தாய் நாட்டின் 65வது சுதந்திர தினத்திற்காக விழாக்கோலம் பூண்டது திருகோணமலை
நாட்டின் 65ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் திருகோணமலை நகரில் நாளை திங்கட்கிழமை நடத்துவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 'எழில்மிகு தாய் நாடு: சௌபாக்கிமான நாளை நாள்' எனும் தொனிப்பொருளில் பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாகவுள்ள கடற்கரையோரத்தில் சுதந்திர தின வைபவங்கள் நடைபெறவுள்ளன.
1953ஆம் ஆண்டுக்கு பின்னர் திருமலையில் இரண்டாவது முறையாக சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் நடத்தப்படவிருக்கின்றது.
30 வருடகால யுத்தம் நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் நடத்தப்படுவதால் திருகோணமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
நகர் முழுவதும் தேசியக் கொடிகளாலும் வர்ணக்கொடிகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.திருகோணமலையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கென 4,000 பொலிஸாரும் முப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை சுதந்திரதின அணிவகுப்பில் இலங்கை தரைப்படையைச் சேர்ந்த 1500 படையினரும், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸைச் சேர்ந்த தலா 500பேரும் சிவில் பாதுகாப்பு படையினர் 300 பேரும், இளைஞர் படையினர் 300 பேரும், தேசிய மாணவர் படையைச்சேர்ந்த 325 பேரும் பங்கேற்கவுள்ளார்.
இச்சுதந்திர தின கொண்டாட்டத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட 2500 க்கும் மேற்பட்ட சிறப்பு அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் கொழும்புக்கு வெளியே கண்டி,கதிர்காமம் மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் சுதந்திர தினத்திற்கான தேசிய வைபவம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment