டெல்லி செங்கோட்டையில் கொடியேற்ற விருப்பம் : மாயாவதி
பிரதமாராகி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்ற விருப்பம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்."நான் பிரதமராகி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி சுதந்திர தினவிழா உரையாற்ற வேண்டும். அதற்கு ஏற்ப நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தாருங்கள்" என்று தொண்டர்களுக்கு மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு, மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைவரும் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி எம்பி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் தனது இந்த விருப்பத்தை வெளியிட்டார்.
அதாவது "நான் இந்த நாட்டின் பிரதமராகி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்ற வேண்டும். அதற்கேற்ப அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நமது கட்சிக்கு மாபெரும் வெற்றியை நீங்கள் தேடித்தரவேண்டும்.
சட்டசபை தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும், உங்களுக்கு லஞ்சம் கொடுத்து, உங்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள். நீங்கள் அவர்களின் முயற்சிக்கு பலியாகாமல், விலைக்கு வாங்கும் பொருளாக மாறாமல், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு விலை போகும் பொருளாக மாறாமல், விழிப்புடன் உஷாராக இருக்கவேண்டும்.
நமக்கு தேவையான நல்ல சட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு, நமக்கு நல்லது நடக்க வேண்டுமானால், மத்தியில் நாம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைத்து நாடாளுமன்றத் தேர்தலில் நமது கட்சிக்கு வெறியைத் தேடித்தர வேண்டும்" என்று தனது கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் மாயாவதி.
0 comments :
Post a Comment