Tuesday, February 12, 2013

பயங்கரவாதிகளை சமூகமயப்படுத்தி சாதனை படைத்தவர் ஜனாதிபதி. கூறுகின்றார் கோட்டா!

பயங்கரவாதிகளுக்கு உலகம் வழங்கிய பதிலை மாற்றியமைத்தவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டுக்கு எதிராக செயற்பட்டோருக்கு புனர்வாழ்வளித்து மீள நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அவர்களை பங்காளியாக்கி, உலகிற்கு புதிய செய்தியொன்றை ஜனாதிபதி அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எல்லைகளை தீர்மானிக்கும் நெருக்கடிகளினால் இனங்கள் எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் இராஜதந்திர பிரச்சினைகள் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் கோடடாபய ராஜபக்ஷ அங்கு தொடர்ந்து பேசுகையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்ரிரிஈ உறுப்பினர்கள், ராணுவத்தில் சரணடைந்தனர். 3 தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலமாக, இவர்கள் இலங்கை மக்களை அழித்தனர். அது மாத்திரமன்றி, நாட்டின் வளங்களை அழித்துக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தினர். இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டத்தை தீவிரமாக கடைபிடிப்பதே, ஏனைய அரசாங்கங்களின் செயற்பாடுகளாக அமைந்துள்ளன.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இதனை வேறு நோக்கிலேயே, கவனத்திற்கொண்டார். இவர்கள், பயங்கரவாதத்திற்காக தூண்டப்பட்டவர்கள் என்றும், மீண்டும் சமூகத்தில் வாழ்வதற்காக சமூகமயப்படுத்தப்பட வேண்டுமென்ற சிந்தனையை, ஜனாதிபதி உருவாக்கினார். இதன் பயனாக, பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்திலும், அதற்கு பின்னரும், திறந்த அடிப்படையில் அரசாங்கம் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையிலும் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள் தொடர்ந்தும் பிரிவினைவாதத்தை தொடர்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் ஒரு பகுதி புலி உறுப்பினர்களே இவ்வாறு இல்லாதொழிக்கப்பட்டுள்ளனர் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு தொகுதியினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.

புலிகளின் எஞ்சிய பிரிவினர் தொடர்ந்தும் பிரிவினைவாத யுத்தத்தை தொடர முயற்சிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த அச்சுறுத்தலை வெற்றிகரமாக முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும;. . இதன் காரணமாகவே தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் அரசாங்கம் எந்தவிதமான நெகிழ்வுத் தன்மையையும் காட்டுவதில்லை.

நீண்ட காலமாக யுத்தம் இடம்பெற்ற இலங்கை போன்ற நாடுகளில் ஒரே இரவில் அனைத்து விடயங்களும் வழமைக்கு திரும்பிவிட்டதாக கருதுவது முட்டாள்தனமானது.

இதேவேளை- யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முடிந்தளவு தளர்த்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சிக்கும். சமாதானத்தின் ஒட்டுமொத்த சலுகைகளையும் மக்களுக்கு வழங்க முயற்சிக்கப்படும்.

இந்த இரண்டு முரண்பாட்டு நிலைமைகளுக்கும் காத்திரமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நவீன தொழில்நுட்ப முறைமைகளை பயன்படுத்தி குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்தி புலிகள் மீள ஒருங்கிணையக் கூடும்.

உலக நாடுகளுடனான உறவுகளின் போது மனித உரிமை என்ற விடயம் மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது .கடந்த சில தசாப்தங்களில் அமெரிக்கா- பிரித்தானியா- கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய இலங்கைத் தமிழர்கள் அந்நாடுகளில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களில் புலி ஆதரவாளர்களும் வாழ்ந்து வருவதனால்- மனிதாபிமான மீட்புப் பணிகள் தொடர்பில் பிழையான தகவல்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு வழங்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் புலி ஆதரவாளர்கள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களை முறியடிப்பதே அரசாங்கத்தின் பிரதான சவாலாக அமைந்துள்ளது என பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச விவகாரம் தொடர்பாக கற்கை நிருவகம் கூட்டாக இணைந்து, மேற்படி கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




1 comments :

Arya ,  February 12, 2013 at 6:40 PM  

yes, that why LTTE Re-Organize in Underground, do you know LTTE must be killed and not rehabilitation, because they never will Change them, that why we had given Special Treatments to LTTE in year 1988-1989 , but your premadasa had helped to back LTTE again, i request do Special Treatments and not Rehabilitation.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com