உலகின் அண்மைய 680 காற்பந்து போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதி !!
கடந்த வருடம் நடைபெற்ற அதிகமான ஐரோப்பிய காற்பந்து போட்டிகளில் பாரிய ஆட்ட நிர்ணய சூதாட்டம் இடம்பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வந்த உலக கோப்பை மற்றும் யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்று போட்டிகள், இரண்டு சாம்பியன் லீக் போட்டிகள் என மொத்தம், 380 கால்பந்து போட்டிகளிலும், ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற 300 போட்டிகளிலும் மேட்ச் ஃபிக்ஸிங் நடைபெற்றிருப்பதாகவும், சிங்கப்பூரை மையமாக கொண்ட ஒரு கிரிமினல் குழுவுக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றிய காவல்துறையான Europol தெரிவித்துள்ளது. இதில் லிவர்பூல் உள்ளிட்ட முன்னணி காற்பந்து கிளப் அணிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சுமார் $10.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அனைத்து மேட்ச் ஃபிக்ஸிங்கிலும் வருமானம் கிடைத்திருப்பதாகவும் இதற்காக குறித்த சிங்கப்பூர் கிரிமினல் குழு ஒவ்வொரு போட்டியிலும் சுமார் $136,500 வரை வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் Europol குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் நடந்த போட்டிகளிலேயே அதிகமாக இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் உலகில் முதன்முறையாக இவ்வாறு பல காற்பந்து போட்டிகளில் தொடர்ச்சியாக சதி நிர்ணய ஆட்டம் இடம்பெற்றிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், இது காற்பந்து உலகத்திற்கு ஒரு சோகமான தருணம் எனவும் தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
0 comments :
Post a Comment