யாழ்ப்பாணத்தில் தினக்குரல் பத்திரிக்கை மீதான தாக்குதல் தொடர்பில் என்ன? சொல்கிறார்கள்...
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தினக்குரலின் பத்திரிக்கைகள் யாழ்.புத்தூர் பகுதியில் வைத்து தீயிட்டுக் கொழுத்தப்பட்டதோடு அதன் வினியோகப் பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. இச்சம்பவம் இன்று அரசியல்வாதிகளுக்கு பெருந்தீனியாக அமைந்துள்ளது. அந்த வகையில் இதைக் குறித்து ஒவ்வொருவரும் சொல்லுகிறார்கள்.
மனோ கணேசன் வெளியட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு தந்த உறுதிமொழிகளின்படி கற்றுக்கொண்ட ஆணைக்குழு செய்துள்ள சிபாரிசுகளை முறையாக நிறைவேற்றி வருகிறோம் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகத்துக்கு சொல்லி வருகிறார். இப்போதும் இதற்காகவே இங்கிலாந்துக்கு ஓடோடி போயுள்ளார். இந்நிலையில் தான், யாழ் தினக்குரல் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது புத்தூர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மூலம் யாழ்ப்பாணத்தில் இன்று ஆயுதக்குழு செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு செய்துள்ள மிக முக்கியமான ஒரு சிபாரிசு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
அதேபோல் ஊடகத்துறையாளரின் பாதுகாப்பு தொடர்பிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு செய்துள்ள முக்கியமான ஒரு சிபாரிசு மீண்டும் ஒருமுறை மீறப்பட்டுள்ளது. மார்ச் மாதம் நடக்க இருக்கும் ஐநா மனித உரிமை குழு கூட்டத்தில் வாக்களிக்க இருக்கும் நாடுகளின் கொழும்பு தூதுவர்கள் இந்த உண்மை நிலவரத்தை கவனத்தில் எடுக்க வேண்டும்.
தமிழ் ஊடகத்துறையை சார்ந்தவர்கள் தாக்கப்படுவதை நாம் இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.
சட்ட விரோத ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு அவை கலைக்கப்பட வேண்டும் எனவும் ஊடகதுறையினரின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும் எனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறுகிறது.
இந்த ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நிறைவேற்றுவோம் என சொல்லித்தான் கடந்த வருடம் இந்த அரசாங்கம் கொஞ்சமாவது தப்பி பிழைத்தது.
இந்நிலையில் இன்று இந்த உறுதிமொழிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதை உலகம் பதிவு செய்து கொள்கிறது. நமது மக்கள் கண்காணிப்பு குழு உட்பட மனித உரிமை மற்றும் ஊடக அமைப்புகள் இந்த உரிமை மீறல்களை பதிவு செய்து உலகத்துக்கு அறிவித்துள்ளன.
உரிமைகளை நீங்கள் அப்பட்டமாக மீறிவிட்டு, உலகத்துக்கு புகார் சொல்கிறோம் என எம்மை குற்றம் சாட்ட வேண்டாம் என அரச தரப்புக்கு சொல்கிறேன். யாழ்ப்பாணம் இன்று முழுக்க, முழுக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இராணுவத்தை மீறி அங்கே பொலிஸ் துறை கூட செயல்பட முடியாது. எனவே இந்தவிதமான தாக்குதல் சம்பவங்கள் இராணுவத்துக்கு தெரியாமல் நடக்க முடியாது. இராணுவம் இதை நேரடியாக செய்யாவிட்டால், சட்டவிரோத ஆயுதக்குழுக்கள்தான் இதை செய்திருக்க வேண்டும்.
இந்த ஆயுதக்குழுக்களுக்கும் இராணுவத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? சட்ட விரோத ஆயுதக்குழுக்கள் இன்னும் யாழ்ப்பாணத்தில் ஏன் இருக்கின்றன. ஊடகங்கள் யாழில் சுதந்திரமாக எழுதி, அச்சடித்து, விநியோகிக்கப்பட முடியாதா இந்த கேள்விகளுக்கு விடைகளை அரசாங்கம் உலகத்துக்கு சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை
யாழ். புத்தூர்ப் பகுதியில் தினக்குரல் பத்திரிகை நிறுவன பணியாளர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு, பத்திரிகைகள் எரியூட்டப்பட்ட மனித நேயமற்ற தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்
ஊடகங்களின் சுதந்திர குரல்களை ஒடுக்கும் வகையில்; தொடர்ச்சியான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு; வருவதுடன், கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத ஜனநாயக விரோத சக்திகளின் வன்முறைத் தாக்குதலாகவும், ஊடக சுதந்திரத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் இதனை நாம்; கருதுகின்றோம்.
பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் செய்திகள் மற்றும் கருத்துக்களில் முரண்பாடுகள் காணப்படின், அவை சட்டரீதியான அணுகுமுறைகளுடனேயே கையாளப்பட வேண்டும். மாறாக வன்முறையின் மூலம் தீர்வினை பெற்றிட முடியாது.
எமது நாட்டில் தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதான வன்முறைகள் நீடிக்கின்ற போதும் இவற்றுடன் தொடர்புடையோர் கைது செய்யப்படாதது கவனத்திற்குரியதோர் விடயமாகும். தினமுரசு ஆசிரியரும், ஊடகவியலாளருமான நடராசா அற்புதராசா(றமேஸ்) உட்பட பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் அவற்றை கண்டிக்காது மௌனித்ததன் விளைவே இன்றும் ஊடகங்கள் மீதான வன்முறைகள் நீடிப்பிற்கு காரணமாய்; அமைத்துவிட்டது.
எனவே இடையறாது ஊடகப் பணியாளர்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தொடரும் அராஜகமான, கோழைத்தனமான தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை
ஊடகவியலாளர்களும், ஊடக ஊழியர்களும் தாக்குதல்களுக்கு உள்ளாவதும், மிரட்டப்படுவதும் இலங்கையில் அதிகரித்துள்ளதை அண்மைக்கால நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன.
குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் ஒரு வாடிக்கை நிகழ்வாகவே மாறிவிட்டுள்ள நிலைமை தோன்றியுள்ளது.
வடக்கு - கிழக்கு பகுதிகளின் உண்மை நிலவரங்களையும், அன்றாடம் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அடக்குமுறைகளையும், துன்பங்களையும் வெளி உலகுக்கு தெரியப்படுத்தும் பணியை தமிழ் ஊடகங்களே துணிவுடனும், நேர்மையுடனும் செய்துவருகின்றன என்பதே இவ்வாறான தாக்குதல்களுக்கு முதன்மையான காரணமாகுமென்பதில் ஐயமில்லை.
குடாநாட்டில் எங்கும் எப்போதும் படையினரின் பிரசன்னம் இருக்கும்போது தாக்குதல்களை நடத்தியவர்கள் யாரென தெரியாதென்பது முழுப்பூசணியை சோற்றுக்குள் மறைப்பதற்கு ஒப்பானது.
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைகளின் பின்னருங்கூட நிலைமைகள் இவ்வாறே தொடர்வதென்பது அரசின் அதிமெத்தனப் போக்கையே காட்டிநிற்கிறது.
அண்மையில் தகவல் சுதந்திரத்திற்கான எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கான அமைப்பு நாடுகளுக்கான பத்திரிகை சுதந்திர தர வரிசையில் இலங்கை 163வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதாக உலகநாடுகளுக்கு உறுதியளிக்கும் அரசு, ஊடகங்களின்மீதான இவ்வாறான தாக்குதல்களை தடுத்துநிறுத்தத் தவறுவது அதன் மீதான அவநம்பிக்கையை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
ஊடக சுதந்திரம் மறுக்கப்படும்போது ஒட்டுமொத்த ஜனநாயக உரிமைகளுமே மறுக்கப்படுகிறது. இதனை நாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் இத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறை இனங்கண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியிட்டுள்ள அறிக்கை.
யாழ். தினக்குரல் பத்திரிகையின் விநியோகஸ்தர், இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஊடகத்துறையினருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கும் இதன் மூலம் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கடந்த 10வருடங்களுக்கும் மேலாக குறிப்பாக யுத்தத்தின் பின்னரான கடந்த 3 வருடங்களில் யாழ். தினக்குரல் தமிழ் மக்களுக்கு ஆற்றிக்கொண்டிருக்கும் ஊடகப்பணி அளப்பரியது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், இராணுவ நெருக்குவாரங்கள் குறித்து, தற்துணிவோடு வெளிப்படுத்தி நடுநிலை தவறாத தேசிய நாளிதழ் என்ற பெயரையும் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்தது.
அதற்காகவே இன்று இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நாங்கள் உணர்கின்றோம். கருத்துக்களை கருத்துக்களால் தோற்கடிக்க முடியாதவர்கள், உண்மையை விரும்பாதவர்கள் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவேண்டும்.
இன்று நடந்த சம்பவம் மட்டுமல்ல அண்மையில் உதயன் பத்திரிகையின் விநியோகஸ்தர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான அச்சுறுத்தல்களை செய்பவர்களுக்கு நீண்ட நோக்கங்கள் இருக்கின்றன. அந்த நோக்கங்கள் எமக்குத் தெரியும்.
யுத்தமே இல்லாத நாட்டில் ஆயுதங்களுடனும், சீருடைகளுடனும் மிதப்போடு அலைந்து திரிபவர்கள் முன்பள்ளி திறப்பு விழாவிலிருந்து, கச்சேரி நிகழ்வுகள் வரை மூக்கை நுழைப்பவர்கள், இவ்வாறான சம்பவங்களை மட்டும் கண்டும் காணாததுமாக இருந்து விடுகிறார்கள். எனவே ஒன்றில் அவர்களே இந்த விடங்களை செய்கிறார்கள் அல்லது அடிவாங்குவதும் சாவதும் தமிழன் தானே என்று விட்டுவிடுகிறார்களா?
இன்னொரு பக்கம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பெருந்தகைகள் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடந்த எத்தனை குற்றங்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் எதுவுமேயில்லை. இந்த ஆபத்தான நிலையிலேயே எங்கள் இனத்தின் பயணம் தொடர்கின்றது.
எனவே யாழ்.தினக்குரல் பத்திரிகையின் விநியோகஸ்தர் தாக்கப்பட்டமை, பத்திரிகை தொகுதியும் அவரது மோட்டார் சைக்கிளும் தீயிடப்பட்டதாக அறிகிறேன். இது உலகத்திலேயே இல்லாத மிக மோசமான காட்டுமிராண்டித்தனம். இனிமேலும் சர்வதேச அமைப்புக்கள் ஊடக அமைப்புக்கள் தலையிட்டு, மரணபயத்தோடு, மக்களும், ஊடகவியலாளர்களும், பத்திரிகை ஊழியர்களும் வாழும் நிலையினை மாற்றியமைக்க முன்வரவேண்டும்.
இந்த தாக்குதல் சம்பவம் மிகமோசமான செய்தியை சர்வதேசத்திற்குச் சொல்லியிருக்கும் என நாம் நினைக்கின்றோம். இனிமேலாவது சர்வதேசம் தமிழர்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையினை உணரவேண்டும்.
பிரான்ஸ் ஊடக இல்லம் விடுத்துள்ள அறிக்கை
யாழ் தினக்குரல் பத்திரிகையின் விநியோகத்தர் மீது நேற்று வியாழக்கிழமை சிங்கள படைக் கைக்கூலிகள் நிகழ்த்திய கொலைவெறித் தாக்குதலை ஊடக இல்லம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
தமிழீழ தாயகத்தை முழுமையான படையாட்சிக்கு உட்படுத்திக் கனக்கச்சிதமாக சிங்களம் அரங்கேற்றி வரும் தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இன்றைய தாக்குதல் அமைந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ஊடகங்கள் மீது மிக மோசமான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட சிங்களத்தைப் பொறுத்த வரை இதுவொரு புதிய விடயமன்று. எனவே இதனையிட்டு நாம் ஆச்சரியமோ அன்றி அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை.
ஆனால் இறையாண்மையின் பெயரில் தொடர்ந்தும் சிங்களம் அரங்கேற்றி வரும் இவ்வாறான அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதை விடுத்து, தொடர்ந்தும் நல்லிணக்கம் பற்றி உலக நாடுகள் பேசுவது தமிழ் மக்களை வேதனையடையச் செய்கின்றது.
எனவே இதுவிடயத்தில் இனியும் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதை விடுத்து சிங்களத்தின் இனவழிப்பிலிருந்து தமிழீழ தாயக உறவுகளைப் பாதுகாப்பதற்கும், தமிழீழ தேசத்தின் அடிப்படை உரிமைகளையும், ஊடக சுதந்திரம் உட்பட தனிமனித சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கும் காத்திரமான நடவடிக்கைகளை உலக சமூகம் எடுப்பதற்கு பன்னாட்டு ஊடக அமைப்புக்கள் விரைந்து செயலாற்ற வேண்டும் என்று ஊடக இல்லம் வேண்டுகோள் விடுக்கின்றது.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிக்கையின் நிர்வாக இயக்குநருமான ஈ.சரவணபவன் வெளியிட்டுள்ள அறிக்கை
மீண்டும் ஒரு முறை ஜனநாயகத்தின் குரல் வளையை வன்முறை மூலம் நசுக்குவதற்காகவே தினக்குரல் பத்திரிகை தீயிட்டு எரிக்கப்பட்டு, அதன் விநியோகப் பணி ஊழியரும் தாக்கிக் காயப்படுத்தப்பட்டுள்ளார். நாட்டில் ஜனநாயகச் சூழலும் ஊடக சுதந்திரமும் நிலைக்கக்கூடாது என்று விரும்பும் சக்திகளே இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளன.
படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள குடாநாட்டில் தொடர்ந்தும் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்படும் இத்தகைய அடாவடிகளுக்கு மாவட்ட கட்டளைத் தளபதி என்ற வகையில் ஹத்துரு சிங்கவே பொறுப்புக் கூற வேண்டும்.
மக்களின் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில், குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில், தேவையற்ற வகையில் படைப் பிரசன்னத்தையும் பாதுகாப்பையும் அதிகப்படுத்தி, அறிக்கைகளை வெளியிட்டு நெருக்கடியான சூழலை ஏற்படுத்தும் ஹத்துரு சிங்க, ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை சார் சம்பவங்கள் குறித்து மௌனித்திருப்பது சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது.
கடந்த மாதம் ஜனவரி 10 ஆம் திகதி வடமராட்சியில் வைத்து உதயன் விநியோகப் பிரிவு ஊழியர் முட்கம்பி சுற்றப்பட்ட பொல்லுகளால் அடித்துப் படுகாயப்படுத்தப்பட்டார்.
அவரது மோட்டார் சைக்கிளுடன் உதயன் பிரதிகளும் நடு வீதியில் வைத்து எரியூட்டப்பட்டன. ஆனால் அது குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகளிலும் எதுவித முன்னேற்றமும் இல்லை.
இப்போது மீண்டும் அதே பாணியில் தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் தாக்கப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளும் பத்திரிகைப் பிரதிகளும் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த இரு சம்பவங்களிலும் ஒரே கும்பலே சம்பந்தப்பட்டுள்ளது.
வன்முறை நிகழ்ந்த விதம், முட்கம்பி சுற்றப்பட்ட பொல்லுகளாலான ஆயுதம், சம்பவத்தின் நோக்கம் என்பன இதையே தெளிவு படுத்துகின்றன. தற்போது யாழ்ப்பாணத்தில் அடக்கு முறைகளுக்கு மத்தியிலும் உண்மையின் குரலாக ஒலிக்கும், உதயன், தினக்குரல், வலம்புரி போன்ற ஊடகங்களின் குரலை இல்லாமல் செய்யும் ஒரு நிகழ்ச்சி நிரலில் அரசும், அரசுக்கு குடை பிடிக்கும் அடாவடிக்கும்பலும் திட்டமிட்டு செயற்படத் தொடங்கியுள்ளன.
அதிகார ஊதுகுழல் ஊடகங்களை மக்கள் புறக்கணித்த நிலையில், மக்கள் சார்பு ஊடகங்களை ஒடுக்குவதன் மூலமே தமது கருத்துகளை மக்களிடம் திணிக்கலாம் என அதிகாரம் சார்ந்தவர்களும், அவர்களின் அடி வருடிகளும் எண்ணுகின்றனர்.
வடமாகாணத் தேர்தலுக்கு முன்பாக தமது கருத்துகளை மக்களிடம் திணித்து, அதன் மூலம்வாக்குகளைத் தம் பக்கம் திருப்பும் மூன்றாம்தர செயற்பாடுகளிலேயே இந்தத் தரப்பினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஜனநாயக ரீதியில் ஊடகங்களையும் அவற்றின் கருத்துக்களையும் எதிர்கொள்ள திராணியற்ற இவர்கள், புறமுதுகில் குத்துவதைப்போன்று தமது கொலைக் கருவிகளின் உதவியோடு வன்முறை வழிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
பத்திரிகைகளின் விநியோகப் பிரிவினரைத் தாக்குவதன் மூலம், ஊடக துறையினரின் மனோதிடத்தை சிதைப்பதே தாக்குதலாளிகளின் நோக்கமாக இருந்துள்ளது. இது ஒரு திட்டமிட்ட உளவியல் போர். இத்தகைய உளவியல் போர் ஊடகங்கள் மீது பிரயோகிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் வௌ;வேறு வழிகளூடாக மேற்கொள்ளப்பட்ட இந்த உளவியல் போரை உண்மையின் துணை கொண்டு ஊடகங்கள் எதிர்கொண்டன.
இத்தகைய நெருக்குவாரங்களின் மத்தியிலும் தினக்குரல் பத்திரிகை தனது கொள்கையில் இருந்து விடுபடாது, ஜனநாயகத்தினதும், மக்களினதும், உண்மையினதும் குரலாக ஒலித்து வந்தது. எனவே அந்த ஊடகத்தை இது போன்ற வன்முறைகள் ஒரு போதும் சிதைத்துவிட முடியாது.
விழவிழ விதைகளாக எழுவதுபோல, இதுபோன்ற வன்முறைகள் தினக்குரல் பணியாளர்களை இன்னமும் மனோதிடம்மிக்கவர்களாக மாற்றி அவர்களின் உண்மையின் குரல் இன்னமும் உரத்த தொனியில் ஒலிக்கும்.
உலக அரங்கில் ஊடக சுதந்திரத்தில் 165 ஆவது இடத்துக்கு கடந்த வருடம் இலங்கை தள்ளப்பட்டிருந்தது. இன்னமும் விடாது தொடருகின்ற ஊடகங்கள் மீதான வன்முறைகளால் இந்நாட்டில் ஊடக சுதந்திரத்தின் நிலை மேலும் மோசமாகி விடும்.
அத்துடன் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் இது போன்ற வன்முறைகள் பெரும் தடைக் கற்களாக மாறிவிடும் அபாயம் உண்டு. ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் ஜனநாயக குரலோடு வெளிவரும் ஊடங்கள் மீது வன்முறைப் பாய்ச்சல், நிகழுமாயின் அதற்கு அரசும், அரசின் பிரதிநிதியான வடமாகாண ஆளுநரும், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியுமே மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் பொறுப்புக் கூறவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுவார்கள் என்றுள்ளது.
அரசாங்கத்தின் நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம வெளியிட்டுள்ள அறிக்கை.
யாழ். தினக்குரல் பத்திரிகையின் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தவர் மீது காடையர் கும்பல் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடும் காடையர்களையும், அவற்றின் சூத்திரதாரிகளையும் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய தரப்பினர் கைது செய்து அத்தகையோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க தவறுவார்களேயானால், விளைவு பாரதூரமானதாக அமைந்து விடுவதை தவிர்க்க முடியாமல் போகலாம்.
ஊடகச் சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் இவ்வாறான தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. இவ்வாறு ஊடகச் சுதந்திரம் இந் நாட்டில் பகிரங்கமாக மீறப்படுவது இனிமேலும் நீடிக்குமானால் உள்நாட்டில் மட்டுமல்லாது, சர்வதேச ரீதியாகவும் நாட்டிற்கு களங்கமும் அபகீர்த்தியும் ஏற்படும்.
1 comments :
Empty mouth,when it has rice (aval)
chips to munch.How it would be..?
Post a Comment