தமிழருக்கு தீர்வு கிடைக்காமைக்கு T.N.A திட்டமிட்ட செயற்பாடே காரணம் அமைச்சர் திஸ்ஸ விதாரண
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பலமுறை நான் அழைத்த போதும் அவர்கள் வந்து இணைந்து கொள்ளவில்லை அதுதான் தீர்வு கிடைக்காது நீண்டு செல்ல காரணம் என அமைச்சரும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முன்னாள் தலைவரும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
யாழ் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் நேற்று(17) மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத்தெரிவித்தார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று உலகநாடுகளுக்கு எல்லாம் சென்று சொல்கின்றனர் ஆனால் அதனை இலங்கையில் உள்ள அரச தலைவருடன் பேசி இதற்கான ஒரு தீர்வுத்திட்டத்தை வைக்கமுனைவதும் இறுதியில் சிறிய ஒரு பிரச்சினையைக் காரணங்காட்டி வெளியேறுவதுமாக இருந்தால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பால் ஒரு போதும் தமிழர்களுக்கான ஒரு சரியான தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க முடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் இது தொடர்பில் பலமுறை தெரிவித்திருக்கிறேன். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இணைந்து தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை முன்வையுங்கள் அதன் மூலமே நல்லதொரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளேன். தற்போது சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் அரசுடன், சமசமாஜக்கட்சி, புதிய லெனின் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஈ.பி.டி.பி, முஸ்லிம் காங்கிரஸ், என பல கட்சிகள் இருக்கின்றன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொண்டால் ஜக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கொள்ளும் என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க இது நல்ல ஒரு சந்தர்ப்பம் இதனை பயன்படுத்தி சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இணைந்து தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வுத் திட்டத்தை வழங்க முடியும்.
தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் காணப்படுவதுடன் ஜனாதிபதியும் ஒரே கட்சியாக காணப்படுவதால் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பொற்றுக்கொள்ள முடியும் இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நழுவவிடுமானால் மீண்டும் இப்படி ஒரு பெரும்பான்மையுள்ள அரசு அமைய எத்தனை காலம் செல்லுமோ எனக்குத் தெரியாது. கடந்த முறை அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற தயாராக இருந்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளாது இருந்ததால் இது செயலிழந்து போனது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாகக் கருத முடியாது. இதன் மூலம் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு யோசனை முன்வைக்கும் சாத்தியம் உண்டு.
தற்போதைய நிலைமையை புலி ஆதரவு புலம்பெயர் மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்வர். எனவே கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமுல்படுத்துவதாக சர்வதேசத்துக்கு வலியுறுத்திக் கூறுவதே அழுத்தங்களைக் குறைப்பதற்கான ஒரே வழியாகும்;. 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை கூட்டி அரசியல் தீர்வை விரைந்து காண்பதன் மூலமே இந்தியாவின் ஆதரவை ஜெனிவாவில் பெற முடியும்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு புலிகள் கேட்டதைப்போல் தமிழீழம் வேண்டும் என்று கேட்காது. தமிழ் மக்களுக்கு தேவையானதையே கேட்க வேண்டும். தமிழ் தேசியக்கூட்டமைப்பு அடிக்கடி தெரிவிப்பது தமிழ் நாடு போன்று தமக்கும் என்று ஒரு இடம் வேண்டும் என்பதுதான் இந்த மனம் மாற்றமடைய வேண்டும். தமிழ்நாடு வேறு. அது ஒரு பெரிய பிரதேசம் இலங்கையே சிறியதொரு பிரதேசம் எனவே ஒன்று பட்ட இலங்கைக்குள்தான் நல்லதொரு தீர்வை கேட்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதும் வெளிநாடுகள் தீர்வைப் பெற்றுத்தரும் என எண்ணுகின்றனர். இது மாற்றம் பெற வேண்டும். தற்போது உங்களுடைய கட்சி இரண்டாக காணப்படுவதற்கும் இந்த வெளிநாடுகளே காரணம். தெளிவாக இருங்கள் இலங்கை நான்கு பக்கமும் நீரால் சூழ்ந்த ஒரு பிரதேசம் அதுமட்டுமல்ல இயற்கை வளம் பொருந்திய ஒரு நாடு. அதனால் இலங்கை முன்னேறுவதற்கு ஒரு நாடும் விடாது ஏதோ ஒரு பிரச்சினையை தோற்றுவித்துக்கொண்டு தான் இருக்கும். தமிழ் மக்களுக்கு பிரச்சினை தீர்ந்து விட வெளிநாடுகள் ஒரு போதும் விடப்போவதில்லை எனவே வெளிநாடுகளின் சொல்லுக்கு தலையாட்டாது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இணைந்து கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்ல கிராமமட்ட அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் அப்போதுதான் ஒரு சிறந்தமுறையில் அபிவிருத்தி செய்ய முடியும் எனவே அவற்றை எல்லாம் நடைமுறைப் படுத்த வேண்டுமாயின் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணைந்து கொள்ள வேண்டும் எனத்தெரிவித்தார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. இந்நிகழ்வில், புளொட் தலைவர் சித்தார்த்தன், முன்னாள் துணைவேந்தர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள், எனப்பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment