புலிகள் மீது எனக்கு பலத்த விமர்சனங்கள் உண்டு! அடித்தார் குமார் குணரட்ணம் அந்தர் பல்டி. பீமன்
கடந்தவாரம் சுவிட்சர்லாந்து வந்திருந்த இனவாதத்திற்கு பெயர்போன ஜேவிபி கட்சியின் முக்கியஸ்தராக மாத்திரமல்ல அக்கட்சியின் தாங்கு தூண்களில் ஒருவராகவும் இருந்து தற்போது தனியான அரசியல் கட்சி ஒன்றை ஸ்தாபித்துள்ள குமார் குணரட்ணம், தனது புதிய கட்சியின் கிளை அமைப்பான சமஉரிமை இயக்கம் என்ற ஒன்றை சுவிட்சர்லாந்து தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
சம உரிமை இயக்கத்தின் கொள்கைகளில் ஒன்று இலங்கையில் இனவாதத்திற்கு எதிராக போராடுவது என அறிவிக்கப்பட்டிருந்ததை ஏற்று அந்நிகழ்வில் கலந்து கொண்டபோது, அங்கு வந்திருந்த புலிகளின் முன்னணி செயற்பாட்டாளர்களையும் தீவிர ஆதரவாளர்களையும் கண்டதுடன் பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இனவாதத்திற்கு எதிராக செயற்படப்பபோவதாக பறைசாற்றுகின்ற இயக்கம் , இலங்கையியே சிங்களவர்கள் என்ற காரணத்திற்காக கிராமங்களினுள் புகுந்து குடிமனைகளில் படுத்துறங்கிய சின்னஞ்சிறுசுகள் , பெணக்கள் , வயோதிபர்கள் என்ற ஒரு சிறு தயவு தாட்சணியும் காட்டாது வெட்டியும் கொத்தியும் கொலை செய்தும் முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காக அவர்களது வணக்க ஸ்தலங்களுள்ளேயே கொடுரமாக கொலை செய்தும் தம்மை இனவாதிகள் என உலகிற்கு நிரூபித்து காட்டிய புலிப்பயங்கரவாதிகளுடன் இணைந்து இனவாதத்திற்கு எதிராக வேலை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது : ' எங்களை ஏற்றுக்கொண்டால் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயார்' என குமார் குணரட்ணம் தெரிவித்தார்.
குமாரின் இக்கருத்து இலங்கை ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கள மக்களின் வாக்குகளை இனவாதத்தினை கக்கியே பெற்றுக்கொள்ளும் அரசியல் வியூகத்தை கொண்டுள்ள ஜேவிபி யிலிருந்து வந்த குமார் குணரட்ணத்திற்கு தான் சுவிட்சர்லாந்தில் தெரிவித்த கருத்தினை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியாமல்போனது. 'நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை' என சிங்கள ஊடகங்களுக்கு தனது கட்சியின் முகத்தலைப்பில் மறுப்பறிக்கையாக அறிவித்திருந்தார்.
அவர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் :
'எல்ரிரிஈ இயக்கம் என ஒரு இயக்கம் இன்னும் செயற்பாட்டில் இருக்கின்றதா என்பது எமக்கு தெரியாது. அவ்வியக்கத்தை தோல்வியடையச்செய்து அழிதொழித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் புலிகளியக்கம் இன்னும் செயற்படுமானால், அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்து அவர்கள் சுயவிமர்சனம் செய்து கொண்டுள்ளார்களா என்பது எமக்கு தெரியாது. அனால் அவர்களின் அரசியல் குறித்தும் செயற்பாடுகள் குறித்தும் எம்மிடம் பலத்த விமர்சனங்கள் உண்டு.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தமிழில் ஒர் கருத்தும் , ஆங்கிலத்தில் ஓர் கருத்தும் தெரிவித்தால்போல் தற்போது குமார் குணரட்ணம் தமிழில் ஒரு கருத்தும் சிங்களத்தில் ஒரு கருத்தும் வெளியிட்டுள்ளார். சிங்களப் பத்திரிகைகளுக்கு புலிகள் மீது பாரிய விமர்சனம் உண்டு எனத்தெரிவிக்கின்றார். அவ்வாறாயின் நாளை பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற சந்திப்பில் தமிழ் சிங்கள இரு தரப்பினரும் ஒன்றாக கலந்து கொள்ளவிருக்கின்ற நிலையில் குமார் புலிகள் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பதையும், புலிகள் மீது விமர்சனம் உள்ளதாக கொழும்பு சிங்களப்பத்திரிகைகளுக்கு தெரிவித்திருக்கின்ற விமர்சனங்கள் யாது என்பதையும் வெளிப்படையாக தெரிவிப்பாரா? என்ற கேள்வியை இங்கு முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.
புலிகள் மீது விமர்சனம் உண்டு என எந்தப்பத்திரிகைக்கும் நான் தெரிவிக்கவில்லை என, சுவிட்சர்லாந்தில் கூறிய விடயத்தை கூறவில்லை என குத்துக்கரணம் அடித்தால்போல் இங்கும் கரணம் அடித்துவிடக்கூடாது என்பதற்காக அதற்கான அதாரத்தினை இங்கு இணைக்கின்றோம்.
எந்த கட்சியாயினும் தமது பிழைகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு , சம உரிமை இயக்கத்தின் கொள்கைகளை ஏற்று தம்முடன் இணையலாம் என குமார் குணரட்ணம் கூறுகின்றார். புலிகளும் ஜேவிபி யும் தம்மை சுயவிமர்சனம் செய்து கொண்டால் சர்வசாதாரணமாக குற்றவாளிக்கூண்டிலிருந்து இறங்கிச்செல்ல அனுமதிக்கப்படக்கூடிய குற்றங்களைச் செய்த இயக்கங்கள் அல்ல. சுயவிமர்சனம் என்பது தமது பிழைகளை உணர்ந்து எதிர்காலத்தில் தம்மை நல்வழிப்படுத்திக்கொள்வதற்காக தாமே தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பே அன்றி தண்டனையிலிருந்த விடுதலை பெறுவதற்கான வழியாக முடியாது. இவர்கள் மேற்கொண்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள்.
யுத்தம் நடைபெற்றபோது சில தவறுகள் நடைபெற்று இருக்கின்றது என இலங்கை அரசாங்கமும் தம்மை சுயவிமர்சனம் செய்து கொண்டுள்ளது. அதை யார் ஏற்றுக்கொண்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வேண்டும். ஏற்று சிறிலங்கா அரசை சர்வதேச கூண்டில் என்கின்றவர்கள் ஜேவிபி யும் புலிகளும் செய்த குற்றங்களுக்கு சுயவிமர்சனம் போதுமென்கின்றார்களா?
1988 கடைசிப் பகுதிகளில் இலங்கையின் தெற்கு பகுதியில் பல பிரதேசங்களை ஜேவிபி ஆட்டிப்படைத்தது. ஒரு நாள் அல்பிட்டிய பிரதேசத்தில் ஜேவிபி திடீரென ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தது. (ஹர்த்தால் அல்ல ஊர்டங்குச்சட்டம்) அல்பிட்டிய பஸ்நிலையத்தில் மக்கள் தெருவில் கிடந்தார்கள். கைக்குழந்தைகள் கதறி அழுதார்கள், பசி அவர்களை வாட்டியது, மலசலம் உடுத்த உடையிலே கழித்தார்கள், இதற்கு மேலும் அவர்கள் பட்ட அவலம் தொடர்பில் விபரிக்கபடவேண்டியது அல்ல. மனிதநேயம் உள்ளவர்களுக்கு விளங்கும்.
சில தாய்மார் கைக்குழந்தைகளுடன் பஸ் டிப்போவின் பிரதி அத்தியட்சகர் நந்தன சில்வாவிடம் சென்றார்கள். ஐயா குழந்தைகள் பசியில் அழுகின்றார்கள் எங்களை வீடுகளுக்கு அனுப்பி வையுங்கள் என மன்றாடினார்கள். தாய்மாரின் அவலத்தை சகித்துக்கொள்ள முடியாத நந்தன சில்வா, சாரதிகள் சிலரை அழைத்து உங்களில் மனிதநேயம் உள்ளவர்கள் யாராவது இருந்தால் இந்த தாய்மாரை வீடுகளுக்கு சேர்த்துவிடுங்கள் என்றார். இரு சாரதிகள் பஸ் வண்டிகளை எடுத்துக்கொண்டு எவ்வித கட்டணமும் அறவிடாமல் அவர்களை வீடு சேர்த்தார்கள்.
ஆனால் நந்தன சில்வா நான் வீடு சேர்வேனா என்ற பயத்துடன் ஒருவாறு புறப்பட்டு மாற்று வழிகளால் தனது வீட்டை அடைந்தார். சுமார் இரு மணித்தியாலயத்தில் ஜேவிபி கொலைஞர்கள் வீட்டை சுற்றி வளைத்தார்கள். நந்தன சில்வா ஒருவாறு பின்வழியொன்றால் தப்பி ஓடினார். இவ்வாறு சுமார் ஒரு வாரங்கள் ஜேவிபிக்கு தண்ணி காட்டினார். ஒருநாள் அவர்கள் வீட்டினுள் நுழைந்தபோது ஓடிக்கொள்ள முடியவில்லை. வீட்டின் கட்டிலின் கீழ் நுழைந்து கொண்டார். வீடு முழுக்க தேடிய ஜேவிபி கொலைஞர்கள் அவரை கட்டிலின் கீழிருந்து இழுத்தெடுத்தனர். மனைவி பிள்ளைகள் மன்றாடினார்கள். தலையில் துப்பாக்கிகளை வைத்து வீட்டினை பூட்டிக்கொண்டு இருக்கவேண்டும். இவருடன் பேசிவிட்டு அனுப்பி விடுகின்றோம் என்று கூட்டிச் சென்றனர். சில நிமிடங்களில் இரு துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள் மாத்திரம் கேட்டது. பேசிவிட்டு நிரந்தரமாக அனுப்பி விட்டனர். அனால் மனைவி பிள்ளைகளுக்கு தெரியும் அவர் அனுப்பப்பட்டுவிட்டார் என்பது. ஆனால் ஜேபிவி இட்ட கட்டளையை மீற முடியாத காலம் அது. அவர்கள் வீட்டினை பூட்டிக்கொண்டிருந்தே அழுது கதறினார்கள்.
மறுநாள் காலை கம்பத்தில் கட்டப்பட்டிருந்த சடலத்தை மீட்ட பொலிஸார் சட்ட ஒழுங்கு முறைகளை முடித்து குடும்பத்தாரிடம் சடலத்தை பிற்பகல் நான்கு மணியளவில் ஒப்படைத்தனர். வீட்டிற்கு சடலம் வந்து சில நிமிடங்களில் ஜேவிபி கொலைஞர்களிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.
அக்கடிதத்தில் : சடலத்தை நாளை நண்பகல் பன்னிரண்டு மணிக்கு மேல்; வீட்டில் வைத்திருக்க கூடாது, சடலத்தை தோழில் சுமக்க கூடாது, சடலத்தை பெட்டியில் அடைக்க கூடாது, படங்கு ஒன்றில் வைத்து முழங்காலுக்கு மேல் உயர்த்தாமல் மயாணத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும், சடலம் எடுத்துச்செல்லும்போது ஆட்கள் 15 பேருக்கு மேல் செல்லக்கூடாது, சடலத்தை புதைத்த பின்னர் வழமையாக மண்ணால் கும்பம் வைப்பதுபோல் கும்பம் வைக்ககூடாது, நிலத்தை சமதரையாக விடவேண்டும் , மலர் வளையங்கள் வைக்க கூடாது , மலர்கள் தூவக்கூடாது. இது துரோகிகளுக்கான தண்டனை. அதாவது துரோகிகள் மனித நேயத்திற்கு வழங்கிய தண்டனை.
மேலும் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணையில் புளொட் அமைப்பைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவரின் காதலி ஒரு நாள் மாலை ஏழு மணியளவில் வீட்டிற்கு வந்த புலிக் கொலைஞர்களால் அழைத்துச் செல்லப்பட்டாள். இதுவும் 1988 களின் இறுதிப்பகுதி. அவளது பெயர் சித்ரா. அவளை அழைந்துச் சென்றது நற்பட்டினையைச் சேர்ந்த கள்ளத்தம்பி என்று அழைக்கப்படுகின்ற யோகன், பாண்டிருப்பைச் சேர்ந்த குண்டு என அழைக்கப்படுகின்ற புலேந்திரன், பெரியநீலாவணையைச் சேர்ந்த கொசுகு என அழைகப்பட்டவன் , யாழ்பாணத்தை சேர்ந்து சிவகுமார் உள்ளிட்ட சுமார் ஏழு பேர். பெரியநீலாவணை பொது மயாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவள் நிலா வெளிச்சத்தில் மேற்படி ஏழு பேராலும் குதறப்பட்டாள். குற்றுயிரும் குறையுயிருமாக அவளை மயானத்தில் புதைத்துச் சென்றனர். காதலுக்கு கிடைத்த பரிசு. தாய் பரிதவித்து கொண்டிருந்தாள். தனக்கு தெரிந்தவர்கள் ஊடாக தனது பிள்ளையை மீட்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள். விசாரிக்கின்றோம் விடுவோம் என்றார்கள்.
மேலாக புதைத்துச் செல்லப்பட்ட அந்த சடலம் நாற்றம் எடுத்தது. நாய்கள் தோண்டின. ஊருக்குள் கதை காட்டுத்தீயாக பரவியது. ஊர் மக்கள் சுடலையை நோக்கி படையெடுத்தனர். கொலைஞர்களின் காதுக்கு கதை எட்டியது. கொசுகு கொசுவாக இடத்திற்கு பறந்து சென்றான். அனைவரும் கலைந்து செல்லவேண்டும்! இறுதி எச்சரிக்கை! என்றான். அனைவரும் கலைந்து சென்றனர் தாய் சற்று விலத்தி சென்று தெருவில் கிடந்து ஒப்பாரி வைத்தாள். தனது பிஞ்சின் கண்கள் , காதுகள் , தசைகள் என காக்காய்கள் பிய்த்துக்கொண்டு ஓடுவதைப்பார்த்து தலை, முகம், நெஞ்சு, வயிறு என எல்லா இடங்களிலும் அடித்து அலறினாள். அதற்கு மேலாக அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
சித்திராவின் உடலம் தோண்டப்பட்டிருந்தால் அவளுக்கு என்ன நடந்தது என்பது கல்முனை வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம், அன்றில் சித்திரா தனாகவே கிடங்கை தோண்டிக்கொண்டு நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டாள் என்ற மரண விசாரணை அறிக்கையும் வந்திருக்கலாம். அன்று வடகிழக்கில் நிலைமைகள் அவ்வாறுதான் இருந்தது.
இந்த இருகதைகளும் இரு உதாரணங்கள் மாத்திரமே, இவ்வாறு புலிகள் மற்றும் ஜேவிபி ஆகிய இரு அமைப்புக்களும் ஆயிரக்கணக்கான குற்றங்களை செய்திருக்கின்றது.
இவ்வமைப்புக்கள் தம்மை சுயவிமர்சனம் செய்து கொண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்துவிடுமா?
எனவே புலிகள் சுயவிமர்சனம் மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்கின்ற மேதாவிகள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கவிருக்கின்ற நியாயம் என்ன?
உங்களை ஏற்றுக்கொண்டால் புலிகளுடன் இணைந்து அவர்களின் பணத்தை தாங்களும் ஏப்பம் விடலாம் என்ற நோக்கத்தை விடுத்து, அந்தபணம் முதலில் புலிகள் நடுத்தெருவில் விட்டுச்சென்ற மக்களுக்கும் , மேற்படி சித்திராபோன்று புலிகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கும் நஷ்ட ஈடாக பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதை உணருங்கள்.
0 comments :
Post a Comment