‘முஸ்லிம் அடிப்படை வாதிகளைத் தண்டிப்பதை நாங்கள் எதிர்க்க மாட்டோம்’ என்கிறார் என்.எம். அமீன்
முஸ்லிம் சமுகம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டுக்கு எதிராகத் துரோகம் இழைக்கவில்லை என்று குறிப்பிடும் முஸ்லிம் தலைவர்கள், இரகசியமாக செயற்படுவதாகக் கூறும் ஜிஹாத் இயக்கம் பற்றிப் பரவலாகப் பேசப்படுவது பொய்யென்றும் மறுத்துரைக்கின்றனர்.
முஸ்லிம்களுக்கெதிராக அண்மைக்காலமாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள், மற்றும் சில பௌத்த இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன், எவ்விதத் தெளிவுமில்லாமல் இஸ்லாமியரின் கலாச்சாரத்தை விமர்சிக்க வேண்டாம் என்று இலங்கை வாழ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘முஸ்லிம்கள் இந்நாட்டில் ஏன் ஜிஹாத் செய்யவேண்டும்? நாங்கள் இந்நாட்டில் ஒருபகுதியைக் கேட்க மாட்டோம். எங்கேனும் இந்நாட்டில் வீரதிரம்மிக்க பாதுகாப்பு அமைப்புள்ளது. அதன் மூலம் அந்த இயக்கத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்’ என்றும் என்.எம். அமீன் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களிடையே அடிப்படைவாதிகள் இருப்பார்களேயானால் அவர்களுக்குத் தண்டனை வழங்குவது பற்றி எங்களது சங்கம் எதிர்ப்பைத் தெரிவிக்க மாட்டாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சந்தைப்படுத்தப்படும் இறைச்சிகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலம் ஜம்இய்யத்துல் உலமா அதிக வருமானத்தை ஈட்டுகிறது எனும் குற்றச்சாட்டை முஸ்லிம் தலைவர்கள் மறுத்துரைத்தனர்.
ஹலால் சான்றிதழ் வழங்குவது ஒருமுறைமை என்றும் அது வியாபாரமே அல்ல என்றும் தெளிவுறுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அது முழுமையாக முஸ்லிம்களுக்கான சேவேயே என்றும் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களுக்கெதிராக நாட்டில் உருவெடுத்துள்ள குழப்பநிலையை முடக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற திட்டங்கள் பற்றி நாங்கள் திருப்தியுறுகிறோம் என்றும் தலைவர்கள் குறிப்பிட்டனர்.
(கலைமகன் பைரூஸ்)
1 comments :
முஸ்லிம்களிடையே அடிப்படைவாதிகள் என்றால், முஸ்லிம்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியது கட்டாயக் கடமை என்றும், பெண்கள் உடல் உறுப்புக்களை மறைப்பது கட்டாயம் என்றும், மீசை கத்தரித்து தாடி வைப்பது கட்டாயம் என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியான அடிப்படைவாதம் சமீபத்திலே முஸ்லிம்மக்களுக்கு பரப்பபட்டு வருவதை எவரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.எனவே கூடுதலான இலங்கை முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்பதே உண்மையாகின்றது.
இலங்கையில் வளர்ந்து வரும் முஸ்லிம் விரோத உணர்வுகளுக்கு நமது முட்டாள்தனமான நடத்தைகளே முதல் காரணம்.
Hakeem
Post a Comment