Wednesday, March 27, 2013

பிரபாகரன் மனைவி, மகள் உடல்கள் 2009 மே 20-ல் மீட்கப்பட்டன. பொன்சேகா

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோரது உடல்கள் 2009-ம் ஆண்டு மே 20-ம் நாளே மீட்கப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். போர் முடிவடைந்த நிலையில் மே 19-ந் தேதி பிரபாகரனின் உடலை கண்டெடுத்ததாக இலங்கை ராணுவம் கூறி ஒரு உடலையும் காட்டியது. ஆனால் பிரபாகரனின் மனைவி, மகள் பற்றிய நிலை தெரியாது என்று இத்தனை ஆண்டுகாலம் இலங்கை அரசு கூறி வந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை வெளிநாட்டு செய்தியாளர்களிடம் பேசிய போரின் போது இலங்கை ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உடல்களை போர் முடிவடைந்த மறுநாள் மே 20-ந் தேதி மீட்டோம் என்று கூறியிருக்கிறார்.

இணையதளத்தில் சந்த்யா ஜெய்ன் எழுதிய கட்டுரையில்தான் இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொழும்பில் கடந்த 20-ந் தேதி வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கத்தினரிடையே சரத் பொன்சேகா பேசுகையில் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் படுகொலை செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இதேபோல் பிரபாரகனின் மனைவி மதிவதினி, 20 வயது மகள் துவாரகா மற்றும் பாலச்சந்திரனின் உடல்களை 2009-ம் ஆண்டு மே 20-ந் தேதி மீட்டோம் என்றும் அவர் நினைவு கூர்ந்தார். பிரபாகரன் மனைவி, மகள் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன. பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட நந்திக் கடல் பகுதியில் 150க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலி போராளிகளின் உடல்களும் மீட்கப்பட்டன என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் ஆண்டனியின் உடல் 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி நடேசன், புலித்தேவன், கேணல் ரமேஸ் ஆகியோரது உடல்களுடன் மீட்கப்பட்டன. அதற்கு முதல் நாள் புலிகளின் பகுதியில் இருந்து மிகப் பெரிய அளவிலான வெடிசப்தங்களை கேட்க முடிந்தது. பல விடுதலைப் புலிகள் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்பட்டது என்றார்.

அயர்லாந்தில் வான் பொறியியல் படிப்பை முடித்த சார்ல்ஸ் ஆண்டனி 2006-ம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினார். 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் பின்னணியில் அவர் இருந்தார் என்றும் பொன்சேகா கூறினார்.

அத்துடன் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட படம் சித்தரிக்கப்பட்டதாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. மணல் மூட்டைகள் அடங்கிய மிக சுத்தமான காவலரண் ஒன்றில் அவர் தடுத்து வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் போர்க் காலங்களில் அப்படியான காவலரண்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. விடுதலைப் புலிகள்தான் போர் இந்திய ராணுவத்தினர் போன்ற உடையணிந்திருந்தனர். புகைப்படங்களிலும் அப்படித்தான் தோற்றம் இருக்கிறது. போரின் போது தளபதியாக இருந்து செயல்பட்டதால் எந்த ஒரு சர்வதேச விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு நிதிசென்ட்ரல் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com