T.N.A யின் வசனங்களுக்கு மயங்கிய காலம் போய்விட்டது!
மிகவிரைவில் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளது. இதற்கு சர்வதேசமும் உறுதுணையாக இருக்கும் என்று திடீரென முழக்கமொன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள். தமிழர்களின் போராட்டத்தில் புது வியூகம் அமைக்கப்படவிருப்பதாகவும் களுவாஞ்சிக்குடி கூட்டத்தில் பேசும்போது அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் வைத்திருந்த பழைய வியூகம் என்ன? அது ஏன் சரி வராமற் போயிற்று? இந்தத் தீர்க்கமான புதுவியூகம் என்ன? இதை எப்படிச் சாத்தியப்படுத்தப் போகிறார்கள்? அந்தத் திட்டம் என்ன? என்ற கேள்விகளுக்கு வழக்கம்போல அவரது முழக்கத்திலிருந்து எந்த பதிலையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவர்கள் திட்டத்தையே வெளியே சொல்லாமல் மர்மமாக வைத் திருந்தால் சர்வதேசம் எதற்கென்றுதான் உறுதுணையாக வருவது? தலைவர் திட்டம் வைத்திருக்கிறார் என்ற மாயையையே இன்னமும் மக்களிடம் விளாசிக் கொண்டிருக்கலாம் என தமிழரசுக் கட்சியும், தமிழரசுக் கட்சிப் பத்திரிகையும் எப்படி நம்புகின்றன?
இனித்தான் இவர்களது தீர்க்கமான வியூகத்திற்கு சர்வதேசம் உறுதுணையாக வரப்போகிறது என்றால், கிழக்குத் தேர்தல் முடிந்தவுடன் வந்திறங்கப் போவதாகச் சொன்ன சர்வதேசம் எங்கே போய் விட்டது? அந்த வியூகம்தான் என்ன அவ்வளவு ராணுவ ரகசியமா? அதையெல்லாம் பாவப்பட்ட இந்த மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாதா? ஆபிரிக்கா போய்விட்டு வரும்போது சர்வதேசத்தையும் கூட்டிவந்துவிடப் போகிறார்களா என்ன?
இங்கு தீர்வைக் கொண்டுவருவதற்கு என்ன திட்டம் என்றால், சர்வதேசத்தைக் கொண்டுவருவதுதான் அந்தத் திட்டம் என்கிறார்கள். சரி, சர்வதேசத்தைக் கொண்டுவர உங்கள் திட்டம் என்ன என்றால், தமிழர்களின் போராட்டம் விரிவடைந்து வருகிறது அதைப் பார்த்து சர்வதேசம் வந்துவிடும் என்கிறார்கள். என்ன போராட்டம் விரிவடைந்து வருகிறது? 37 பேர் ஒரு பகல்பொழுதில் உண்ணா விரதமிருந்துவிட்டு எழும்பிப் போனதா?
அல்லது ஆபாசப் படங்களும் சீடிக்களும் வைத்திருந்ததாகக் கைதாகி சிறைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்களே அந்தப் போராட்டத்தைச் சொல்கிறார்களா? அல்லது பல்கலைக்கழக மாணவர்களின் படிப்பைப் பாழாக்கிவிட்டு, வீரவசனங்களோடு அவர்களது எதிர்காலத்துக்கு இருள்வழி காட்டிக் கொண்டிருக்கிறார்களே அந்தப் போராட்டத்தைச் சொல்கிறார்களா?
இவர்களெல்லாம், தனிநாடு சாத்தியமில்லை என்பதை எப்போதோ உணர்ந்துகொண்டுவிட்ட பிறகும், இத்தனை உயிரிழப்புகளும் பாழடைவும் பேரவலமும் நோக்கிச் சமூகம் செல்வதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருந்தவர்கள்! அல்லது பொய்யான நம்பிக்கைகளைச் சொல்லி மக்களை மேலும் மரணப்பாதையில் முன் தள்ளி விட்டவர்கள்.
அழிவுகள் அவலங்களைப் பாதியிலேயே தவிர்த்துக்கொள்ளக் கூடிய, தீர்வை எடுத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களொன்றையும் பயன்படுத்த எண்ணாத வீம்பிலும் சமூகத்தை அவலப்பட வைத்திருப்பவர்கள் இவர்கள்தான். இப்போதும், போராட்டம் விரிவடைந்து வருகிறது என்ற புளுகையே கூச்சமெதுவுமில்லாமல் அவிழ்த்து விடுகிறார்கள்.
மக்களைக் காக்கும் எந்த ராஜதந்திர வழிமுறைகளும் இல்லாத வர்களிடம் அல்லது தெரியாதவர்களிடம் தங்களை ஒப்புக்கொடுத்து விட்டு, தடுமாறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை மேலும் மேலும் பொய்களாலும், ஏமாற்றுப் பேச்சுக்களாலும் இலவுகாக்கும் கிளிகளாகவே வைத்திருக்கிறார்கள்.
நம் சமூகம் முதலில் தன்னை - தனது பிழைகளை உணர்ந்து கொள்வதற்கான உரையாடல்களைத் திறக்க வேண்டும். அதிலிருந்து, எமது சமூகத்தின் மீட்சிக்கானயதார்த்த அணுகுமுறைகளுக்குச் செல்ல வேண்டும். உள்ளீடு எதுவுமற்ற இவர்களது வெற்று ஜம்பப் பேச்சுக்களிலிருந்து நமது மக்கள் விடுபட வேண்டும். அல்லாமல் நமக்கு மீட்சி இல்லை.
1 comments :
The TNA has a long history of over 60 years.It was born as Fed party in Colombo and Tamil Kingdom party in North and east.The leader and the team spent most of their time simply talking against the governments also against the Tamil congress party led by late Mr.GG.Their speeches on the stages were south Indian style mostly rhyming and attracted the poor north and east tamils,but for sure they haven't achieved anything.But they enjoyed and enjoy all the benefits,concessions pensions etc etc given by the governments.They annihilated the good relationship between the tamil and singhalese.What we need ultimately a peaceful situation and an unshaky economy living all the communities together with a peaceful atmosphere.
Post a Comment