Monday, February 4, 2013

மழையில் நனைந்தபடி 65 சுதந்திரதினத்தை கொண்டாடிய ஜனாதிபதி(படங்கள் இணைப்பு)

திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இலங்கையின் 65 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கடும்மழை காரணமாக சுமார் ஒரு மணித்தியால தாமதத்தின் பின்னரே ஆரம்பமாகிய போதும் வழமையாக சுதந்திர தின நிகழ்வுகளின் போது நடைபெறும் விமானப் படையினரின் வான் சாகசங்களும் கடற்படை படகுகளின் அணி வகுப்புகளும் கடும் மழைகாரணமாக நடைபெறவில்லை.

சுதந்திரதின நிகழ்வுகள் திருகோணமலை பிரட்ரிக் கோட்டை மைதானத்தில் இன்று காலை 8 மணிக்கு அதிதிகளின் வருகையுடன் ஆரம்பமாகவிருந்தபோதிலும் திருகோணமலை பழரதேசத்தில் பெய்த கடும்மழை காரணமாக காலை 9 மணியளவிலேயே அதிதிகளின் வருகை ஆரம்பமாகி இறுதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

ஜநாதிபதி வரும் போது மழை சற்றுத் தணிந்திருந்தது இந்த நேரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றிவைக்க பாடசாலை மாணவர்கள் தேசிய கீதம் இசைக்க மரியாதை செலுத்திக் கொண்டிருந்த போது திடீரென மீண்டும் மழை பெய்ய ஆரம்பிக்க ஜனாதிபதி மழையில் நனைந்த படியே தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் ஜனாதிபதிக்கு குடை பிடிக்கப்பட்டபோதும் தேசிய கீதம் இசைத்த மாணவர்கள் மழையில் தொடர்ந்து நனைந்தபடியே தேசியகீதத்தை பாடி முடித்தனர்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் ஜனாதிபதியன் உரை நிறைவு பெறும் போது மழையும் நறைவு பெற்றது.

அதுமட்டுமல்ல இன்றைய சுதந்திர தின நிகழ்வுகளின் போது இராணுவம் , கடற்படை , விமானப் படை , சிவில் பாதுகாப்பு, படை மற்றும் பொலிஸ் ஆகியவற்றின் வீரர்களது அணிவகுப்பும் , கலாசார நிகழ்வுகளும் மட்டுமே நடைபெற்றன. வழமையாக சுதந்திர தின நிகழ்வுகளில் நடைபெறுவதைப் போல் இராணுவத்தினரின் கனரக ஆயுத வாகனங்களின் அணி வகுப்பு, விமானப் படையினரின் வான் சாகசங்கள், கடற்படை படகுகளின் அணிவகுப்பு போன்ற நிகழ்வுகள் இன்றைய வைபவத்தில் இருக்கவில்லை.

கொட்டு மழை கொட்டினாலும் பெருந்தொகையான மக்கள் சுதந்திரதின நிகழ்வுகளைப் பார்வையிட வந்திருந்ததுடன் நிகழ்வின் இறுதியில் ஜனாதிபதி மக்களைச் சென்று சந்தித்ததுடன் பிரதமர் , சபா நாயகர், அமைச்சர்கள் , ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் , வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பல தரப்பட்டோரும் இன்றைய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டதுடன் எதிர்கட்சிகளை சேர்ந்த எவரும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com