Wednesday, February 13, 2013

மக்கள் நலன்களில் அலட்சியம் காட்டிய T.N.A

“யாழ் அபிவிருத்தி தொடர்பில் ஆராய முக்கிய அமைச்சர்கள் பலரையும் அழைத்து வந்த ஜனாதிபதி”
நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பலவகைகளில் முக்கியத்துவம் பெற்றதாயிருந்தது. யாழ். அரசாங்க அதிபர் அங்கு பேசும்போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வின் பின் எமது மாவட்டம் மேலும் பல முன்னேற்றங்களைக் காணும் என்ற நம்பிக்கை கூடியிருக்கிறது என்று குறிப்பிட்டதைப் போலவே பலருக்கும் ஏற்படும் விதமாக கூட்டம் நிகழ்ந்தேறியது.

கூட்டத்திற்குத் தலைமை தாங்க நாட்டின் ஜனாதிபதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை ஏற்று வந்திருந்தார். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பான இந்தக் கூட்டத்தை மிக அக்கறையாகக் கருதி முக்கிய அமைச்சர்கள் பலரையும் அழைத்து வந்திருந்தார். அமைச்சர்கள் பஸில் ராஜபக்‌ஷ, ராஜித சேனாரத்ன, எஸ்.பி.திசாநாயக்க, திஸ்ஸ கரலியத்த ஆகியோரும், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ, இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, பொலிஸ்மா அதிபர் இலங்ககோன் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு செயலாளர்களும் வருகை தந்திருந்தனர்.

நாட்டின் அதிகாரமிக்க பகுதி முழுவதையும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்திருந்ததன் நோக்கம், இங்கு பல அபிவிருத்தி மாற்றங்களை உடனுக்குடன் முடிவெடுத்துச் செயற்படுத்துவதே. யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல அபிவிருத்தி வேலைகளின் தொடர்ச்சி எந்நிலையில் இருக்கிறது என்பது பற்றி, படங்களுடனும் நுணுக்க விபரங்களுடனும் கேள்விகள் எழுப்பி விசாரித்தறிந்து கொண்டார். அவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டியதையும், தெற்கிலுள்ள எல்லா வசதிவாய்ப்புகளுக்கும் சமமாக வடக்கின் தேவைகளும் நிறைவேற்றப்படும் என்பதையும் உறுதிப்படுத்தினார்.



நேற்றுவரை விடுவிக்கப்படாதிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் தாய்மார்கள், ஜனாதிபதியிடம் நேரிடையான வேண்டுகோள் ஒன்றை விடுப்பதற்காக கூட்டத்தில் அவர்களை அனுமதித்திருந்தார் அமைச்சர் டக்ளஸ். அந்தத் தாய்மார் எழுந்து தங்கள் புதல்வர்களை விடுதலை செய்யச் சொல்லுமாறு ஜனாதிபதியிடம் கண்ணீர் மல்க கேட்டனர். நாளையே உங்கள் பிள்ளைகள் விடுவிக்கப்பட்டு உங்களிடம் வந்துவிடுவார்கள் என்று சபையின் கரகோசத்திற்கிடையே உறுதியளித்தார் மகிந்த.

அந்தத் தாய்மார் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி, இனி அவர்கள் அரசுக்கெதிராக நடந்து கொள்ளாதவாறு நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று அழுதழுத்துச் சொல்லினர். ஜனாதிபதி உடனேயே சொன்ன பதில், நீங்கள் அரசுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர்களை நன்றாகப் படிக்கச் சொல்லிச் சொல்லுங்கள் என்றார். மீண்டும் சபையில் கரகோசம்.

அதுபோலவே, வலி. வடக்கின் தவிசாளர், ரயில் காங்கேசன் துறை வரை செல்லும் என்று சொல்கிறீர்கள். ஆனால் இடையில் பாதுகாப்புத் தரப்பின் வேலி போடப்படுகிறது, ரயில் காங்கேசன்துறைக்குச் செல்லாது என்று கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினார். அதற்கும் உடனடியாகவே ஜனாதிபதி சொன்னார், தடைகளையும் உடைத்துக்கொண்டு ரயில் காங்கே சன்துறை வரை செல்லும் கவலைப்படாதீர்கள் என்று.

யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை முக்கியமாகக் கருதி, நாட்டின் தலைமை அத்தனை பேருடனும் வந்திருக்கும்போது, யாழ்.மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் எங்கே என்ற கேள்விதான் பலரிடமும். அழைப்புக்கிடைத்து வினாயகமூர்த்தி எம்பி அங்கு சமூகமளித்திருக்கையில், மற்றவர்கள் அழைப்புக் கிடைக்கவில்லை என்று பொய்ச்சாக்கு சொல்லி விட்டு சொந்த அலுவல்களை மட்டும் ஜனாதிபதியிடம் தனியே சென்று சாதித்துக் கொள்வது, மக்கள் மீதும் அவர்களுக்கான அபிவிருத்திகள் மீதும் அக்கறை இல்லாத காரணம்தான் என்பது யாருக்கும் புரியாமலில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com