Tuesday, February 26, 2013

இந்தக்குழந்தைக்கு என்ன தெரியும்? பீமன்

இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் நீடித்துச் சென்ற ஆயுத வன்முறையின் அகோரம் இனம் மதம் மொழி பேதங்களுக்கு அப்பால் லட்சத்திற்கு மேற்பட்ட விலைமதிப்பற்ற உயிர்களை பலி கொண்டிருக்கின்றது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

இந்நிலையில் இத்தனை உயிர்ப்பலிகளுக்கும் பிரதான காரணகர்த்தாக்களில் ஒருவரான பிரபாகரனின் மகன் பலாச்சந்திரன் உயிருடன் உள்ளதும், உயிரிழந்த பின்னரும் என இரு படங்கள் வெளியாகியிருக்கின்றது. இப்படத்தினை வெளியிட்டுள்ளவர்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு சுட்டுகொலை செய்யப்பட்டிருக்கின்றார் என தெரிவித்திருக்கும் கருத்துக்கள் பலரையும் பலவிதமான விவாதங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றது.

பிரபாகரனின் மகன் என்பதற்காக அந்தச்சிறுவன் கொலை செய்யப்பட்டிருந்தால்..

கொலைஞர்களுக்கு சொல்லக்கூடியது யாதெனில் ..

பிரபாகரன் பாலச்சந்திரனின் வயதை ஒத்த எத்தனை ஆயிரம் குழந்தைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகளை கட்டிவிட்டு அவர்களை பலி கொடுத்தார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.

தனது வயதை ஒத்த எத்தனை நூறு பாலகர்களின் உடம்பில் வெடிகுண்டுகளை கட்டி தனது தந்தை கொலைக்களம் அனுப்பியிருப்பார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

தனது தந்தை தன் வயதை ஒத்த எத்தனை சிறார்களை படுத்த பாயில் எல்லக்கிராமங்களில் கொலை செய்திருப்பார் என்பதனையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.

பிரபாகரன் தனது பொய்பிரச்சராங்களுக்கா பாலச்சந்திரனின் வயதை ஒத்த பாலகர்களை கொடுரமாக கொலை செய்து அவற்றை காட்சிப்படுத்திய சம்பவங்களை அன்று புலிகளின் ஊடக பிரிவு பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர் பின்னாட்களில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இவ்வாறான தொலைகள் எல்லை கிராமங்களில் மாத்திரமல்ல தமிழர் குடிமனைகளுக்குள்ளேயே இடம்பெற்றதாகவும் விடயங்களை புலிகளே செய்துவிட்டு சிறிலங்கா இராணுவம் செய்ததாக பிரச்சாரம் செய்ததாகவும் தயா மாஸ்ரர் கூறியிருக்கின்றார். இவ்வாறான கொடுமைகளை பாலச்சந்திரன் எவ்வாறு அறிந்திருக்க முடியயும்?

பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்ட எத்தனையோ பேருக்கு பிறந்த குழுந்தைகள் இன்று பெற்றோரை இழந்தவர்களாக பரிதவிக்கின்றனர் என்பதை பாலச்சந்திரன் உணர்ந்திருக்க அவரது வயதுக்கு முதிர்ச்சி கிடையாது.

பிரபாகரனால் அங்கவீனர்களாக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள் பெற்றோர் படுகின்றவேதனைகளை கண்முன்னே கண்டுபடும் அவஸ்தைகளையும் இத்தனைக்கும் தனது தந்தையே காரணம் என்பதையும் பாலச்சந்திரனால் உணர்ந்து கொள்ளவும் அவருக்கு வயது போதாது.

பாலச்சந்திரன் சொகுசாக வாழ்வதற்கு கட்டப்பட்ட மாளிகையையும் அவருக்காக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தையும் அமைப்பதற்காக எத்தனை உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது என்பதையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.

பிரபாகரனின் போலிவேசத்தை உணராமல் ஆயுதப்போராட்டத்தில் இறங்கி நிரந்தர அங்கவீனர்களாக்கப்பட்டவர்களை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வாகனமொன்றில் ஏற்றி குண்டுவைத்து தகர்த்த கொடுமையையும் நேரில் கண்ட மக்கள் இன்றும் வன்னியில் வாழ்கின்றனர். அனால் பாலச்சந்திரனுக்கு இது தெரியாது.

தனது வயதை ஒத்த பாலகர்களை முகாம்களில் அடைத்து வெளியுலகே காட்டாது கொலைவெறி ஏற்றி ஒர் மாற்று இனம் ஒன்றினை சேர்ந்த மனித உயிர்களை வயது வேறுபாடு பால் வேறுபாடு இன்றி படுகொலை செய்தவற்கு ஏவிய படுபாதக செயல்களையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க வாய்பே இல்லை.

வயிற்றில் குழந்தையை அல்லது குழந்தைகளை தாங்கிய பெண்களை அவர்களின் வயிற்றில் குண்டை கட்டி தற்கொலைதாரிகளாக அனுப்பி தாயையும் சேயையும் படுகொலை செய்த கொடுமைகளையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.

தனது கொள்கையை ஏற்க மறுத்தார்கள் என்ற காரணத்திற்காக மனிதர்களை பிடித்து மரத்தை , கொங்கிறீட்டை துழைக்கும்; றில்லர்களால் கால்களில் ஓட்டை போட்டு சங்கிலியில் பிணைத்து இருட்டு அறைகளில் வருடக்கணக்கில் அடைத்து வைத்திருந்த கொடுமைகளையும் பாலச்சந்திரன் அறிந்திருக்க மாட்டார்.

இவ்வாறு பாலச்சந்திரனின் தந்தை மனித குலத்திற்கு செய்த கொடுமைகளை அடுக்கினால் பக்கங்கள் போதாமல் செல்லும். ஆனால் பிரபாகரன் தனது பிள்ளைக்கு ராஜபோக வாழ்க்கை அமைத்து கொடுத்து மாற்றான் பிள்ளைகளை பலி கொடுத்தார். இந்த விடயத்தை புலிகளுக்கான ஆயுதக்கடத்தல் மன்னனும் முன்னாள் பயங்கரவாதியுமான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் டிபிஎஸ் ஜெயராஜூக்கு வழங்கிய பேட்டியில் உறுதி செய்திருந்தார். அப்பேட்டியில் 'நான் ஒவ்வொரு முறையும் ஆயுதக்கப்பல்களை அனுப்புகின்றபோது தலைவரின் மகன் பாலச்சந்திரனுக்கு ஒரு விளையாட்டு பொருளேனும் அனுப்புவேன்' எனத் தெரிவித்திருந்தார். நல்ல விடயம் மாற்றன் பிள்ளைக்கு துப்பாக்கியும் வெடி மருந்தும் தலைவரின் பிள்ளைக்கு வெளிநாட்டு விளையாட்டு பொருள். இதற்கு பெயர்தான் ' புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' எனச் சொல்லப்பட்டது.

பாலச்சந்திரனுக்கு விளையாட்டு பொருட்களை வாங்க பணம் கொடுத்தது யார்? புலம்பெயர் புலிப்பினாமிகள். அவர்கள் என்ன பாலச்சந்திரனின் மீது கொண்ட பாசத்திலா அதை செய்தார்கள்? அல்ல தங்களது வியாபாரம் ஒட, தங்களது பிழைப்பு நிலைக்க அதை செய்தார்கள். அன்று பிரபாகரனை பங்கரில் இருளில் வைத்துக்கொண்டு அவருக்கு சுகபோக வாழ்வை கொடுத்து தங்களது பிழைப்பை நடாத்தினார்கள். ஆனால் இன்று யாவற்றுக்கும் இயற்கை பதிலளித்துள்ளது.

பிரபாகரனையே தங்களது பிழைப்புக்கான விளம்பரமாக பயன்படுத்தி பழகியவர்கள் இன்று பிரபாகரன் இல்லாத கட்டத்தில் விளம்பரமாக பிரபாகரனின் மகனின் இப்படத்தினை தூக்கியுள்ளனர். அதற்கு காரணம் பாலச்சந்திரன் மீதுள்ள பாசம் ஒன்றும் கிடையாது. தமிழரை ஏமாற்றுவதானால் இதுவே ஒரு சாதனம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இன்று மக்கள் தெளிவாக உள்ளனர். பாலச்சந்திரன் போன்று எத்தனையோ பாலகர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் இது புலி எச்சசொச்சங்களின் கைலாகத்தனம் என்பதையும் அவர்கள் நன்கு விளங்கிக்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட படம் தொடர்பில் கருத்து தெருவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறான படங்கள் தமக்கு புதியவை அல்ல எனவும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட எத்தனையோ படங்களை தாம் கண்டே வந்துள்ளோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்த பின்னர் சந்பந்தப்பட்ட தரப்பினர் அதன் உண்மைத் தன்னையை நிருபிக்கட்டும் என விட்டு விடுவோம்.

ஆனால் இது வெளியிடப்பட்டதன் பின்னணி பற்றிய சில உண்மைகளை மக்கள் அறிந்து விடவேண்டும். அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை கொண்டு வருகின்றது. இப்பிரேரணை தமிழ் மக்களுக்கு என்ன பயனைத் தரப்போகின்றது என்ற கேள்விக்கு பதிலே கிடையாது. இலங்கையுடன் சீனா ஓர் சிறந்த ராஜதந்திர உறவை பேணுகின்றது. இந்த உறவை கண்டு அமெரிக்கா மிரண்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு போர்குற்றம் என்ற மிரட்டல் ஒன்றை கையிலெடுத்து இலங்கையை தனது காலடியில் விழவைக்க முடியும் என கருதுகின்றது.

இவ்விடயத்தில் இந்தியா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலை செய்து கொண்டிருக்கின்றது. ஆசியாவில் இந்தியா அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்பது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல. பாலசந்திரனின் படம் வெளியானபோது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியதுடன் தனது சந்தேகங்களை வெளிப்படையாக முன்வைத்தார். ஆனால் இந்திய பிரதமர் இதே படங்களை ஆதாரமாக கொண்டு முன்வைக்கப்படுகின்ற போர்க்குற்றத்திற்கு ஆதரவளிப்போம் என்கின்றார். இந்த இரட்டை வேடம் ஒன்றேபோது, போர்க்குற்றம் எனக் கோஷமிடுகின்றவர்களின் போலி வேஷங்களை உணர்ந்து கொள்ள.

மேலும் அமெரிக்கா கொண்டு வருகின்ற பிரேரணையில் இலங்கை அரசு தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை விரைவில் ஏற்படுத்தவேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றது. அமெரிக்காவின் இந்த அழுத்தமும் அமெரிக்காவின் பிரேரணைக்கு பக்கவாத்தியாமாக வெளியாகியிருக்கின்ற படங்களும் இன்னும் வெளியிடப்போகின்றோம் என விடுக்கப்படுகின்ற மிரட்டல்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. இலங்கையிலே நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என விரும்புகின்ற சக்திகள் மக்கள் மனதில் வேதனையை தரக்கூடிய இச்செயற்பாடுகளை மீண்டும் ஞாபகமூட்டுவதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கின்றார்களா?

எது எவ்வாறாயினும் குறித்த சிறுவன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் இக்குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்தற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும். இக்கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது இந்தபடங்களை குறித்த ஊடகத்திற்கு வழங்கியவர்கட்கே தெரியும். இப்படங்கள் உண்மையானவையாயின் இப்படங்களை குறித்த ஊடகங்களுக்கு வழங்கியவர்களிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.

எனவே இப்படங்களை வெளியிட்ட ஊடகங்கள் இப்படங்கள் பொய்யானவை அல்லவென்றால் தமக்கு யாரிடமிருந்து இப்படங்கள் வந்ததென்பதையும் வெளியிடுவதுடன் அவர்களை இலங்கை அரசு இனம்காண்பதற்கு உதவவேண்டும். இவ்விடயம் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை. இதில் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கையின் குற்றவியல் சட்டதிட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என நிருபிக்கப்படும் பட்சத்தில் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.

எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமாயின் இப்படங்களை வெளியிட்டவர்கள் இப்படங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு படத்தினை வழங்கிய சக்திகளை இனம்காட்டவேண்டும்;. அவ்வாறு இனம்காட்டாதவிடத்து படங்கள் பொய் என்பது மாத்திரமல்ல படத்தினை வழங்கியோர் தமது சுயலாபங்களுக்காக இவ்வாறான திட்டமிட்ட செயல்களில் இறங்கியுள்ளனர் என்ற என்ற இலங்கை அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com