வடமாகாணத்திலுள்ள அரச காணிகளின் அதிகாரம் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி வசம்!
வட மாகாணத்திலுள்ள சகல அரச காணிகளையும் பயன்படுத்துவது தொடர்பில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய நடைமுறை அமுல் படுத்தப்படவுள்ளது. இந்த நடைமுறை தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபக் கடிதம் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்ட செயலாளர்களுக்கும், சகல பிரதேச செயலாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கிலுள்ள சகல அரச காணிகளையும் பயன்படுத்துவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறிசியின் விசேட அனுமதியை கட்டாயம் பெறப்பட வேண்டும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச காணிகளை பயன்படுத்துதல், வாடகை, குத்தகைக்கு, முதலீடுகளுக்காக கொடுத்தல் மற்றும் இது வரை காலம் வழங்கப்பட்ட காணிகளை மீளப் பொறுப்பேற்றல் போன்ற சகல சந்தர்ப்பங்களிலும் வட மாகாண ஆளுநரின் விசேட அனுமதியை பெற்றே கொடுத்தல் மற்றும் மீளப் பெறவேண்டும் என்றும் ஆளுநரின் கையொப்பமிடப்பட்ட சுற்றறிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாண அரச காணிகள் தொடர்பில் முறையாக ஒரு நடைமுறையை கையாளும் பொருட்டே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய மேற்படி நடைமுறையை கண்டிப்பாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.வட மாகாணத்திலுள்ள இராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் பொலிஸாரும் அரச காணிகளை பயன்படுத்துவது தொடர்பில் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய அரச காணிகளை வாடகை, குத்தகை, அலுவலக செயற்பாடுகள், முதலீட்டு நடவடிக்கைகளுக்கு வழங்குபவர்கள் பிரதேச கிராம சேவகர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபரின் ஊடாக தனது அனுமதியை கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், இவ்வாறு முறையான அனுமதியை பெற்றுக் கொள்ள தவறும் பட்சத்தில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடைமுறை தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்ட செயலாளர்களுக்கும் தொலைபேசி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன். எதிர்வரும் 6ம் திகதி ஆளுநர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு மேலதிக விளக்கங்களை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை வட மாகாணத்தில் ஏற்கனவே வாடகை, குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள அரச காணிகள் தொடர்பில் விரிவான விபரங்களை திரட்டி அது தொடர்பில் ஆராய்ந்து அவைகள் உரிய முறையில் வழங்கப்படாத இடத்து அது தொடர்பில் சரியான முறையை கையாண்டு தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் தான் தீர்மானிக்கவுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மேற்படி நடவடிக்கையின் மூலமே அரச காணிகளின் பயன்பாடுகள் தொடர்பில் உரிய முறையில் கண்காணிக்க முடியும் என்றும் காணி விடயங்கள் தொடர்பில் எழும்பிய பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும் முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment