கொடுமை செய்த காதல் உலகம்!
நேற்றைய தினம் காதலர்தினக் கொண்டாட்டங்களைக் கேட்கவும் வாசிக்கவும் நேர்ந்தது. மற்றெல்லா உணர்ச்சிகளை விடவும் உணர்ச்சிபூர்வமான கொண்டாட்டம் இதில் மிகையாக இருப்பது யோசிக்க வைக்கிறது. காதல் நாயைக் கூட எதுகை மோனையுடன் குரைக்கச் செய்துவிடுகிறது என்று ஒரு ஆங்கிலப் பழமொழி கூறுகிறது.
கவிதை எழுதத் தொடங்குகிறவர்கள் எல்லோருமே காதலில்தான் ஆரம்பிப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. நேற்றுக் கேட்க நேர்ந்த கவிதைகள் எனப்படுவனவற்றின் எண்ணிக்கையைப் பார்த்த போது அப்படித்தான் தோன்றுகிறது. காதல் மனிதனை இவ்வளவு அல்லாட வைப்பதற்கு அவனது மனம்தான் காரணம் என்றால், மனித இனம் காலாகாலமாக கேட்டும் அறிந்தும் வந்த விஷயங்களால் உருவானதுதான் இந்தக் காதல் உணர்வாக இருக்க வேண்டும்.
காதல் என்பது கற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தன்மைதான். காதலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கா விட்டால் யாரும் காதல் வயப்பட்டிருக்க மாட்டார்கள் என்கிறார் ரோச்பௌகால்ட் என்பவர். அதாவது இலக்கியங்கள் மற்றும் புனைவுகளால் அது தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மாறாக, காதல் நமது உடலிலிருந்து தோற்றம் பெறுகிறது என்றால், அதாவது ஓமோன்கள் மற்றும் உடலின் சுரப்புகளால் அந்த உணர்ச்சி தூண்டப்படுகிறது என்றால் அது காமத்தின் ஒரு வடிவமாக இருக்க வேண்டும். காதல் பற்றி ஈ.வெ.ரா.பெரியார் சொல்லியிருப்பதும் நம் கவனத்திற்குரியது. 1931 ஆம் ஆண்டு குடியரசு இதழில் அவர்எழுதியது இது:
காதலுக்கு ஏதேதோ கற்பனைகளை கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்தி விட்டதால் ஆண் பெண்களும் தாங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டுமென்று கருதி, எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வேஷம் போட்டு கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக தூங்கினால் கால் ஆடுமே என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்கவேண்டுமென்று கருதி காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படி பெண்கள் இப்படி இப்படி இருப்பதுதான் கற்பு என்றால் பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும் உண்மையான காதல்களானால் இப்படி இருப்பார்களே என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அதுபோலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள்.
இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தை யெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும். ஆகவே ஆசையைவிட, அன்பை விட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை. அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல் தானே ஒழிய வேறில்லை.
ஆனால் அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும், திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல. காதலர் தினக் கொண்டாட்டங்கள் வேறு வேறு வர்த்தக நோக்கங்களுக்காக பெருப்பிக்கப்பட்டிருந்தாலும், மனிதனின் சந்தோஷத்திற்காக இருக்கும் காதலை கொண்டாடுவதில் தப்பில்லை. காதல், இந்தக் கொடுமையான உலகிலிருந்து நம்மைத் தனிப்படுத்தி நமக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உணரப்படுவதால், அது கொண்டாடப்படுகிறது என்கிறார் டயன் அக்கர்மென். அது சரிதான்!
0 comments :
Post a Comment