வாழ்க்கைத்தரங்கள் வீழ்ச்சியடைகையில் பில்லியனர்கள் இலாபமடைகின்றனர்.Patrick Martin
உலகின் மிகப் பெரிய 100 செல்வந்தர்கள் 2012ல் தங்கள் மொத்தச் சொத்துக்களுக்கு இன்னும் 241 பில்லியன் டாலர்களை சேர்த்தனர் என்று ப்ளூம்பேர்க் பில்லியனர்கள் குறியீடு தெரிவிக்கிறது. மிக அதிக செல்வம் படைத்த 100 பேர் டிசம்பர் மாதம் 31ம் திகதியின் உலகப் பங்குச் சந்தைகளில் விலையின்படி கணக்கீடு செய்யும்போது மொத்தம் 1.9 டிரில்லியன் டாலர்கள் நிதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளனர். இது ஒவ்வொருவருக்கும் சராசரி 20 பில்லியன் டாலர்கள் எனக் காட்டுகிறது.
இந்த உயர்மட்ட 100 பேர் ஒரு தனி நாடாக இருந்தால், அவர்களுடைய கூட்டுச் சொத்து எட்டு நாடுகளைத் தவிர மற்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையவிட அதிகமாகும். இவர்கள் பட்டியலில் இத்தாலிக்கு பின் இருப்பார்கள், ஆனால் இந்தியா, ரஷ்யாவைவிட முன்னே இருப்பர். ஆனால் பில்லியனர் முதலாளித்துவத்தினராக இருப்பதால், இந்த உயர்மட்ட 100 பேர் உண்மையில் எதையும் உற்பத்தி செய்வதில்லை.
பெரும் செல்வந்தரகளின் பெருகும் செல்வத்திற்கு முக்கிய உந்துதல் அளிப்பது உலகப் பங்கு விலைகளின் ஏற்றம் ஆகும். உலகம் முழுவதும் இது 13.2% அதிகரித்துள்ளது என்று MSCI World Index குறிக்கிறது. 13.4% அமெரிக்காவில் என்று S&P 500 அளவிட்டுள்ளது. Stoxx Europe 600 குறியீடு ஜூன் மாதத்தில் இருந்து 19.6% அதிகரித்துள்ளது. அப்பொழுது முதலீட்டாளர்கள் கிரேக்கக் கடன் நெருக்கடி யூரோப்பகுதியில் உடனடியான வீழ்ச்சியை ஏற்படுத்தாது என மதிப்பிட்டனர்.
அமெரிக்கா, உயர் 12 பில்லியனர்களில் 9 பேரையும் உயர்மட்ட 100 நபர்களில் 37பேரையும் கொண்டுள்ளது. அமெரிக்க பில்லியர்களின் கூட்டு இருப்பு மொத்தத்தில் பாதியாக உள்ளது. ரஷ்யா உட்பட ஐரோப்பா இதைப் பின் தொடர்ந்து 34 பேரைக் கொண்டுள்ளது. ஆசியாவில் 14 பேரும், இலத்தீன் அமெரிக்காவில் 11 பேரும் உள்ளனர்.
உயர்மட்ட 100 பேரில் மிக அதிகமாக ஆதாயம் அடைந்த ஒற்றை நபர் ஸ்பெயின் நாட்டின் அமானிசியோ ஒர்டேகா ஆவார். 76 வயதான இவர் Inditex SA retailer நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். ஸாரா ஆடைகள் தொடர்கடைகளை நடத்துபவரான இவருடைய செல்வம் 35.3 பில்லியன் டாலர்களில் இருந்து 57.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது அவரை அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பபேயை தாண்டி உலகக் குறியீட்டில் மூன்றாவது இடத்திற்கு உயர்த்திவிட்டது. இதனால் பல ஆண்டுகளாக பட்டியலில் முதல் இரு இடங்களில் இருப்பவர்களான மெக்சிகோவின் வங்கி, தொலைத்தொடர்பு, செய்தி ஊடகப் பேரரசர் கார்லோஸ் ஸ்லிம்மிற்கும், மைக்ரோசாப்ட்டின் பில் கேட்ஸுக்கும் அடுத்தாக பின்னால் வருகிறார்.
ஒர்டேகா கிட்டத்தட்ட 20% பெரிய ஆதாயங்களை ஆண்டில் காட்டிய பில்லியனர்களில் சில்லறை உடைமையாளர்கள் என்ற ஒரு போக்கின் பகுதியாவார். மற்ற சில்லறை வணிகர்களில் IKEA நிறுவனர் உலகின் ஐந்தாம் பெரிய பணக்காரர் 86 வயதான இங்வார் காம்பெட் 42.9 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுடனும், Amazon.com இன் ஜெவ் பெஜோஸ் மற்றும் வால் மார்ட்டின் நிறுவனர் சாம் வால்டனின் நேரடி வாரிசுகள் நான்கு பேர் அடங்குவர்.
2008ம் ஆண்டு வோல் ஸ்ட்ரீட் சரிவிற்குப் பின் நுகர்வோர் செலவுகள் அடிப்படையில் தேக்கம் அடைந்துள்ள நிலையில், இத்தகைய அதிகரிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். சில்லறை வணிக முதலாளிகள் தங்கள் செல்வங்களை விற்பனை உயர்வுகளால் அதிகம் பெற்றுவிடவில்லை. ஏனெனில் அத்துறையில் சிறிய போட்டியாளர்கள் நெருக்கடியினால் அழிந்துவிட்டனர். காரணம் பெருநிறுவனங்களின் ஏகபோக உரிமை இலாபங்கள்தான். உதாரணமாக பெஜோஸ் 2012இல் தன்னுடைய நிகர மதிப்பிற்கு 6.9 பில்லியன் டாலர்ளை சேர்த்தார். இது போட்டி நிறுவனம் Borders உடைய சரிவிற்குப் பின் ஏற்பட்டது. அதுவோ 20,000 வேலைகளைத் தகர்த்துவிட்டது.
பில்லியனர்களின் உயரும் செல்வங்களுக்கும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரச் சரிவுகளுக்கும் இடையே பிளவடைந்து கொண்டுபோவது உலக முதலாளித்துவத்தின் முக்கிய கூறுபாடுகளில் ஒன்றாகும். இத்தகைய வேறுபாடு ஸ்பெயினைவிட வேறு எங்கும் அப்பட்டமாகக் காண்பதற்கில்லை. இங்கு 1600 ஜாரா கடைகளைக் கொண்ட Inditex உடைய நிறுவனரான திரு. ஒர்டேகா தன்னுடைய சொத்துக்களை 2012ம் ஆண்டில் 121.2 பில்லியன் டாலர்கள் அதிகப்படுத்தினார்.
முதலாளித்துவ நெருக்கடி ஸ்பெயினின் தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவைக் கொண்டுவந்துள்ளது. வீட்டுச் சொத்துக்கள் சராசரியாக 8% சரிந்து விட்டன. இது ஐரோப்பிய நாடுகளுள் மந்தநிலையினால் பெரும் அழிவிற்கு உட்பட்டுள்ள கிரேக்கத்திற்கு அடுத்த நிலைதான். பொதுவான வேலையின்மை மற்றும் இளைஞரிடையே வேலையின்மை என்பது முறையே 26.6%, 56.% என்ற உயர்ந்த அளவில் உள்ளது. பிரதம மந்திரி மரியானோ ரஜோய் தலைமையில் இருக்கும் வலதுசாரி அரசாங்கம் பொதுச் செலவுகளில் பாரிய வெட்டுக்களை தொடர்ந்து அறிவித்துள்ளது. இது பொதுக் கல்வி முறையையும் பிற அடிப்படை சேவைகளையும் பேரழிவிற்கு உட்படுத்திவிட்டது.
ஆனால் ஸ்பெயினின் தொழிலாள வர்க்கம் பெருமந்த நிலைக்குப் பின் மிக மோசமான பொருளாதார நிலைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கையில், ஒரு ஸ்பெயினின் பில்லியனர், ரஜோய் அரசாங்கம் அறிவித்துள்ள வெட்டுக்களின் மொத்தத் தொகையைவிடக் கூடுதலான தனிப்பட்ட சொத்துக்களைக் கொண்டுள்ளார். 57.5 பில்லியன் டாலர்கள் என்னும் நிலையில், ஒர்டேகாவின் சொத்து அவரை ஸ்பெயினின் தேசிய வரவு-செலவுத் திட்டத்தை கிட்டத்தட்ட தகர்த்துவிட்ட கடந்த மாதம் ஸ்பெயினின் வங்கிமுறைக்கு வழங்கப்பட்ட பிணையெடுப்பான 52 பில்லியன் டாலர்களைக் கொடுக்க வைத்திருக்க முடியும். அவ்வாறு கொடுத்த பின்னரும் இன்னும் பல பில்லியன்கள் எஞ்சியும் இருக்கும்.
சமீபத்திய மாதங்களில் ஸ்பெயின் பிராங்கோவின் பாசிச ஆட்சிக்காலத்தில் இருந்து கேட்கப்படாத சமூகப் பெரும் சோகங்களின் காட்சிக்கூடமாக இருக்கிறது. வீடுகளை ஏலத்திற்கு விற்றதால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டது, தொழிலாளர்கள் வேலையில்லாத இருப்பது, முதியவர்கள் குப்பைத் தொட்டிகளில் இருந்து உணவைச் சேகரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
மனித உடலில் ஒரு சிறிய எண்ணிக்கை உடைய கலங்கள் மற்றைய கலங்களினதும் மற்றும் உடல் முழுவதினுடைய இழப்பில் வரம்பின்றிப் பெருகி வளர்ச்சி அடைந்தால், மருத்துவ அறிவியலில் இந்நிகழ்விற்கு ஒரு குறிப்பிட்ட பெயரிட்டுள்ளது. இதுதான் புற்றுநோய் என அழைக்கப்படுகிறது. 21ம் நூற்றாண்டு முதலாளித்தவ சமூக அமைப்பில், பெரும் செல்வந்தர்கள் இதே தீய, அழிக்கும் பங்கைத்தான் அடிப்படையில் கொண்டுள்ளனர்.
உடல் நலத்துதுறையில், மனித உயிரை பாதுகாக்க புற்றுநோயை அழிப்பதற்கு பல வகைச் சிகிச்சைகளுக்கு உட்படுத்தி அழித்தல் கையாளப்படுகின்றது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில், பெரும் செல்வந்தர்களின் வளர்ச்சி அனைத்து முன்னேற்றத்திற்கும் ஆதாரம் எனப் புகழப்படுவதுடன், சமூகப் புற்றுநோய் “வேலைகளைத் தோற்றுவிக்கும் அமைப்பு” என போலியாகக் கூறப்பட்டு முழு அரசியல் அமைப்புமுறையும் அதற்கு முன் மண்டியிட்டு நிற்கிறது.
0 comments :
Post a Comment