60,000 மில்லியன் ரூபாவில் தேசத்தின் மகுடம் 23 ஆம் திகதி ஆரம்பம்!
7வது தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சி எதிர்வரும் 23ம் திகதி அம்பாறையில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.
அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் நிறுவனம் மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் பெறவுள்ள இந்தக் கண்காட்சியை எதிர்வரும் சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை நகர் உட்பட அதனை அண்மித்த பிரதேசங்கள் எங்கும் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் மும்மொழிகளிலும் வாசகங்கள், விபரங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அம்பாறையில் நடைபெறவுள்ள 2013ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் வீதிகள் நெடுஞ்சாலைகள், பாலங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட பல்வேறு பாரிய அபிவிருத்தி பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
கண்காட்சியை முன்னிட்டு இம்முறை 60,000 மில்லியன் ரூபா செலவில் நான்கு மாவட்டங்களில் பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருவதாக கண்காட்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கண்காட்சி பூமியின் ஊடக வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசத்திற்கு மகுடம் எப்.எம். விஷேட ஒலிபரப்பு சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த அமைச்சர், ஊடக நிறுவனங்களின் காட்சி கூடங்கள், ஜனாதிபதி செயலக, இராணுவம், கடற்படை, விமானப்படை, விஷேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் காட்சி கூடங்களின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார்.
0 comments :
Post a Comment