Sunday, March 17, 2013

ஒரு குழந்தை திட்டத்திற்காக இதுவரை 330 மில்லியன் கருக்கலைப்பு: சீன அரசு தகவல்

உலகிலேயே மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் பெறுவது சீன நாடாகும். இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த கடந்த 1980ஆம் ஆண்டில், அரசின் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தில் சில நடைமுறை மாற்றங்களைக் கொண்டு வந்தது. ‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை’ என்ற திட்டம்தான் அது.

நகர்ப்புறங்களில், மக்கள் ஒரு குழந்தையும், கிராமப்புறங்களில் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் மற்றொரு குழந்தையும் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். மீறியவர்களுக்குத் தண்டனையும் தரப்பட்டது. பூர்வ குடிகளுக்கும் கிராமிய குடும்பங்களுக்கும் மற்றும் பெற்றோரே ஒரு குழந்தையாக இருக்கும் குடும்பங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இம்முறை மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிட்டது. இத்திட்டம் அமுலுக்கு வந்த கடந்த 40 வருடங்களில், ஏறத்தாழ 330 மில்லியன் கருக்கலைப்புகள் சீனாவில் செய்யப்பட்டுள்ளன என்று அரசின் கணக்கெடுப்பு கூறுகிறது. இதனால் உழைப்பாளர்கள் தொகுப்பு குறைகிறது, முதியோரின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் விதம் கடுமையானது என்பது போன்ற குறைகளை மனித உரிமைக் கழகங்கள் முன்வைக்கின்றன.

ஆயினும், இத்திட்டத்தினை கைவிட அரசு தயாராக இல்லை. மாறாக இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று, தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு வாரியத்தை, சுகாதாரத் துறையுடன் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com