மக்களின் உணர்ச்சியைச் தூண்டிவிடும் சர்வதேசம்!
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாதுகேள் மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளுமன்றி வேறில்லை என்கிறது மணிமேகலை. மக்களுக்கான இந்த வாழ்வாதாரங்களை வழங்குவதே அறத்தின்பாற்பட்டது என்றார் சாத்தனார்.
அதை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு அல்லது அந்தத் தேவைகளை கேவலப்படுத்தி, சோற்றுக்கு வாலாட்டுபவர்களாக எள்ளிநகையாடிவிட்டு வேறு கனவுகளைச் சொல்லி மக்களை மிதத்திச் செல்வதில் வஞ்சனை இருக்கிறது. உழைப்பைச் சுரண்டுவதைவிட மிக மோசமானது மக்களின் உணர்ச்சியைச் சுரண்டி அவர்களை ஏமாற்றிக் கரடான பாதையிலேயே இழுத்துச் செல்வது.
மக்கள் தங்கள் தேவைகளைப் பெற்று வாழ்வதற்கு எந்த உதவிகளும் செய்யாதவர்கள், அதற்கான எந்த எத்தனங்களையும் மேற்கொள்ளாதவர்கள், மக்களின் தேவை சர்வதேச நீதிமன்ற மேசைகளில்தான் இருப்பதாகச் சொல்லிக் கொண்டே தலைவர்களாகவும் பெயர் சொல்லி ஓட்டிக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய ஏமாற்று!
வெளிநாடுகள் இதோ கிட்ட வந்துவிட்டன கிட்ட வந்துவிட்டன என்று சொல்லிக்கொண்டே பெரும்பாலான மக்களை வாழவிடா மலே இழுத்துச் செல்லும் இந்த உணர்ச்சிகரம் என்றைக்கு ஓயும்? வெற்றுத் தோள்தட்டல்களால் மக்களுக்குப் பெற்றுத்தந்து கொண்டிருப்பது ஆவேசங்களையும் சிதைவுகளையும் தவிர வேறென்ன?
மேலும் மேலும் பட்டினிகளாலும் அந்தரிப்புகளாலும் வாழ்வுத் தேவைகளை இழந்தும்தான் பொன்னுலகம் என்னும் கானல் பயணம் நடக்க வேண்டுமா? அந்தப் பொன்னுலகம் சாதாரண மக்களுக்கானதா? அல்லது எல்லா வசதிகளுடனும் வாழ்ந்தபடி எதிரியைப் பழிதீர்த்து அதில் திருப்திகொள்ள விழையும் மேட்டுக் குடிகளுக்கானதா? மக்களுக்கான மகிழ்ச்சிகரமான சுபிட்சமான வாழ்வை அளிக்கயாரோ வருவார்கள், இவர்களுக்கு அதிகாரத்தை வாங்கித் தருவார்கள், அதன்பிறகுதான் எல்லாம் என்று இன்னமும் இவர்கள் கூறிக்கொண்டிருப்பது ஏமாற்றில்லையா?
உங்கள் வீராவேசத் தினவுகளுக்காகவும், ஆதிக்க இறும் பூதுக்காகவும், நடப்புகளுக்காகவும் மற்றும் வியாபார லாபங்களுக்காகவும் மக்களைப் பலிகொடுத்துக் கொண்டேயிருக்கத் தூண்டுவதில் என்ன மனிதநேயம் இருக்கிறது? நீங்களே மக்களின் அவலங்களுக்காகக் கண்ணீர் சிந்துவது போலவும் குமுறுவது போலவும் காட்டி ஏமாற்றி வருவதில் என்ன உண்மை இருக்கிறது? வன்முறை உணர்வுகளைத் தூண்டிவிட்டுக் கொண்டே மக் களை வதைபடவிட்டு, வெளியாருக்கு அதை விற்பது என்ன நேயம்?
வன்முறையும் ஆவேசமும் பழியுணர்ச்சியும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய பொற்காலத்தை மீட்டெடுக்கும் தாகங்களும், மற்றவர்களை நிராகரிக்கும் ஏகப்பெருமிதங்களும், இணங்கிப் போவதில் இசைவின்மையும், அவநம்பிக்கையும் நம்மை வாழச் செய்வதற்குரிய வழிகளைத் தேர்ந்துகொள்ளத் தடையாக இருப்பவை. மீண்டும் மீண்டும் அழிவுச் சுழலுக்குள்ளேயே நம்மைக் கொண்டு சேர்ப்பவை.
நம் மனோபாவத்தின் அடிப்படைகளை மாற்றிக் கொள்ளாமல் நாம் மீட்சி பெற முடியாது. வீம்பும், பகையுணர்வும், முட்டாள்த்தனமான ரோசங்களும் நம் சமூகத்தை மேலும் மேலும் சிதைத்துவிடுவதற்கே உதவும்.
மக்களை வாழ விடுவதற்கும், போரின் காயங்களிலிருந்து அவர்கள் விரைவாக மீண்டு வருவதற்கும், வாழ்வைத் திருத்தியபடியே அரசியலுரிமைக்குச் செல்வது பற்றியும்தான் நாம் இன்று யோசிக்க வேண்டும். வாழவிடாமலே சர்வதேசம் வந்திறங்கும் எதிர்பார்ப்பை விதைத்து விட்டு வீட்டில் உறங்குவதற்கல்ல.
0 comments :
Post a Comment