Thursday, February 7, 2013

வேகத்தின் ..!!!! விபரீதம் உங்கள் முன்..!!!!!

புற்றிலிருந்து ஈசல்கள் பெருகி வருவது போல, நமது தெருக்களில் பெருகிவரும் வாகனங்களின் தொகையைக் காண மலைப்பாக இருக்கிறது. போதாக்குறைக்கு லொறிகளிலும் கெண்டெய்னர்களிலும் ஏ-9 வீதியால் ஒவ்வொரு நாளும் ஏற்றி வந்துகொண்டிருக்கும் வாகனங்களைப் பார்த்தால், இவையும் ஓடுவதற்கு நம் வீதிகளில் இடமிருக்கிறதா என்ற கேள்வியே எழுகிறது.

யாழ் மாநகரில் மட்டும் என்றில்லை, நம் சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் கூட வாகன நெரிசலில் வீதிகள் மூச்சுத் திணறுகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள். ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருப்பது சர்வசாதாரணமாக உள்ளது.

வாகனங்களை இறக்கி விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கின்றன. வாகனம் வாங்குவதற்கு வட்டியில்லா கடன் உதவி, அதனையும் மாதத் தவணைகளில் செலுத்துவது போன்ற வசதிகளை வாகன விற்பனையாளர்களே செய்து கொடுக்கின்றனர். இதன் காரணமாக மிகச்சுலபமாக வாகனங்களை வாங்கி உபயோகிக்கின்றனர் மக்கள்.

போக்குவரத்து நெரிசல் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கிறது. குறிப்பாக பெரியாஸ்பத்திரிக்கு முன்னால் இப்போதே ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை. அங்கேயே ஆஸ்பத்திரி வளாகம் மேலும் விரிவாக்கப்படுவதோடு, சூழலில் ஹோட் டல்கள், கடைத்தொகுதிகளும் புதிதாக எழுப்பப்பட்டு வருகின்றன. அவசர உதவி வாகனங்கள்கூட சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குச் செல்வது இன்றைய சூழலில் இயலாத ஒன்றாகவே உள்ளது.

வாகனங்களின் நெரிசல் அதிகரிக்குமாயின், அதற்கு ஈடாக வீதிவிபத்துகளும் பெருகும். இத்தகைய விபத்துகளில் பெரியவர் களை விட குழந்தைகளும், மாணவர்களும், இளைஞர்களுமே அதிகம் பலியாகின்றனர். உலக அளவில் மூன்று நிமிடத்துக்கு ஒருமுறை சராசரியாக இரண்டு குழந்தைகள் வீதம் வீதிவிபத்தில் உயிரிழப்பதாகக் கூறுகின்றனர். அடுத்த ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை மேலும் இரண்டு மடங்காக உயரும் என்று கருதப்படுகிறது.

வாகனங்கள் பெருக எரிபொருள் தேவையும் அதிகரிக்கிறது. அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த் திக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, அனைத்து விலை வாசியும் விஷம்போல் ஏறுகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு வீதிகளைத் திருத்தியும் அதிகரித்தும் பல்வேறு விதமான போக்குவரத்து விதி முறைகளைப் பின்பற்றினாலும், அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் சமாளிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

வீதியமைப்பு வசதிகளைப் பெருக்கும் அதேநேரத்தில் வாகனப் பெருக்கத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள வீதிகளைப் பயன்படுத்துவோருக்குக் கட்டணம் நிர்ணயித்தும், வாகனங்களை நிறுத்துவதற்கும் நேரத்துக்குத்தக்கபடி கட்டணம் நிர்ணயம் செய்யும் வெளிநாட்டு நடைமுறைகளை நாமும் பின் பற்றலாம்.

இதனால், சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பொது வாகனங்களைப் பயன்படுத்துகிற கட்டாயத்துக்குத் தள்ளப்படுவர். அதேசமயம், பொதுப் போக்குவரத்து வாகனங்களின் வசதியை நவீனப்படுத்தியும் விரிவுபடுத்தியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இலகுவாக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் சொந்தமாக வாகனங்கள் வாங்குவதைக் குறைத்துக்கொள்வர்.

தனியார் வாகன பாவனை பெருகுவதால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும் நெருக்கடி உருவாகும் என்பதோடு, அத்தனை வாகனங்களிலிருந்தும் வெளிவரும் புகையால் சூழல் மாசடைந்து, பூமியின் வெப்பம் அதிகரித்து, அதனால் வரப்போகும் ஆபத்தையும் விரைவுபடுத்துகிறோம்.

1 comments :

Anonymous ,  February 7, 2013 at 9:12 PM  

Why not the Government increase the road tax to a certain extent.In addition to this each VC TC UC Municipal areas impose more taxes on the vechicle owners.This money can be taken to repair the roads also to appoint special police personnel to control the traffic system.Spot fines,withdrawing the driving licence back from the reckless drivers and riders are very essential.If you don't take strict measures on this drivers and riders
defnitely "Devils Might control the streets"and you can see the blood stream just flooding on the streets.Just crying is not a solution.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com