இலங்கையை கழுமரத்தில் ஏற்ற நாளை கூடுகிறது ஜெனீவா கூட்டத்தொடர்....
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடர் நாளை (25) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள பேரவைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரில் கலந்து இலங்கையைப்பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு செல்லவுள்ளது.
இலங்கை சார்பாக அமைச்சர் மகிந்த சமரசிங்க இம்மாதம் 27 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையகத்தில் உறுப்புரிமை பெற்றுள்ள நாடுகளுடன் உரையாற்றவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் கூட்டத்தொடரில் பங்குகொள்ளவுள்ள குழுவினரில் ஜெனீவாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஸ்ரீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் கலாநிதி ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட வெளிநாட்டு அமைச்சின் உறுப்பினர்கள், சட்ட மாஅதிபர் திணைக்கள உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, இலங்கை தொடர்பில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாகவும் அதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இலங்கைக்கு வருவதற்கு அனுமதியளித்தல், நீதிமன்றத்திற்குள்ள இறைமையை உறுதிப்படுத்துதல், இலங்கைக்கு எதிராகவுள்ள போர்க்குற்ற விமர்சனங்கள், ஊடக சுதந்திரம் போன்றன உள்ளடங்கவுள்ளன.
குறித்த பிரேரணை தொடர்பில் அமெரிக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. என்றாலும் இதற்கு முன்னர் நடந்த கூட்டத்தொடர்களில் இலங்கை நிராகரித்த பிரேரணைகளே அவை என ஜெனீவாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
(கேஎப்)
0 comments :
Post a Comment