அதிக ஆஸ்கார் குவித்த ஒரே திரைப்படம் : Life of Pi
85வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நேற்று பிரமாண்டமான முறையில் லாஸ் ஏஞ்சலில் நடைபெற்றது.இதில் இந்திய கதைச்சூழலை பின்னணியாக கொண்ட Life of Pi திரைப்படம் நான்கு விருதுகளை வென்றது. சிறந்த இயக்குனர், சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பின்னணி இசை என நான்கு பிரிவுகளில் இத்திரைப்படம் விருதுகளை குவித்தது. அதாவது இம்முறை ஆஸ்கார் விழாவில் அதிக விருதுகளை குவித்த ஒரே திரைப்படம் Life of Pi தான்.
சிறந்த இயக்குனருக்கான விருதை Life of Pi இயக்குனர் ஆங் லீ இரண்டாவது முறையாக பெறுகிறார். இத்திரைப்படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து உழைத்த 3000 பேருக்கும் இவ்விருதை சமர்ப்பிப்பதாக விழாவில் பேசிய ஆங் லீ உணர்ச்சி வசமாக பேசினார்.மேலும் இத்திரைப்படம் உருவாக முக்கிய காரணமான நாவலாசிரியருக்கும், தயாரிப்பாளருக்கும் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுராஜுக்கும் தனிப்பட்ட முறையில் அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.
இதேவேளை சிறந்த தனிப்பாடல் பிரிவில், இத்திரைப்படத்திற்காக பாடிய பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயசிறீயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு பதில் பிரபல பாப் இசை பாடகி அடிலிக்கே இவ்விருது வழங்கப்பட்டது. இதேவேளை இம்முறை ஆஸ்கார் விருதுகள் நிகழ்வுகளில் சற்று வித்தியாசமாக அமெரிக்க அதிபர் மாளிகையும் முதன்முறையாக கலந்து கொண்டது. அதாவது சிறந்த திரைப்படத்திற்கான அறிவிப்பை வெள்ளைமாளிகையிலிருந்து அதிபர் பாரக் ஒபாமாவின் துணைவியார் மிச்செல் அம்மையார் வாசித்தார். சிறந்த திரைப்படமாக அர்கோ தெரிவானது. ஈரானிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு குழுவினர் எப்படி மீட்டெடுக்கின்றனர் எனும் 1979ம் ஆண்டுக்கான கதைக்களம் கொண்டது இத்திரைப்படம்.
சிறந்த அடெப்டட் ஸ்கிரீன்பிளே, சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளிலும் இத்திரைப்படமே வெற்றி பெற்றது. ஆனால் சிறந்த இயக்குனர் பிரிவில் இத்திரைப்படம் பரிந்துரைக்கப்படவில்லை. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் அஃப்லெக்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விழா குழுவினர், தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அப்போது பதில் அளித்த அஃப்லெக், ஈரானில் கடுமையான சூழலில் எமது நண்பர்களுக்கு இந்நேரம் நன்றி கூறுகிறேன் என்றார்.
இதேவேளை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒசாமா கொல்லப்பட்ட தாக்குதல் திட்டத்தை அடிப்படையாக கொண்ட Zero Dark Thirty திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை எடிட்டிங்கை தவிர வேறெந்த பிரிவிலும் விருது கிடைக்கப்படைவில்லை.
0 comments :
Post a Comment