Monday, February 4, 2013

நீங்கள் வழங்கும் வீடுகளில் எங்களுக்கு பாரபட்சம் காட்டுறாங்கள். இந்திய தூதுவரிடம் சித்தார்த்தன் முறையீடு.

வவுனியா மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்ட ஒதுக்கீட்டில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேற்றையதினம் இந்திய தூதரக உயரதிகாரிகளை இந்திய தூதரகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது கருத்துரைத்த இந்திய தூதரக அதிகாரிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின்கீழ் வீடுகள் கிடைக்கும். இதனை நாம் உறுதிப்படுத்துவோம். வீடமைப்புத் திட்ட ஒதுக்கீடு தொடர்பில் எந்தவொரு இனத்திற்கும் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது. இந்த விவகாரத்தினால் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மேற்படி வீடமைப்புக்கான தெரிவுகுறித்து யார் திட்டங்களை முன்வைத்தாலும் நாம் சுயாதீனமாக ஆராய்ந்;து பார்த்து தகுதியுடையவர்களுக்கே வீடமைப்புக்கான கொடுப்பனவுகளை வழங்குகின்றோம். ஒரு அரசியல்வாதிக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ நன்மைபயக்கும் வகையில் வீடமைப்புக்கான தெரிவுகள் இடம்பெறமாட்டாது. யுத்தத்தின்போது முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் வெலிஓயா பகுதியில் சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் உரியவகையில் வீடமைப்புத்திட்டத்தில் இடமளிக்கப்படும். வடக்கைப் பொறுத்தமட்டில் 90வீதமான வீடுகள் தமிழ் மக்களுக்கே வழங்கப்படும். ஏனெனில் யுத்தத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களேயாவர் என கூறியுள்ளனர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், யுத்த காலத்தின்போதும் முஸ்லிம் மக்கள் யாழ். குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும் வன்னியில் தமிழ், முஸ்லிம் உறவு சீர்குலையாது பாதுகாக்கப்பட்டது. தற்போதைய நிலையிலும், இத்தகைய உறவைப் பாதுகாப்பதற்கு அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சுயநல அரசியலுக்காக மக்களை முரண்பட வைப்பதற்கு அரசியல்வாதிகள் முனைவது தவறானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com