காலம் கடந்து விட்டது புதியதுக்கு மாறலாம்
யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நம்மை மாற்றிக்கொள்ளா தவரை நமக்குத் தீர்வோ நல்வாழ்வோ வந்துசேருவதற்கு வழிதிறக்கப் போவதில்லை என்பதை இப்போது பலரும் உணர்கிறார்கள். ஆனால், யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுதல் என்றால் என்ன? நம்மை மாற்றிக் கொள்ளுதல் என்றால் என்ன? அது எவ்வாறு?
முதலில், அதே பழைய நம்பிக்கைகளையும் அதே பழைய பிடிவாதங்களையும் அதே பழைய கனவுகளையும் அதே பழைய அணுகுமுறைகளையும் வைத்துக்கொண்டிருந்தால் அதே பழைய அழிவுகளுக்குத்தான் சமூகத்தைக் கொண்டு செல்ல முனைகிறோம் என்பதையாவது புரிந்துகொள்கிறோமா?
நமது அதே பழைய எல்லாவற்றையும்தான் அழிந்து முடியட்டும் என்று சர்வதேசம் வேடிக்கை பார்த்தது அதன் அழிவில் இங்கு புதிய ஒன்றை எதிர்பார்த்துத்தான் அழிக்க உதவியும் செய்தது. உதவியதற்கு எதிர்பார்த்த பிரதியுபகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல்தான் அவர்களது பிரச்சினையே தவிர, அதே பழைய நம் வல்லடி நியாயங்களையே ஏற்றுக்கொண்டு உதவ சர்வதேசத்திலிருந்து யாரோ வரப் போகிறார்கள் என்று ஏமாற் றுவதும், ஏமாறுவதும் நம் அரசியல் முட்டாள்த்தனம் அல்லாமல் வேறென்ன?
நம் பழைய மனநிலைகளிலிருந்து நாம் மாறாமல், புதிய சூழ்நிலைகளை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒட்டுமொத்தமான நம் சமூகத்தின் மனநிலை எப்படியெப்படி எல்லாம் இருந்தது என்று பார்த்தால்...
அச்சம், ஒருவரையொருவர் நம்பமுடியாத சந்தேகம், தேசியம் சார்ந்த சுயநலத்தோடு எதிரிகளை உருவாக்கியபடி பொங்கும் ஆவேசம், மக்களை வேறுபடுத்தி துரோகிகளாக விலக்குதல், நமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள மற்றவர்களை அழித்து விடலாம் என்னும் மனநிலை, ஆயுத அதிகாரத்திலும் அதன் வழியாக கிடைத்த மிச்சங்களிலும் நம்மில் பலர்கண்டு கொண்டருசியால் தொடர் போருக்காக எதிரியை தொடர்ந்து கட்டமைத்தும் பெருப்பித்தும் வந்தமை, நம் சுயநலம் ரோசம் பெருமிதம் பழி யுணர்ச்சி போன்றவற்றுக்காக மக்கள் பலியாகுவதைத் தடுக்க விரும்பாத குரூரம், மற்றவர்களெல்லோரையும் நமக்குக் கீழ் நிலையாகவே பார்த்து ஊறிப்போன இனமேன்மைவாதம், அத னால் சேர்ந்து வாழ்வதற்குரிய இணக்கத்தை அடைவதில் ஒவ்வா மையும் ஆதிக்க மனமும்.... இவ்வாறு வேண்டாத, நம் சமூகத்தை வீண் அழிவுகளுக்குள் தள்ளிய பலப்பல மனநிலைகளுடனேயே நாமிருந்திருக்கிறோம்.
இவற்றுக்கு மேலாக சுய இரக்கத்தையும் வளர்த்து, எல்லோரையும் விட அதிகம் துன்பம் சுமப்பவர்கள் நாமே என்கிற வீறாப்புடன் மற்றவர்களுக்கு நாமிழைத்த துன்பங்களையும் ஆய்க்கினைகளையும் கண்டுகொள்ளாதிருக்கப் பழகினோம். மற்றவர்கள் கஷ்டங்களை உணர்ந்துகொள்ளும் எந்த முனைப்பு மற்று நம் கஷ்டங்களையே எல்லோரும் கேட்டிருக்க வேண்டும் என்கிற அனுதாபச் சுரண்டல் மனநிலையும் நமக்கிருந்தது.
நமது பயங்கரவாதத்தையும் குரூரத்தையும் கொலைகளை யும் கண்டுகொள்ளாமல் எல்லாவற்றையும் மறைத்து நாம் பெருங்குரலெடுத்து அழுதால் உலகம் நம்பி எதிரியைக் கண்டிக்கும் என்கிற சிறுபிள்ளைத்தனப் பிரசாரகர்களே நம் சமூகத்தின் குரலாக இருந்தார்கள்.
நம்மை நாமே பொய்களாலும் புனைவுகளாலும் ஏமாற்றிக் கொண்டு, சர்வதேசத்திற்கு உண்மை விளங்கவில்லை என சத்தம் போட்டு நம் பாமரத்தனத்தையும் படுமுட்டாள்த்தனத்தையுமே பகிரங்கப்படுத்தினோம்.
இதற்குமேலும் சமூகத்தை அழித்துமுடித்து விடாதவாறான வழிமுறைகளைக் கண்டுகொள்ள நாம் முனைய வேண்டும். பழையபடியும் முட்டாள்த்தனமான வெற்று ரோச முழக்கங்களுக் குள் நாம் ஏமாந்துவிடக் கூடாது. இன்னொரு வன்முறைச் சுழலைத் தாங்கும் சக்தி நம் சமூகத்துக்கில்லை என்பதை ஆவேசப் பேச்சுக்காரர்களுக்கு நாம் எடுத்துச்சொல்ல வேண்டும்.
...............................
0 comments :
Post a Comment