மன்னாரில் இருந்து முல்லை நோக்கி
இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் நாளாந்தம் சராசரி 3000 இந்திய மீனவ ரோலர்கள் அத்துமீறி நுழைகின்றன. இதனால் மாதாந்தம் 21 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான இலங்கை வளங்கள் அழிவடைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் வி.சகாதேவன் மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து முல்லைத்தீவுவரை கரையோரமாக பாதயாத்திரைப் பேரணியொன்றை நடத்தி வருகிறார்.
சுமார் 590 கிலோ மீற்றர் தூரம் பாதயாத்திரையாகச் சென்று மீனவக் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்வதுடன், அத்துமீறிய மீன்பிடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கண்டித்து சாகும் வரை யிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்த இவரின் முயற்சி தோல்வியடைந்த நிலையில் இவ்வாறான பாதயாத்திரை பேரணியொன்றை ஆரம்பித்துள்ளார்.
தற்போது நாளாந்தம் சராசரியாக 3000 இந்திய ரோலர் படகுகள் அத்துமீறி நுழைகின்றன இதனால் மாதமொன்றுக்கு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான வளங்கள் அழிவடைவாதாக தாம் நடத்திய ஆய்வொன்றின் மூலம் இது கண்டறியப்பட்டதாக பாதயாத்திரை மேற்கொண்டுவரும் சகாதேவன் இலங்கை நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
தொடர்ந்து தனது பாதயாத்திரை பேரணி குறித்து எம்மிடம் கருத்தைப் பகிர்ந்துகொண்ட சகாதேவன், இந்திய மீனவர்களின் அத்துமீறலால் எமது கடல்வளம் அழிக்கப்படுகின்றது என்பது மீனவ மக்களுக்கு விளங்கவில்லை. கடலில் மீன் இல்லையெனத் திரும்பிவிடுகின்றனரே தவிர, கடல்வளம் அழிக்கப்பட்டதால் மீன் உற்பத்தியாவதில்லையென்பதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. இது குறித்து முதலில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு மீனவக் கிராமங்களிலும் மீனவர்களின் கண்ணீர் கதையையே கேட்கவேண்டியுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த தமிழ் அரசியல்வாதிகள் பின்னடிக்கின்றனர். இந்தியாவில் தாம் செய்திருக்கும் முதலீடுகளுக்குப் பாதிப்பு வந்துவிடும் என்பதற்காக அவர்கள் வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றனர்.
குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீனவர்களுக்குக் காணப்படும் பாஸ் கெடுபிடிகளை உயர்த்திப் பிடித்துக் கதைக்கின்றனர். எனினும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை இதுவரை கண்டிக்கவில்லை.
இந்த நிலையிலேயே மீனவ மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டிக்கப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு தீர்மானித்தது. இதுவிடயம் குறித்து ஒன்றரை இலட்சம் மீனவர்களின் கையெழுத்துக்களைப் பெற்றுக்கொள்ளவும் உள்ளோம்.
இந்த பாதயாத்திரைப் பேரணியில் நான் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் மீனவ மக்கள் பூரண ஆதரவைத் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் உயர்மட்டத்திற்குக் கொண்டு தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment