இனி எரிகல் விழும் முன்னே தடுப்பதற்கு புதிய திட்டம்: ரஷ்யா
பூமியில் மிக அரிதாக நிகழும் இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான எரிகற்களின் தாக்கம் கடந்த வெள்ளிக்கிழமை காலை ரஷ்யாவில் நிகழ்ந்ததை அனைவரும் அறிவார்கள்.இவ் விண்கல் விழும் போது ஏற்பட்ட அதிர்ச்சியலைகள் (Shock waves) காரணமாகப் பல கட்டடங்களின் யன்னல் கண்ணாடிகளும் சிலவற்றின் கூரைகளும் உடைந்து தெறித்ததில் 1200 பேர் வரை காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிகல்லின் தாக்கம் கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய எரிகல் தாக்கம் ஆகும். இதையடுத்து ரஷ்யா எரிகற்களின் தாக்குதலில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டம் (anti-meteorite shield) ஒன்றை நடைமுறைப் படுத்தும் திட்டத்தில் உள்ளது. இத்திட்டத்துக்காக 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் விஞ்ஞானக் கழகம் மற்றும் வானியல் கல்வி மையத் திணைக்களத்தின் தலைவரான லிடியா ரைகோல்வா எனும் பெண்மணி கருத்து உரைக்கையில், பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும் எரிகற்களின் பாதையைத் திருத்தமாகக் கண்காணிப்பதற்குப் பூமியின் தரையில் அமைக்கப் பட்டுள்ள மிகுந்த பார்வை வலுவுடைய தொலைக் காட்டிகளை விட விண்ணில் இத்தொலைக் காட்டிகளை அமைக்கும் ஒரு தளத்தை நிர்மாணிப்பதே அவசியமாகின்றது என்றார்.
இவர் மேலும் கூறுகையில் இந்த செயற்திட்டம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக் கழகமான ரொஸ்கொஸ்மொஸ் (Roscosmos) இனாலும் துணைப் பிரதமர் டிமித்ரி ரொகோஷின் ஆலும் ஏற்கனவே அனுமதிக்கப் பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதேவேளை லிடியா வெள்ளிக்கிழமை ரஷ்யாவைத் தாக்கிய விண்கல் குறித்தும் தகவல் அளித்திருந்தார். இதில் அவர் இந்த எரிகல் விண்ணிலேயே வெடித்துச் சிதறாமல் தரையில் மோதியிருந்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய வெடிப்பு 500 கிலோ டன் நிறையுடைய TNT வெடிபொருளுக்குச் சமனாகும் எனவும் இது சக்தி வாய்ந்த ஒரு அணுகுண்டுக்கு இணையான சேதத்தை விளைவித்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வெள்ளிக்கிழமை ரஷ்யாவைத் தாக்கிய எரிகல்லின் சில சிதைந்த பாகங்களை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர். இதன் மூலம் அந்த எரிகல் 7 மிகப்பெரிய துண்டுகளாக உடைந்து செபார்க்குல் ஏரியில் வீழ்ந்ததாக இனங் காணப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment