மாத்தளையில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் ஆணி, இரும்பு துண்டுகள் - ஜேவிபி அதிர்ச்சித் தகவல்!
மாத்தளை கொலைக்கு முழு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தளையில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் கை, கால் துண்டு துண்டாக காணப்படுவதாகவும் அது இயற்கை அல்ல எனவும் எலும்புக்கூடுகளில் ஆணி, இரும்பு துண்டுகள் அடிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சாட்சி உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
´மாத்தளையில் பலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடம் தற்போது தோண்டி எடுக்கப்படுவது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. 1988-89 காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வ, உத்தியோகபூர்வற்ற கொலை குழுக்களை வைத்திருந்தது.
பொலிஸ் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டு பல படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுவதும் இருந்த அரசாங்க அமைச்சர்களின் வீடுகள் குறிப்பாக புத்தளம், மாத்தறை, காலி, கம்பஹா வீடுகள் கொலைக்களமாக, வதைக்களமாக காணப்பட்டன.
எம்பிலிபிட்டி சூரியகந்தயில் 1994ம் ஆண்டு ஒரு மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. குருநாகல் - கொஸ்கெல, மாத்தறை - ஏலியகந்த போன்ற பகுதிகளிலும் மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 60,000 இளைஞர், யுவதிகளை கொன்றதற்கு சாட்சி தோன்றியவண்ணமுள்ளது.
மாத்தளையில் இதுவரை 200 பேரின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைக்குழி இதுவாகும். இந்த உடல்கள் 88-89ம் ஆண்டு காலங்களில் புதைக்கப்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து நாட்டுக்கு உண்மையான தகவல் வெளியிடப்பட வேண்டும்.´
இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment