நிசப்த நோய் காது மந்தமாதல்
ஆரவாரத்துடன் உடலுக்கு வேதனையுடன் வரும் நோய்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏதும் இல்லை. ஏனெனில் வேதனையைத் தாங்க முடியாத நோயாளி உடனடியாகவே மருத்துவரை நாடுவார். வேதனைக்கான அடிப்படை நோயை மருத்துவர் துரிதாக இனம் காணுவார். குணமாக்குவது சுலபம்.ஆனால் உடலுக்கு வேதனை கொடுக்காது அசுமிசமின்றி வரும் நோய்களைப் பற்றி நோயாளிகள் அக்கறை எடுப்பதில்லை. நோய் படிப்படியாக முற்றி, பிரச்சனை பூதாகரமாகும் நேரத்தில்தான் மருத்துவரை நாடுவார்கள். காலம் கடந்ததால் மருத்துவத்தின் மூலம் பூரணை பலனை பெறுவது சிக்கலாகியிருக்கும்.
காது மந்தமாதல் ஏன்?
அப்படியான நோய்களில் ஒன்றுதான் காது மந்தமாதல். வயசு போனால் காது மந்தமாகும்தானே எனக் கிணடலடித்து அசட்டை பண்ணாதீர்கள். அந்த வரிசையில் நிற்பவர்களில் நீங்களும் ஒருவராயிருக்கலாம்.
ஏனெனில் காது மந்தமாவதது மூப்படைவதால் மட்டுமல்ல எந்த வயதிலும் நேரலாம்.
காது கேட்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
வயதாவது முக்கிய காரணம் என்பதை அறிவோம்.
அத்துடன் பரம்பரை அம்சம்,
ஒலிகள்,
வைரஸ் தொற்று நோய்கள்,
ஏன் பல மருந்துகளும் கூடத்தான்.
ஆனால் அண்மைகாலங்களில் கவனத்தை ஈர்த்திருப்பது நீரிழிவு நோயாளிகளின் காது மந்தமாவது எனலாம்.
நீரிழிவும் காது மந்தமாதலும்
நீரிழிவு நோய் என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது என்ன? கால் புண்கள் மற்றும் பார்வை இழப்புத்தானே. அதனால்தான் கால்களைப் பராமரிப்பது பற்றியும், கண் மருத்துவரை வருடம் ஒரு முறையாவது கலந்தாலோசிப்பது பற்றியும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஆனால் காது டாக்டரைப் பாருங்கள் என நீரிழிவு நோயாளர்களுக்கு எங்கும் ஆலோசனை வழங்கப்படுவதில்லை. இப்பொழுது அதற்கான காலம் வந்துவிட்டது.
வயதாகும்போது காது மந்தமாவதானது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏனையவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் என அண்மையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அது மட்டுமல்ல நீரழிவின் ஆரம்ப நிலையில் (Prediabetics) இருப்பவர்களும் கூட சாதாரணமானவர்களை விட 30 சதவிகிதம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என அமெரிக்காவின் National Institute of Health (NIH) கூறுகிறது.
Quick Statistics on Deafness
இதற்கு முன்னரும் ஒரு சில ஆய்வுகள் இப் பிரச்சனையைக் கோடி காட்டினாலும் நீரிழிவிற்கும் காது மந்தமாதலுக்கும் இடையேயான தொடர்பு தெளிவாகக் கண்டறியப் படயவில்லை. பாதிப்பு எங்கே எற்படுகிறது. எவ்வளவு எவ்வாறு ஏற்படுகிறது எனப் பல கேள்விகள் விடை காணப்படமால் இருந்தன.
அதற்குக் காரணம் என்ன?
முக்கிய காரணமானது ஒலியை உண்மையாகக் கேட்கும் உறுப்பை நேரடியாகப் பரிசோதிப்பது முடியாத காரியமாக இருக்கிறது. நாம் சாதரணமாகக் காணும் வெளிக்காது அல்லது அது முடிவடையும் இடத்திலுள்ள செவிப்பறையோ அல்ல எமது உடலின் காது கேட்கும் உறுப்பு. அதற்கு உள்ளே உள்காதினுள் இருக்கும் மிகச் சிறிய உறுப்பான கொக்கிளியா cochlea தான் அந்த உறுப்பு.
சப்தமாக வரும் ஒலி ஆற்றலை, நரம்புகளால் கடத்தப்படக் கூடிய உணர்வுகளாக மாற்றுவது இந்தக் கொக்கிளயாதான்.
அது மிகச் சிறியதாக இருப்பதாலும் கடினமான எலும்புகளால் சூழப்பட்டிருப்பதாலும், பரிசோதிக்க முனைந்தால் அதனது நுண்ணிய கட்டடைப்பு சிதைந்துவிடும். இதனால் ஆய்வாளர்கள், மனிதனுக்குப் பதிலாக மிருகங்களின் காதுகளை உபயோகித்து காதுகளின் செயற்படும் முறையையும், அது நோய்களால் எவ்வாறு பாதிப்படைகிறது என்று கண்டுபிடிக்க முனைந்தார்கள்.
ஆனால் அது போதுமானதாக இருக்கவில்லை. இதனால் உயிரற்ற சடலங்களின் காதுகளை ஆராய நேர்ந்தது. அதன்போது நுண்ணிய இரத்தக் குழாய்கள் பாதிப்புறுவதாலேயே காது கேட்கும் தன்மை நீரிழிவு நோயாளரில் ஏற்படுகிறது என்பது தெரிய வந்தது. நீரிழிவு நோயின்போது சிறுநீரகம் பாதிப்புறுவது, கண்பார்வை மங்குதல், போன்ற ஏனைய பல பிரச்சனைகளும் அவ்வாறே இரத்தக் குழாய்கள் பாதிப்புறவதாலேயே நிகழ்வது ஏற்கனவே அறிந்த விடயமே.
காதுக்குடுமி
நீரிழிவு நோயாளருக்கு காதுகளில் காதுக்குடுமி அதிகம் சேர்வதாலும் காது கேட்பதில் சிறிய பாதிப்பு ஏற்படும். இது கொக்கிளியா பாதிப்புறுவதுபோல கடுமையான பாதிப்பு அல்ல. ஒலியானது செவிப்பறையை அடைவதைக் காதுக்குடுமி தடுப்பதாலேயே ஏற்படுகிறது.
காதுக்குடுமி காதுகளை அடைப்பது எவரிலும் நேரலாம் என்ற போதும் நீரிழிவாளர்களில் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இதற்குக் காரணம் அவர்களது சருமத்தில் உள்ள கெரடின் என்ற பொருளின் குறைபாடுதான்.
காது பற்றி நீங்கள் அக்கறை எடுக்க வேண்டியது ஏன்?
நீங்கள் வயதில் குறைந்தவராக இருக்கலாம், நீரிழிவின் பாதிப்பு உங்களுக்கு இல்லாதிருக்கலாம். ஆயினும் காது பற்றிய அக்கறை உங்களுக்கும் அவசியம்தான். உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அவசியமே.
ஏனெனில் காது மந்தமடைவது 5 சதவிகிதமானவர்களுக்கு 17 வயதிற்கு முன்னரே ஏற்பட்டிருப்பது கள ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது. அதேபோல 18-44 வயதினரிடையே 23சதவிகிதமும், 45-64 வயதினரிடையே 29சதவிகிதமும், 65 வயதிற்கு மேற்பட்டோரில் 43சதவிகிதமும் இருந்தது.
என்ன செய்ய வேண்டும்?
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் காது மந்தமாவதைத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் முடியும்
நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்பதால் அவர்கள் வருடம் ஒரு முறையாவது காதுகேட்புப் பரிசோதனைக்கு செல்வது அவசியம்.
ஏனையவர்கள் என்ன செய்ய வேண்டும்?
காது மந்தமாதல் பொதுவாக படிப்படியாக தீவிரம் அடையும் நோய் என்பதால் தாமே கண்டறிவது கவனம். பொதுவாக நண்பர்கள் அல்லது உறவினர்கள்தான் அதை முதலில் கவனிப்பார்கள். எனவே அவர்கள் யாராவது உங்கள் செவித்திறன் பற்றிக் குறிப்பிட்டால் உங்களை ஏளனம் செய்வதாக மனம் சோராது அக்கறை எடுங்கள். காதுப் பரிசோதனைக்குச் செல்லத் தயங்காதீர்கள்.
உங்களை அவதானியுங்கள்
நீங்களாகவே அவதானித்தும் உங்கள் குறைபாட்டைக் கண்டறிய முடியும்.
மற்றவர்கள் பேசுவது புரியவில்லை என்பதால் என்ன சொன்னார்கள் என்பதைத் திரும்பக் கேட்கும் நிலை அடிக்கடி வருகிறதா?
பலர் கூடியிருந்து பேசும்போது அந்த உரையாடலை புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கிறதா?
பஸ்நிலையம், உணவகம், போன்ற சந்தடி மிக்க இடங்களில் மற்றவர்களுடன் உரையாடுவது சிரமமாக இருக்கிறதா?
மற்றவர்கள் முணுப்பாகப் பேசுகிறார்கள் என்ற எண்ணம் வருகிறதா?
பெண்கள் குழந்தைகள் சொல்வதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறதா?
இவற்றில் பெரும்பாலனவற்றிற்கு ஆம் எனில் நீங்கள் காது மருத்துவரைக் காண்பதும், காதுப் பரிசோதனைக்குச் செல்வதற்குமான காலம் வந்துவிட்டது என்றே அர்த்தப்படுத்தலாம்.
0 comments :
Post a Comment