை எனவே அவற்றிக் தரம் தொடர்பில் ஆராய வேண்டும்.6, 7ம் வகுப்புக்கு மேல் சகல மாணவர்களுக்கும் கணினி வழங்க திட்டமடப்படுவதாகவும் எனவே வெளிநாடுகளில் வாழும் இலங்கை விரிவுரையாளர்கள் நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்தார்.
நாட்டுக்காக அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையைக் கவனத்திற் கொண்டு அவர்களை நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி பல்கலைக்கழகத்துடன் அவர்கள் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையை மீறியுள்ளதால் அவர்கள் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை பணம் தொடர்பில் நிவாரணம் ஒன்றை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இலங்கை விரிவுரையாளர்கள் 650 பேர் வரையில் உள்ளதாகவும் அவர்கள் நாடுதிரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்த போதே அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மேற்படி பகிரங்க அழைப்பினை விடுத்தார்.
அமைச்சுக்களின் செயற்பாட்டு முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் இரண்டாவது நிகழ்வு வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் உயர் கல்வி அமைச்சில் நடைபெற்றது.
அமைச்சர்கள் எஸ்.பி. திசாநாயக்க, பசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர உட்பட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது போலவே நாம் பெருந்தொகையாக ஆசிரியர்களை நியமித்த போதும் ஆசிரியர் பற்றாக்குறைகளும் நிலவுகின்றன.
பல்கலைக்கழகங்களின் மூலம் நாம் திறமையான பட்டதாரிகளையே எதிர்பார்க்கிறோம். அதற்காக பல்கலைக் கழகங்களின் சதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.நாம் 54,000 பட்டதாரிகளுக்கு அரசதுறையில் நியமனம் வழங்கியுள்ளோம். இதில் 90 வீதமானவர்கள் கலைப் பட்டதாரிகளே. கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளிலும் பெருமளவிலான பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும். நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய திறமையான பட்டதாரிகளை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும். தற்போது நாட்டின் அபிவிருத்திக்குத் தேவைப்படுவோர் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிவருவது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
வெளிவாரிப் பட்டதாரிகளின் திறமைகள் திருப்திப்படும் வகையில் இல்லை வெறுமனே பட்டங்களைப் பெயருக்கு வழங்கும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் இயங்குகின்றன. அதன் தரம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும். விரைவில் உள்நாட்டில் எரிபொருள் எமக்குக் கிடைத்து விடும். அதற்கு பெற்றோலியம் தொடர்பான பொறியியலாளர்கள் எமக்குத் தேவைப்படுவார்கள். இதனைக் கருத்திற்கொண்டு நாட்டுக்குத் தேவையான திறமையுள்ள பட்டதாரிகளைப் பல்கலைக் கழகங்கள் உருவாக்க வேண்டும்.
இன்டர்நெட்டுடன் தொடர்புடைய அறிவை பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுப்பது அவசியம். மாணவர்களுக்கு மட்டுமன்றி இது தொடர்பில் பாரிய அறிவை விரிவுரையாளர்களும் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விசேட திட்டம் அவசியம். இல்லாவிட்டால் சர்வதேச மட்டத்திலான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமற்போகும்.கணனி அறிவின் முக்கியத்துவத்தைக் கவனத்திற் கொண்டு ஆறு அல்லது 7ம் வகுப்பிற்கு மேல் கல்விகற்கும் சகல மாணவர்களுக்கும் கணனி வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதியை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
தமது தாய் நாட்டைப் பற்றிய உணர்வைக் கொண்ட பலர் கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் அவர்கள் நாடு திரும்பி நாட்டுக்கான சேவையை மீண்டும் வரமுன்வந்துள்ள நிலையில தற்போது கணிதம், விஞ்ஞானத்துறைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது போன்று பாடசாலைக் கல்வி முதலே நாடுபற்றிய உணர்வையும் நாட்டின் அபிவிருத்தி பற்றிய தெளிவையும் கற்பிக்க வேண்டியது அவசியமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமது பல்கலைக்கழகங்களுக்கான எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
அவற்றுக்குச் செவிமடுத்த ஜனாதிபதி மேற்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர் கல்வி அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.
0 comments :
Post a Comment