இலங்கை மண்ணில் பிறந்த எவரும் அடிமைப்பட்டு வாழ- வேண்டியதில்லை. அனைவருக்கும் சமஉரிமை என்கின்றார் மஹிந்தர்.
இலங்கை மண்ணில் பிறந்த அனைவருக்கும் சமஉரிமை இருப்பதாகவும், எந்தவொருவரும் அடிமைப்பட்டோ அல்லது பிளவுபட்டோ வாழ தேவையில்லையெனவும், அனைத்து மக்களும் பெருமைமிகு இலங்கையர்கள் எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியல் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் தனிப்பட்ட நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட 4 மாடி புதிய கட்டிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இக்கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவினையும், ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய ஜனாதிபதி இன, மத பேதங்களை புறந்தள்ளி, மனித நேயத்தை அனைவரும் மதிக்க வேண்டுமென வேண்டினார்.
முஸ்லிம் இனத்தின் முன்னேற்றத்திற்காக இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்பதே, தனது கருத்தாகும் எனத் தெரிவித்த அவர் முஸ்லிம் பெண்கள் கல்வித்துறையிலும் முன்னேற வேண்டும் எனவும் என அறிவுறுத்தினார்.
இலங்கை, எமது தாய் நாடாகும். நமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில், முஸ்லிம் பெண்களும் கல்வியில் முன்னேற வேண்டும். நாம் இறந்த காலத்தை நோக்கி செல்லக்கூடாது. எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும் எனவும் கடந்த காலத்தை நோக்கி நாம் செல்ல தேவையில்லை. எதிர்காலத்தை நோக்கி, நாம் சமூகத்துடன் இணைந்து நடை போட வேண்டும். நீங்கள் தனியான மகளிர் கல்லூரியில் கல்வி கற்றால் கூட, தாம் கற்றவற்றிலிருந்து எதிர்காலத்தில் பயனை பெற்றுக்கொள்வதற்கு, முஸ்லிம் பெண்களாகிய நீங்கள், அனைவருடனும் இணைந்து செயற்படவும், வாழவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உங்கள் சமயம், கலாசார விழுமியங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கல்வியை கற்பதே, மிகவும் இன்றியமையாததாகும். அதற்கு அறிவு மட்டுமல்லாது, ஒழுக்க விழுமியமும் மிக முக்கியமாகும். எமது கலாசாரங்களை விட்டு விலகியிருக்க முடியாது. நாட்டுக்கென்று தனியான கலாசாரம் உள்ளது.
அதேபோன்று, சமயத்திற்கென தனியான கலாசாரம் உள்ளது. ஆகவே நாங்கள் சிங்களவர்களாக இருக்கலாம், பௌத்தர்களாக இருக்கலாம், இந்துக்களாக இருக்கலாம், இஸ்லாமியர்களாக இருக்கலாம், கிறிஸ்தவர்களாக இருக்கலாம், நாம் அனைவரும் ஐக்கியத்துடன் இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றோம். நீங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அல்ல. நீங்கள் அனைவரும் இலங்கை தாயின் பிள்ளைகள்.
ஆகவே, ஒரு நாட்டில் பிறந்தவர்கள் அதனை தமது தாயகமாக கருத வேண்டும். ஆகவே, தாயகப்பற்று என்று ஈமானின் ஒரு அங்கமென, முஹம்மது நபியர்வர்கள் கூறியிருக்கின்றார்கள். அடிமைப்பட்டோ, பிளவுபட்டோ சமூகத்தில் மக்கள் வாழ வேண்டிய அவசியமில்லை. அடிமைப்படும் அளவிற்கு, பிளவுபடும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகளும் அதிகரிக்கும்.
விலகியும், எமது மத்தியில் பிளவுகள் நிலவினால் எமது நாடு ஒருபோதும் அபிவிருத்தியடையாது, அதன் பயனையும் மக்கள் அனுபவிக்க மாட்டார்கள், மக்கள் முதலில் மனிதத்துவத்தை மதிக்க பழகிக்கொள்ள வேண்டும். சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், சகவாழ்வே ஆகியனவையே, இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment