இனவாதத்திற்கு இங்கு இடமில்லை, பிளவுகளை ஏற்படுத்த விரும்புபவர்களே அதற்குக் காரணம்....! - சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி
'இனவாதத்திற்கோ மதவாதத்திற்கோ இலங்கையில் எவருக்கும் இடம் கிடையாது. அவ்வாறு செய்பவர்கள் நாட்டைப் பிரிப்பதற்கு காரணமாக நிற்பவர்கள் என்று கருதலாம். அன்று போலவே இன்றும் நாளையும் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் ஒன்றாக வாழவேண்டும்’ இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றும் போது கருத்துரைத்தார்.
சிங்களம் மற்றும் தமிழ்மொழியில் 18 நிமிடங்கள் உரைநிகழ்த்திய ஜனாதிபதி, உரையில் ‘நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை கட்டிக் காப்பது மிக முக்கியம் என்றும், தாய்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு முன்னேற முனைப்போடு ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இனங்களுக்கேற்ப நாட்டைக் கூறுபோடுவது நடைமுறைச் சாத்தியமற்றது என்றும் எல்லோரும் ஏதோ ஒரேவகையில் உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பெற்றுள்ள சுதந்திரத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் உரிமை மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பது எதிர்க்கட்சியினதும் கடமையாகும் என்பதைக் குறித்துக் காட்டுவதற்காக பௌத்த உபதேசத்தில் வருகின்ற கெடகிரில்லவின் கதையை எடுத்துக் காட்டினார்.
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கத்துவம் பெற்ற நாடாகும். அதனால் அதற்கு மரியாதை செலுத்துவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன் கௌரவத்திற்குரிய நாடாக செயற்படவேண்டியது கடமை என்றும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கெதிராக பிற நாடுகள் மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான ஒரே வழி நாட்டை துரித கதியில் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாகும். ஊடகங்களும், விமர்சகர்களும் மட்டுமல்லாது யார் என்ன சொன்னாலும் இந்த நாட்டுக்கு எதிராகவுள்ள பிற நாடுகள் எடுத்துச்செல்லும் கட்டுக் கதைகளை அழித்தொழிப்பதற்குச் சிறந்த வழி அபிவிருத்தியும் அது சார்ந்த செயற்பாடுகளுமே என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
திருகோணமலை பற்றி முழு உலகும் தெரிந்துகொள்வதற்குக் காரணமாக அமைந்தது அக்காலத்தில் கோகண்ண துறைமுகமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்டதன் பின்பு, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கத்துவம் பெற்ற நாடாக இலங்கை இருந்துவருகிறது. ஐநாவின் குறிக்கோள்களுக்கு மரியாதை செலுத்துவதோடு கைகோர்த்திருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அல்லலுற்ற நாடு இலங்கை என்றும், 1948 இல் இலங்கை சுதந்திரம் அடையும்போது தேசபிதா டீ.எஸ்.சேனாநாயக்கா விடுத்த செய்தியையும் ஜனாதிபதி அங்கு நினைவுறுத்தினார்.
‘’சுதந்திரத்தை நாம் ஏன் பெற்றுக்கொண்டோம் தெரியுமா? துன்பத்தைக் குறைத்து இன்பத்தைக் கூட்டிக் கொள்வதற்காகவே’ என்று தேசபிதா டீ.எஸ்.சேனாநாயக்கா அன்று குறிப்பிட்டதாக ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
எதுஎவ்வாறாயினும் இலங்கைத் திருநாடு மிக துன்புற்றே சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது.. அதனைக் பாதுகாப்பது அனைத்து அரசியல் கட்சிகளினதும் கட்டாயக் கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.
அன்று பொதுத் தெருக்களில் பொதுமக்கள் மிகவும் பயந்து மரண பயத்துடன் பயணித்ததாகவும், இன்று அவ்வாறான ஒரு நிலை இல்லை என்றும், சுதந்திர நாட்டில் சுதந்திரமாக வாழும் உரிமை இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு, அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment